
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபரான டிரம்ப் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அவரை வெற்றி பெறவைத்த அமெரிக்கர்களுக்கே அதிர்ச்சியையும் வெறுப்பையும் ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் பலவும் டிரம்ப்பின் வரிவிதிப்பு உள்ளிட்ட அறிவிப்புகளால் கடும் எரிச்சலில் உள்ளன. அமெரிக்காவுடன் வர்த்தகத் தொடர்வு, ஏற்றுமதி-இறக்குமதி வணிகம் கொண்ட நாடுகளில் உள்ள தொழிலதிபர்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் கடும் அச்சத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். டிரம்ப்பால் அதிக வரி விதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
நீண்டகாலமாக அமெரிக்கா பனிப்போர் நடத்திய நாடு ரஷ்யா. அமெரிக்காவுக்கு சவாலான வல்லரசாக வளர்ந்து வருவது சீனா. எல்லைப்புறத்தில் இருப்பதால் சீனாவுடன் நமக்கு நெடுங்காலமாக உரசல்கள் உண்டு. பிரதமர் மோடி பதவிக்காலத்தில் சீனா வெறுப்புமிக்க எதிரியானது. ரஷ்யா என்கிற தனிநாடு சோவியத் யூனியனாக பல நாடுகளுடன் இணைந்த குடியரசாக இருந்தபோதே இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் நல்லுறவு உண்டு. அமெரிக்காவுக்குப் பகையாகாமல் ரஷ்யாவுடன் உறவை மேற்கொண்டு வந்தது இந்தியா.
மோடி பிரதமரானதும் ரஷ்யாவுடனான வர்த்தக உறவுகள் நீடித்தன. அமெரிக்காவுடனான புது உறவுகள் மேம்பட்டன. டிரம்ப் முதன்முறையாக அமெரிக்க அதிபர் ஆனபோது, அவருடைய மதவெறுப்பு கருத்துகள், பழமைவாத சிந்தனைகள் ஆகியவை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஜெராக்ஸ் போல இருந்ததால் இந்தியாவின் பிரதமர் முதல் இங்குள்ள பா.ஜ.க.வினர் வரை டிரம்ப்பை தங்கள் ஆள் என்றே கொண்டாடினர். அமெரிக்க வாழ் இந்தியர்களின் (என்.ஆர்.ஐ) ஆதரவும் அவர்களின் நிதியளிப்பும் தேவை என்பதால் டிரம்ப்பின் நண்பராகத் தன்னை வெளிப்படுத்தினார் மோடி. இந்தியாவின் தேவையை அறிந்திருந்த டிரம்ப்பும் மோடியுடன் நட்பு பாராட்டினார்.
அமெரிக்காவில் ‘ஹவ்டி மோடி’ என்ற நிகழ்வு நடத்தப்பட்டு அதில் மோடியுடன் டிரம்ப் கலந்துகொண்டார். இந்தியாவில் ‘நமஸ்தே டிரம்ப்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதில் டிரம்ப்புடன் மோடி பங்கேற்றார். இப்படி ஈருடல் ஓர் உயிர் போல டிரம்ப்பும் மோடியும் காட்டிய நட்பு சீனாவையும் ரஷ்யாவையும் எரிச்சலாக்கியது. டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபர் ஆவதற்கு இந்தியப் பிரதமர் மோடி நேரடியாகவே பிரச்சாரம் செய்தது இதுவரை வெளிப்பட்ட ‘சாணக்கியத்தன’ங்களிலேயே வித்தியாசமாக இருந்தது. அந்தளவுக்கு மோடி-டிரம்ப் நட்பு இறுக்கமாக இருந்த நிலையில்தான், இரண்டாவது முறை அதிபர் பொறுப்பேற்ற டிரம்ப், இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரியை 25% ஆக்கினார்.
“பாருங்கள்.. மோடி தரப் போகும் பதிலடியை?” என்று பா.ஜ.க.வினர் சிலாகித்த நிலையில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயையும் ராணுவத் தளவாடங்களையும் இந்தியா அதிகளவில் வாங்குகிறது. அந்தப் பணத்தை உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யா செலவிடுகிறது என்று குற்றம்சாட்டிய டிரம்ப் மேலும் 25% வரியை இந்தியப் பொருட்கள் மீது விதித்தார். 50% வரி என்பது இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டின் தொழில்துறையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. திருப்பூர் பின்னலாடைத் தொழில், தூத்துக்குடி உள்ளிட்ட மீன் ஏற்றுமதி தொழில் வரை பாதிப்புகள் வெளிப்பட்டன.
இந்தியாவைப் போலவே அமெரிக்காவில் வரிவிதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவும் ரஷ்யாவும் வகுத்துள்ள வியூகங்கள் அடிப்படையில் சீனாவின் முக்கிய நகரான ஷாங்காயில் நடைபெற்ற ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோருடன் இந்திய பிரதமர் மோடியும் கலந்துகொண்டது தற்போதைய நிலையில் முக்கியமான நிகழ்வாகும்.
எல்லைத் தகராறுகளைக் கடந்து சீன அதிபருடன் இந்திய பிரதமர் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளும், ரஷ்ய அதிபருடன் இந்திய பிரதமர் ஒன்றாகக் காரில் பயணித்து 45 நிமிடங்கள் பேசியிருப்பதும் உலக அரங்கில் உற்று நோக்கப்படுவதுடன், அமெரிக்க அதிபரையும் இந்தக் கூட்டணி யோசிக்க வைத்திருக்கிறது.
உலக அளவிலான ஒருங்கிணைப்புகளில் நாடுகளுக்கிடையே இருக்க வேண்டியது பரஸ்பர நம்பிக்கையுடனான செயல்பாடுகள்தான். வெறும் வணிக நோக்கம், நிதி திரட்டுதல் இவற்றை மட்டுமே முக்கியமானதாக நினைத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு மோடியும் அவருடைய கட்சியினரும் ரசிகப் பட்டாளமாக மாறியது இந்தியா மீதான உலக நாடுகளின் நம்பிக்கையைத் தகர்த்தது. இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவு சரிந்தது. உக்ரைன் போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புதினுடன் மோடி பேசிவிட்டார் என்று பா.ஜ.க.வினரின் பில்டப்புகள் நொறுங்கின. இந்திய எல்லைப்பகுதியில் சீன ராணுவம் புதிய கிராமங்களை உருவாக்கின.
அணிசேரா நாடுகள் என்ற கொள்கையை நேரு-இந்திராகாந்தி-ராஜீவ்காந்தி போன்ற பிரதமர்கள் கடைப்பிடித்தனர். அதற்கு மாறாக, அமெரிக்கா பக்கம் அணி சேர்ந்த மோடி, தற்போதைய அனுபவங்களால் சீனா-ரஷ்யா அணி பக்கம் வந்துள்ளார். யார் பக்கம் இருந்தாலும் நம்பகத்தன்மை முக்கியம். அது இல்லாவிட்டால் கோமாளித்தனமாகிவிடும்.
உலக அரங்கில் இந்தியா ஒரு போதும் கோமாளியானதல்ல.. இதை பிரதமர் அறிந்திருப்பார். அதற்கேற்ப செயல்படுவார் என நம்புவோம்.