நியமனப் பதவியில் உள்ள ஆளுநர்களைக் கொண்டு மாநில அரசுகளை முடக்க நினைக்கும் போக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே தொடங்கிவிட்டது என்றாலும், பா.ஜ.க. ஆட்சி அமைந்தபிறகு அது மிகவும் அதிகமாகவும், திட்டமிட்டும் செயல்படுத்தப்படுகிறது. எந்தெந்த மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியில் இல்லையோ அந்தந்த மாநிலங்களில் மத்திய பாஜ.க. அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களைக் கொண்டு இணை ஆட்சி நடத்தி, அரசுக்கும் ஆளுநருக்குமான மோதல்களை உருவாக்கி, மாநிலத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
பா.ஜ.க. அரசால் குறிவைக்கப்பட்டிருக்கும் முதன்மையான மாநிலங்கள் மேற்குவங்கம், கேரளா, தமிழ்நாடு ஆகியவையாகும். இதில் தமிழ்நாடு அரசு ஆளுநரின் அதிகார அத்துமீறலை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. பல்கலைக்கழக வேந்தர் என்ற நிலையில் உள்ள ஆளுநரை அதிலிருந்து அகற்றிடவும், அவர் அனுமதி தராமல் கிடப்பில் வைத்துள்ள மசோதாக்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கவும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், ஆளுநருக்கும் குடியரசு தலைவருக்கும் மசோதாக்கள் மீது காலக்கெடு நிர்ணயித்து உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பு இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது.

ஆளுநர் என்பவர் அரசாங்கத்தை விட வலிமையும் அதிகாரமும் கொண்டவரல்ல என்பதால் தமிழ்நாடு அரசைப் போலவே மேலும் சில மாநிலங்களும் உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கின்றன. இந்த நிலையில், மாநில அரசின் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுப்பதற்கு கால அவகாசம் நிர்ணயிப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பு தொடர்பாக, அரசியலமைப்பின் 143 வது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றத்திடம் ஜனாதிபதி கேட்ட 14 கேள்விகள் தொடர்பாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு நவம்பர் 20 அன்று தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தீர்ப்பு, முந்தைய இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்புக்கு மாறான கருத்துகளைத் தெரிவித்துள்ள நிலையிலும், ஜனநாயகத்தின் மீதான உயிர்ப்பை உறுதி செய்யும் வகையில் பல கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
“மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலக்கெடு எதையும் நீதிமன்றத்தால் விதிக்க முடியாது. மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.”
“ஆளுநர் காரணத்தை தெரிவிக்காமல் நீண்டகாலம் மசோதாவை நிறுத்திவைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. மாநில அமைச்சரவையின் ஆலோசனையின்படியே ஆளுநர் செயல்பட வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் அதன் அமைச்சரவைதான் முதன்மையாக இருக்க வேண்டும். மாநிலத்தில் இரண்டு நிர்வாக அதிகாரங்கள் இருக்க முடியாது என்பதை உறுதிப்படுத்துகிறோம்.
“ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் என்பது மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம், அல்லது சட்டப்பேரவைக்கு அனுப்பி வைக்கலாம் என்பன மட்டுமே. இந்த மூன்று வாய்ப்புகள் தான் உள்ளன இதை மீறி நான்காவது வாய்ப்பு எதுவும் கிடையாது
“ஒரு மசோதா மீது காரணமே இல்லாமல் நீண்ட காலத்திற்கு ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தார் என்றால், சம்பந்தப்பட்ட மாநில அரசு நீதிமன்றத்தை நாடலாம்.
இவ்வாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து, குடியரசு தலைவரின் சில கேள்விகளுக்கு விளக்கம் தரவேண்டியதில்லை என தெரிவித்துள்ளது.
ஆளுநருக்கு காலக்கெடு விதிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை என்றும், ஆளுநரின் ஒப்புதல் பெறாமல் மசோதாக்கள் சட்டங்களாகாது என்றும் 5 நீதிபதிகள் அமர்வு தெரிவித்த போதும், ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமே முதன்மையானது முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டது என்பதை உறுதி செய்துள்ளது. ஜனநாயக அரசை மிஞ்சிய அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது என்பதையும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது.
ஆளுநரின் அதிகாரங்கள் என்பவை அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் அமைந்தவை. அது ஒரு பெயரளவிலான நிர்வாகப் பொறுப்பு என்ற அளவில்தான் வழங்கப்பட்டுள்ளன. அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு, ஆளுநரின் அதிகாரத்தை மத்திய ஆட்சியாளர்கள் தவறாகப் பயன்படுத்துவது குறித்து பல முறை விவாதங்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆளுநர் பதவி தேவையற்றது என்ற கருத்தும் மாநில கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ளன.
அரசமைப்புச் சட்டத்தின்படி ஆளுநரின் அதிகாரத்தில் நீதிமன்றம் நேரடியாகத் தலையிட முடியாது என்கிற நிலையில், ஆளுநரின் அதிகார மீறல்களைக் கட்டுப்படுத்தும் வகையிலான அரசியல் சட்டத் திருத்தமே, கூட்டாட்சியை வலுப்படுத்தும் அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்கும். அதற்கான போராட்டம் நெடியதாக அமையும்.
