
மக்களுக்கு என்ன செய்வோம், மத்திய அரசிடம் எவற்றை வலியுறுத்துவோம் என்பதை தேர்தல் அறிக்கையாக முன்வைத்து அதனடிப்படையில் தேர்தலை சந்திப்பது என்பது தி.மு.க. முதன்முதலில் தேர்தல் களத்தில் போட்டியிட்ட 1957ஆம் ஆண்டு முதல் தொடர்கிறது. அப்போது அண்ணா இருந்தார். தொலைநோக்குப் பார்வையுடன் அவர் உருவாக்கிய தேர்தல் அறிக்கையில் இலங்கை, பர்மா, மலேயா உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலன் காக்க இந்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்பது உள்பட பலவும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தன. அண்ணாவுக்குப் பிறகு கலைஞர் மு.க.ருணாநிதி தலைமையில் தி.மு.க. இயங்கியபோது மத்திய-மாநில அரசுகளுக்கிடையிலான உறவுகள்-அதிகாரப் பகிர்வு ஆகியவற்றை முன்வைத்து தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டன.

1977ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அதன்பிறகு 2021 சட்டமன்றத் தேர்தல் வரை தமிழ்நாட்டின் அரசியல் களம் என்பது தி.மு.கவுக்கும் அ.தி.மு.க.வுக்குமான கால்பந்து போட்டியாகவே இருந்து வந்துள்ளது. பந்து எந்த அணியின் காலுக்கு கிடைக்கிறதோ அந்த அணி லாவகமாக கோல் போடுகிற வகையில், வாக்குறுதிகளை வழங்குவது தொடர்ந்தது. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெளியிட்ட அறிக்கையில் இலவச கலர் டி.வி., 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம், விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் ரத்து, ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் போன்ற வாக்குறுதிகள் பெரும் வரவேற்பைப் பெற்றதால், அந்தத் தேர்தல் களத்தின் கதாநாயகனாக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை கொண்டாடப்பட்டது. தி.மு.க. ஐந்தாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க லேப்டாப், ஸ்கூட்டி, செல்போன் என வாக்குறுதிகளை அளித்து 2011, 2016 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்றது.

தேர்தல் அறிக்கையும் அதில் உள்ள வாக்குறுதிகளும் கட்சிகளின் வெற்றிக்கு உதவுவதுபோலவே, ஆட்சிக்கு வந்த பிறகு அதன் மீதான செயல்பாடுகள் மீதான சாதக-பாதக விமர்சனங்களும் எழுவதைத் தவிர்க்க முடியாது. 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தங்களின் தேர்தல் அறிக்கைகளில் போட்டி போட்டு வாக்குறுதிகளை அளித்தன. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன. அவற்றில் மிக முக்கியமானதாக இருந்தது, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டமாகும். அதுபோலவே பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம், மாதந்தோறும் மின் கட்டணக் கணக்கெடுப்பு, அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியம் உள்ளிட்டவையும் கவனம் பெற்றன.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுத்தப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பெண்களுக்கான கட்டணமில்லாப் பேருந்து திட்டம் விடியல் பயணம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு உழைக்கும் பெண்கள்-அலுவலகங்கள் செல்லும் பெண்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்ற அதிருப்தி அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களிடம் இருப்பதை அவர்களுடைய சங்கங்களின் அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. மாதம் ஒரு முறை மின்கட்டண கணக்கீடு என்பது நடுத்தர மக்களின் பெரும் எதிர்பார்ப்பு. ஸ்மார்ட் மின்மீட்டர் பொருத்தும் பணி நடப்பதால் அது முடிந்ததும் மாதம் ஒரு முறை கணக்கெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது எந்தளவு விரைவாக சாத்தியமாகும் என்ற கேள்வியை எழுப்புகிறது.
நீட் நுழைவுத் தேர்வு ரத்து தொடர்பாக முதல் சட்டமன்றக் கூட்டத்திலேயே தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல ஒரு முறைக்கு இரு முறை தீர்மானம் நிறைவேற்றியும், ஆளுநர் மற்றும் மத்திய அரசினால் அதற்கு ஆதரவின்றிப் போனதும், நீட் தேர்வு தொடர்வதும், மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க.வும், அதன் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க.வும் நீட் தேர்வு ரத்து ரகசியம் என்னவாயிற்று என தி.மு.க.வை நோக்கி கேள்வி எழுப்பும் விநோத அரசியலையும் பார்க்க முடிகிறது.

தமிழ்நாட்டிற்குரிய மத்திய அரசின் நிதிப்பகிர்வு உள்ளிட்ட சவால்களை மாநில அரசு சுட்டிக்காட்டுகிறது. நிதி நெருக்கடியிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் போன்ற சிறப்புத் திட்டங்களும், துறை வாரியான திட்டங்களின் செயல்பாடுகளும் தமிழ்நாட்டு மக்களுக்கு நேரடியாகப் பயனளிப்பதுடன், பொருளாதாரம், தொழில்துறை மற்றும் கட்டமைப்புகளில் தமிழ்நாட்டை முன்னேற்றியுள்ளது.
நிர்வாகத்திறனில் மாநில அரசு தன்னை நிலைநிறுத்தியுள்ளது. மக்களிடம் நேரடியாக அதிருப்தி வெளிப்படாத நிலையும் உள்ளது. 505 வாக்குறுதிகளில் ஏறத்தாழ 400 நிறைவேற்றப்பட்டிருப்பதாக அமைச்சர்கள் பேட்டி அளித்துள்ளனர். மீதமுள்ளவற்றில் மக்களின் எதிர்பார்ப்புக்குரியவை நிறைவேறுமா என்பதே தேர்தல் களத்திற்கான கேள்வி.