
இந்திய அரசியலில் சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் தமிழ்நாட்டுத் தலைவர்களின் பங்களிப்பு தனித்துவமானது. அதிகாரத்தை நோக்கிய விடுதலை போராட்டம் நாடெங்கும் நடந்து கொண்டிருந்த போது, வெள்ளைக்காரர்களை எதிர்த்து சுதேசி கப்பல் கம்பெனியை உருவாக்கி, பிரிட்டிஷார் எந்தக் கடல் வழியாக வாணிபம் செய்ய கப்பலில் இந்தியாவுக்கு வந்தார்களோ அந்தக் கடலில் பிரிட்டிஷாருக்கு எதிராக கப்பல் ஓட்டியவர் வ.உ.சிதம்பரனார்.
பிரிட்டிஷ் ஆட்சியில் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தொழிற்சங்கங்கள் அமைத்தவர் திரு.வி.கல்யாணசுந்தரனார். அந்த உழைக்கும் மக்களை ஒருங்கிணைத்து அவர்கள் உரிமை பெறுவதற்கு பொதுவுடைமை இயக்கக் கொள்கைகளே வழிநடத்தும் என்பதை வலியுறுத்தி முதன் முதலாக மே தினத்தைக் கொண்டாடியவர் சிங்காரவேலர். இலக்கியத்தை மக்களின் கையில் விடுதலைக்கான ஆயுதமாக வழங்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் உலகத்தரத்திலான உணர்ச்சிமிகு கவிதைகளைத் தந்தவர் பாரதியார். வெள்ளையர்களுக்கு எதிராக மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் நடத்தி தண்டி யாத்திரை சென்றபோது, திருச்சியிலிருந்து வேதாரண்யம் சென்று உப்பு காய்ச்சியவர் ராஜாஜி. வெள்ளைக்காரர்களின் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் நடுஇரவில் காவலர்களின் கண்களுக்குத் தெரியாமல் லாவகமாக ஏறி, பிரிட்டிஷாரின் யூனியன் ஜாக் கொடியை அகற்றிவிட்டு, இந்தியாவுக்கான கொடியை ஏற்றி அசர வைத்தவர் ஆர்யா (எ) பாஷ்யம்.

இந்த வரலாற்றின் தொடர்ச்சியில் வந்தவரும், தமிழ்நாட்டின் சமுதாய-அரசியல் போக்கையே மாற்றியவருமான பெரியாரின் பங்களிப்பு சாதாரணமானதல்ல என்பதை அவர் காலத்தில் வாழ்ந்த தலைவர்கள் மட்டுமின்றி, அவருடைய நேர்மையான எதிரிகளும் கூட ஒப்புக்கொண்டுள்ளனர். காந்தி வழியில் காங்கிரஸ்காரராக இருந்த பெரியார், கேரள மாநிலம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் உள்ள கோயில் தெருக்களில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் நடப்பதற்கே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கேரள காங்கிரசாரின் அழைப்பை ஏற்று, அங்கு சென்று போராட்டம் நடத்தி, சிறைவாசம் கண்டு, இறுதியில் கோயில் தெருக்களில் அனைத்து சமுதாயத்தினரும் நடப்பதற்கான உரிமையையும் பெற்றுத் தந்தார்.
காங்கிரஸ் கட்சி விடுதலை இயக்கமாக இருந்தாலும், அதில் சமுதாயப் பணிகளையும் மேற்கொள்ள நினைத்தார் காந்தி. அவர் வழி நடந்த பல தலைவர்கள் அதை ஒரு கிளையாகவே நினைத்தனர். காந்தியின் காங்கிரசிலிருந்து பிரிந்து வந்த பெரியார்தான் தன்னுடைய சுயமரியாதை இயக்கத்தின் மூலம் சமுதாய மாற்றத்திற்கானப் பணிகளை வாழ்நாள் முழுவதும் மேற்கொண்டார். சாதியால் பிரிக்கப்பட்டிருக்கும் சமூகத்தில் சமத்துவம் ஏற்பட மூடநம்பிக்கைகளுக்கு எதிராக அவர் முன்வைத்த கருத்துகளும் செயல்பாடுகளும் சம்மட்டி அடிகளாகவே இருந்தன. அதனால் அவருக்கு எதிர்ப்பு என்பது அப்போது முதல் இப்போது வரை உண்டு. எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் தனது 95வயது வரை சமுதாய நலனுக்காகப் பாடுபட்டார். தன் கண்முன்னாலேயே பல மாற்றங்களையும், அதற்கான சட்டங்களையும் கண்ட உலகின் ஒரே சமுதாய சீர்திருத்த தலைவர் பெரியார் என்றால் அது மிகையில்லை.

தன்னைவிட மூத்த தலைவர்களான காந்தி, வ.உ.சி. போன்றவர்களிடம் பெரும் மதிப்பு கொண்டவர் பெரியார். தன் சகாக்களான திரு.வி.க., ராஜாஜி ஆகியோரின் ஆன்மீக நம்பிக்கைகளுக்கு மதிப்பளித்து-தன்னுடைய நாத்திகப் பாதையில் பெரியார் பயணித்தார். பொதுவுடைமை இயக்கத் தலைவர்களான சிங்காரவேலர், ஜீவானந்தம் போன்றவர்களுடன் பெரியார் பயணித்திருக்கிறார். தன்னைவிட இளையவரான காமராஜரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக்குவதற்கு முன்னின்றார். பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு கருணாநிதி உள்ளிட்ட தமிழ்நாட்டின் தலைவர்கள் பெரியாரால் உருவாக்கப்பட்டவர்கள்.
‘தொண்டு செய்து பழுத்த பழம்’ என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடியது போல, வாழும் நாள் வரை சமுதாயத் தொண்டாற்றிய பெரியாருக்குப் புகழ் சேர்க்கும் வகையில் அவர் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி இங்கிலாந்தில் உள்ள உலகப்புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் பெரியாரின் படத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து உரையாற்றியுள்ளார். உலக அரங்கில் தமிழர்களின் தலைவர் ஒருவரின் படம் திறந்து வைக்கப்பட்டு, அதை மேல்நாட்டவர்கள் வியந்து பார்ப்பதும், தமிழ்நாட்டின் சமுதாயப் புரட்சி பற்றி ஆய்வு மாணவர்கள் கற்பதும் நம் மண்ணுக்கான பெருமை.
தமிழின் உலக அடையாளமாக திருக்குறள் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுவிட்டது. அதைத் தொடர்ந்து பழந்தமிழ் இலக்கியங்கள் பல சென்றுள்ளன. தமிழ்நாட்டின் உலக அடையாமாக தந்தை பெரியார் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு சென்றிருக்கிறார். இனி நம் அரும்பெரும் தலைவர்களின் சாதனைகள் உலக அரங்கில் வரிசையாக அணிவகுக்கட்டும்.