உலகக் கிரிக்கெட் சாம்பியனாகி வரலாறு படைத்துள்ளயுள்ளது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி. இந்த வெற்றியைப் பலரும் கொண்டாடுவதும், வாழ்த்துகள் தெரிவிப்பதும் பெண்கள் அணியின் முக்கியத்துவத்தை உணர்த்தக்கூடியதாக உள்ளது.
கிரிக்கெட்டை ஜென்டில்மேன் கேம் என்பார்கள். அதாவது, கண்ணியமிக்க ஆண்கள் விளையாடும் ஆட்டம் என்று அர்த்தம். கால்பந்து, டென்னிஸ் உள்ளிட்ட பல விளையாட்டுப் போட்டிகளை அரைக்கால் சட்டை அணிந்துதான் ஆடுகிறார்கள். கிரிக்கெட் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே முழு பேண்ட் அணிந்து விளையாடும் ஆட்டமாகத்தான் உள்ளது. அதற்கு காரணம், இங்கிலாந்து நாட்டின் பிரபுக்கள் கோடைக்காலத்தில் இளம் வெயில் வாங்கும் வகையில் விளையாடுவதற்கும், தங்களிடம் வேலை பார்ப்பவர்களை விளையாட வைத்து சூதாடுவதற்கும் ஏற்றதாக கிரிக்கெட் விளையாட்டையும் அதன் விதிகளையும் உருவாக்கினர். பிரிட்டிஷார் எந்தெந்த நாடுகளில் ஆதிக்கம் செலுத்தினார்களோ அங்கெல்லாம் கிரிக்கெட்டும் தன் ஆதிக்கத்தை செலுத்தியது. அதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு உண்டு.

ஆண்களின் விளையாட்டாக இருந்த கிரிக்கெட்டில் முதல் முறையாக 1975ஆம் ஆண்டு உலகக் கோப்பை நடைபெற்றது. மூன்றாவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி1983ல் நடந்தபோது, கபில்தேவ் தலைமையிலான இந்திய ஆண்கள் அணி இறுதி ஆட்டத்தில் அப்போதைய சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி கோப்பையை வென்று வரலாறு படைத்தது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்கள் ஆடிய களத்தில் இந்தியா தன் வரலாற்று முத்திரையைப் பதித்தது. அதன்பிறகு, 2011ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை வென்று, தோனி தலைமையிலான இந்திய அணி இரண்டாவது முறையாகக் கோப்பையை வென்றது.
பெண்கள் அணியும் தொடர்ந்து பல போட்டிகளில் விளையாடி வந்தது. எனினும், அதன் மீதான கவனம் கிரிக்கெட் ரசிகர்களுக்கே ஏற்படவில்லை. கிரிக்கெட் என்றால் கவாஸ்கர், கபில்தேவ், டென்டுல்கர், கங்குலி,தோனி, கோலி உள்ளிட்டோரோ கொண்டாடப்படக் கூடியவர்களாக இருந்தனர். இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் யார் யார் விளையாடுகிறார்கள் என்பது கூட ஊடகங்களில் பெரிதாக வெளியாகாத நிலையே நீடித்தது. எனினும், பெண்கள் கிரிக்கெட் அணியில் பல சாதனையாளர்கள் இருந்தனர். சர்வதேச அளவிலானப் போட்டிகளில் அவர்கள் தொடர்ந்து பங்கேற்றனர்.

ஆண்கள் கிரிக்கெட் போலவே பெண்கள் கிரிக்கெட்டுக்கும் உலகக் கோப்பை போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதுவரை நடத்தப்பட்டுள்ள 12 உலகக் கோப்பை போட்டிகளில் 7 முறை ஆஸ்திரேலியா பெண்கள் அணி சாம்பியனாகியுள்ளது. அப்படிப்பட்ட வலிமையான அணியை இந்த 2025 உலகப் பெண்கள் கிரிக்கெட் கோப்பை போட்டியில் அரைஇறுதியில் இந்திய பெண்கள் அணி எதிர்கொண்டு வெற்றி பெற்றது. இந்திய வீராங்கனை ஜெமிமாவின் சதம் அதற்கு உறுதுணையாக இருந்தது. இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியுடன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி விளையாடியது. ஷஃபாலி வர்மாவின் 87 ரன்களும், அவர் வீசிய பந்துகளில் விழுந்து இரண்டு விக்கெட்டுகளும் இந்திய அணிக்கு பலத்தைக் கொடுத்தன. அரை சதம் அடித்த தீப்தி சர்மாவின் பந்து வீச்சில் விழுந்த 5 தென்னாப்பிரிக்க ஆட்டக்காரர்கள், 45 ரன்கள் அடித்து முதல் விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்த ஸ்மிரிதி மந்தனா உள்ளிட்டோரின் ஆட்டம் இந்திய அணிக்கு கோப்பையை வென்று தந்துள்ளது. கிரிக்கெட் என்பது ஆண்களுக்கான ஆட்டமல்ல, அனைவருக்குமான ஆட்டம் என இந்திய கிரிக்கெட் ரசிகர்களையும் உணர வைத்துள்ளனர் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியினர்.
இந்திய கிரிக்கெட்டில் சாதி-மதக் கண்ணோட்டம் எப்போதும் ஓங்கியிருக்கும். மாநில அளவிலான ஆதிக்கமும் அரசியலும் கலந்திருக்கும். பெண்கள் அணியில் விளையாடிய ஜெமிமா சிறுபான்மை மதத்தவர் என்பதால் அவர் தந்தை மீதான மதமாற்ற புகார் இவருடைய ஆட்டத்திற்கு தடை ஏற்படுத்தியது. புகார் பொய் என்றான நிலையில், ஜெமிமா இந்திய அணிக்காக ஆடி வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.

பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான அமோல் அனில் முஸும்தார், 1990களில் முதல் தரக் கிரிக்கெட் போட்டியில் மிக சிறப்பாக விளையாடியவர். ரஞ்சி டிராபி உள்ளிட்டவற்றில் சதம் அடித்தவர். புதிய டெண்டுல்கர் என வர்ணிக்கப்பட்டவர். ஆனால், இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு அவருக்கு ஒரு முறைகூட வாய்க்கவில்லை. அவரது சமகால திறமையான கிரிக்கெட் வீரர்களும்கூட இதற்காக வருத்தப்பட்டிருக்கிறார்கள்.
இந்திய கிரிக்கெட்டில் நிலவும் அரசியல் மற்றும் ஆதிக்கத்தைத் தாண்டி அவர் கிரிக்கெட் மீது காட்டிய இடைவிடாத ஆர்வத்தினாலும் முயற்சியினாலும் இந்தியப் பெண்கள் அணியின் பயிற்சியாளராகி, திறமையான அணியை உருவாக்கி, உலகக் கோப்பைப் போட்டியில் மகளிரை மகுடம் சூட வைத்திருக்கிறார்.
