நாட்டின் தலைநகரான டெல்லியில், தேசியக் கொடி ஏற்றப்படும் செங்கோட்டை அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் ஒன்றாம் எண் வாயில் அருகே நவம்பர் 10ந் தேதி ஒரு கார் தீப்பிடித்து வெடித்து சிதறியதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. காருக்குள் இருந்த வெடிகுண்டு வெடித்ததால் இந்தக் கொடூரம் நிகழ்ந்திருக்கும் என முதல்கட்ட தகவல்கள் கிடைத்த நிலையில், 7 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக அங்கு விரைந்து, உயிரிழப்பைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தின.
ஆம்புலன்ஸ்களில் ஏற்றப்பட்டவர்களில் 8 பேர் இறந்த நிலையில் இருந்ததாகவும், 3 பேர் கவலைக்கிடமான நிலையில் இருந்ததாகவும், காயம்பட்டதாகவும் சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும் லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் இப்படிப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களை நடத்துவது கோழைத்தனமானது. இதில் உள்நாட்டுக் கைகள் இருந்தாலும், வெளிநாட்டு சதிகள் இருந்தாலும் அதனைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமாகும். பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் இடங்களில், இது போன்ற கொடூரங்களை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவது மட்டுமே முதன்மை நோக்கமாக இருப்பதால், உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்களா என்ற சந்தேகம் இயல்பானதே.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் இந்திய ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின்போது, அந்த இடத்தில் எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்கிற குற்றச்சாட்டைப் புறந்தள்ளி, அதனை தேர்தல் அரசியலுக்கான வாக்கு சேகரிப்பாக பிரதமர் மோடியும் அவரது கட்சியினரும் பயன்படுத்திக் கொண்டனர். தற்போது பீஹார் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடப்பதற்கு முதல் நாள் டெல்லியின் முக்கிய பகுதியில் கார் வெடி விபத்து ஏற்பட்டு, அப்பாவி உயிர்கள் பலியாகியிருப்பதால், இதுவும் தேர்தல் கள அரசியல் லாபத்திற்கான செயலாக மாற்றப்படுமோ என்பதே டெல்லிக்கு வெளியே இருந்த பலரின் மனதில் எழுந்த கேள்வியாக இருந்தது.
பா.ஜ.க எப்போதுமே உயிர்ப்பலிகளின் மீது சிம்மாசனத்தை கட்டியமைக்கும் அரசியலையே மேற்கொண்டு வருகிறது. 1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிப்பு, அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடந்த கலவரங்கள், மும்பையில் ஏற்பட்ட தொடர் குண்டு வெடிப்பு, 1998ல் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு, 2002ல் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு கொடூரமும், அதைத் தொடர்ந்து முஸ்லிம்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இனஅழிப்பும் எனத் தொடர்ச்சியாகப் பலவற்றை அந்தக் கட்சி தனது அரசியல் இலாபத்திற்காக மாற்றிக்கொண்ட தேர்தல் நேர நிகழ்வுகள் நிறைய உண்டு.
2022ஆம் ஆண்டு கோவையில் ஒரு கோயில் அருகே காருக்குள் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் காருக்குள் இருந்த மனித வெடிகுண்டு ஜமீஷா முபீன் என்பவர் கொல்லப்பட்டார். பொதுமக்களுக்கு எந்த பாதிப்புமில்லை. இது தொடர்பாக தேசிய புலனாய்வு நிறுவனமான என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்தது. அப்போது கோவை பா.ஜ.க.வினர் தொடங்கி, தமிழ்நாட்டின் பா.ஜ.க. தலைவர், அகில இந்திய பா.ஜ.க. தலைவர்கள் வரை, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்றும், தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகரித்துவிட்டது என்றும், புலனாய்வுத் துறையினர் முபீன் பற்றி கொடுத்த தகவல்களை தி.மு.க அரசு அலட்சியப்படுத்திவிட்டது என்றும் குற்றம்சாட்டினர்.
தற்போது கார் வெடிகுண்டு விபத்து நடந்து அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கும் டெல்லியில் நடப்பது பா.ஜ.க. ஆட்சிதான். டெல்லியின் பாதுகாப்பு நடவடிக்கைகளை எப்போதும் மத்திய அரசுதான் கவனிக்கிறது. மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவின் நேரடிக் கட்டுப்பாட்டில்தான் டெல்லியின் பாதுகாப்பு உள்ளது. மத்தியிலும் மாநிலத்திலும் பா.ஜ.க. அரசு அமைந்தால் அது டபுள் இன்ஜின் சர்க்கார் என்றும், அப்படி அமையும் மாநிலங்கள்தான் வளர்ச்சி பெறுகின்றன என்றும் மோடியும் அமித்ஷாவும் ஒவ்வொரு மாநிலத் தேர்தல்களின்போதும் பிரச்சாரம் செய்து வந்தனர்.
டபுள்-இன்ஜின் சர்க்கார் நடைபெறும் டெல்லியில்தான் கொடூர கார்வெடிகுண்டு வெடித்துள்ளது. பாதுகாப்பை நேரடியாக ஏற்க வேண்டிய பொறுப்பில் உள்ள பா.ஜ.க., மக்கள் நலனில் அக்கறை கொண்டு பொறுப்பேற்குமா? வழக்கம்போல மற்ற காரணிகள் மீது பழியைப் போட்டுத் தப்பிக்கும் அரசியலை செய்யுமா?
