
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களிலும் உள்புற மாவட்டங்களிலும் அதிக மழை தருவது வடகிழக்கு பருவம்தான். அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்குப் பருவ மழை, காற்றழுத்த தாழ்வு மண்டலத்தையும், புயல் சின்னத்தையும் உருவாக்கக்கூடியது என்பதால் கன மழை மட்டுமின்றி, புயல்-வெள்ளம் போன்ற இயற்கை சேதங்களையும் தமிழ்நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் ஆனாலும், வடகிழக்கு பருவமழையைத் தமிழ்நாடு தவிர்க்க முடியாது.
புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றங்கள் ஆகியவற்றால் மழைப் பொழிவின் அளவு அடிக்கடி மாறுபடுகிறது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன் குறைந்த அளவிலேயே மழை பெய்வதை உறுதி செய்த வானிலை ஆய்வு மையங்கள், கடந்த சில ஆண்டுகளாக பெருமழை பொழிவதையும், மேகவெடிப்பின் காரணமாக ஒரே நாளில் ஒரு மாதத்திற்கான மழை கொட்டித் தீர்ப்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். இத்தகைய திடீர் மழைப் பொழிவினால் ஊரெங்கும் மழை நீர் ஓடுவதும், போக்குவரத்து பாதிக்கப்படுவதும், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போவதையும் பார்க்கிறோம். அமைந்தகரை முதல் அமெரிக்கா வரை இதுதான் தற்போதைய நிலை.
மும்பை, அகமதாபாத், நாக்பூர், பெங்களூரு என இந்திய நகரங்கள் பலவும் அவற்றிற்குரிய பருவ மழைக் காலங்களில் இந்த நெருக்கடியை எதிர்கொள்கின்றன. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை ஒவ்வொரு வடகிழக்கு பருவமழைக்கும் அச்சப்படுகிற நகரமாக மாறியிருக்கிறது. மாநகரங்களின் வளர்ச்சியில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்குள்ளாவதும், மிச்சமுள்ள நீர் நிலைகள் சரியாகப் பாதுகாக்கப்படாமலும், போதிய அளவில் மழை நீர் வடிகால் இல்லாத சூழலும் இந்தியாவின் பெருநகரங்கள் அனைத்திலும் பொதுவான விதியாகிவிட்டது.

உச்சநீதிமன்றம் தொடங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வரை பல நீதிமன்றங்களும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து அதிரடித் தீர்ப்புகள் பலவற்றை வழங்கியுள்ளன. ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் எனப் பல முறை உத்தரவிட்டுள்ளன. கெடுவாய்ப்பாக, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையே நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டதுதான். அங்கிருந்துதான் நீதியரசர்கள் நீதிபரிபாலனம் செய்ய வேண்டிய நிலைமை உள்ளது.
அண்மைக்காலமாக சூழலியல் குறித்த விழிப்புணர்வு அரகாங்கங்களிடமும் பொதுமக்களிடமும் ஏற்பட்டிருப்பதால், அரசு தரப்பிலான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், நடவடிக்கைகள் எடுக்கப்படாத இடங்கள் குறித்து பொதுமக்களும், தன்னார்வலர் அமைப்புகளும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது வழக்கமாக உள்ளது. அவை முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் வரை கவனத்திற்கு சென்று நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலவரங்களையும் காண முடிகிறது.
சென்னையைப் பொறுத்தவரை 2021ல் தி.மு.க ஆட்சி அமைந்தததிலிருந்து மழை நீர் வடிகால் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதன்மைச் சாலைகளில் மழை நீர் தேங்காத சூழலும், தேங்கினால் உடனுக்குடன் அகற்றக்கூடிய நிலையையும் காண முடிகிறது. உள்புறச் சாலைகளில் இன்னும் பணிகள் மிச்சமுள்ளன. அக்டோபர் மாத இறுதிக்குள் தற்போது நடைபெற்று வரும் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் தனது துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால், அக்டோபர் 20 முதலே வடகிழக்கு பருவ மழை வலுக்கத் தொடங்கிவிட்டது.
பல இடங்களில் மழை நீர் வடிகால்கள் வாய்ப் பிளந்து நிற்கின்றன. மழை பெய்யும் நேரத்தில் அநத்ப் பக்கமாக வாகனங்களில் வருபவர்களும், நடந்து செல்பவர்களும் பெரும் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட இடங்களில் உரிய எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டியது அவசியமாகும். அதிகாரிகள் இதில் அக்கறை காட்டுவார்கள் என்று ஆட்சியாளர்கள் நினைத்து ஏமாந்துவிடக்கூடாது. மின்சார வாரியம், உள்ளூர் நிர்வாகம் ஆகியவை சார்ந்த அதிகாரிகள் பெரும்பாலும் அலட்சியமாகவே பதில் அளிக்கிறார்கள் என்று பொதுமக்கள் மட்டுமின்றி, ஆளுங்கட்சியை சேர்ந்த நிர்வாகிகளே புலம்பி வருகிறார்கள்.

முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், கட்சிப்பொறுப்பிலும் மக்கள் பிரதிநிதிகளாகவும் இருப்பவர்கள், கடைநிலை ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் மக்கள் நலன் காக்கத் தொடர்ந்து பாடுபடுகிறார்கள். அதிகாரிகளை வேலை வாங்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.
ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு பருவ மழைச் சூழலைக் கண்காணிக்கும் உயரதிகாரிகளை முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். அவர்கள் தங்களுக்கு அடுத்த நிலையில் உள்ள அந்தந்த மாவட்ட அதிகாரிகளை முடுக்கிவிட்டு போர்க்கால அடிப்படையில் பணிகளை நிறைவேற்றினால் மட்டுமே, கன மழைக்காலத்தை சமாளிக்க முடியும். எங்கெங்கே எவ்வளவு மழை பெய்யும் என்பதை வார் ரூம் மூலமாக கண்காணிப்பது போலவே, அங்கெல்லாம் அதிகாரிகள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதையும் கட்டாயம் கண்காணிக்க வேண்டும். பருவமழைக் காலம் அரசுக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கை இதுதான்.