ஒவ்வொரு ஆண்டையும் போலவே 2026ஆம் ஆண்டும் உலகெங்கும் நம்பிக்கையுடன் பிறந்திருக்கிறது. இந்திய நேரப்படி மாலை ஏறத்தாழ 6 மணியளவில் நியூசிலாந்து நாட்டில் நள்ளிரவு கடந்ததால் 2026 வழக்கம்போல அங்கே முதலில் பிறந்தது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் புகழ்மிக்க சிட்னி பாலத்தில் வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டு பிறந்தது. அப்போது இந்தியர்கள் தங்கள் அலுவலகப் பணி முடித்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஆஸ்திரேலியாவைத் (Australia) தொடர்ந்து ஜப்பான், கொரியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் புத்தாண்டு பிறந்து, அதன்பிறகு இந்தியாவில் புத்தாண்டை வரவேற்கும் கோலாகலமான விழாக்களுடன் 2026 பிறந்தது. இந்தியாவுக்குப் பிறகு பாகிஸ்தான், ஐக்கிய அரபு நாடுகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பா (Europe) என பல இடங்களிலும் புத்தாண்டு பிறந்து, இந்தியாவுக்கு பகல் 11 மணி ஆகும்போது அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கியது. உலகின் எல்லா நகரங்களிலும் புத்தாண்டு களைகட்டியது. அனைத்து மக்களும் நம்பிக்கையுடன் அதை வரவேற்றனர்.
கடந்த ஆண்டின் நிகழ்வுகளையும் அனுபவங்களையும் அசைபோட்டு, அதைவிட சிறப்பாக இந்த ஆண்டு அமையவேண்டும் என எதிர்பார்ப்பதுதான் மனித மனதின் இயல்பு. கடந்த ஆண்டில் நிறைவேற்ற முடியாமல் போன திட்டங்கள், ஏற்பட்ட ஏமாற்றங்கள், தோல்விகள் ஆகியவை இந்த ஆண்டு இருக்கக்கூடாது என்று ஒவ்வொரு புத்தாண்டிலும் மனிதர்கள் விரும்புவதுடன், இந்தப் புத்தாண்டு முதல் நல்ல செயல்களை, வாழ்க்கையின் இலட்சியங்களை அடைய முனைப்பாக செயல்படுவது என உறுதி எடுத்துக்கொள்வதும் அதே மனித இயல்புதான்.
உடல்நலன் காக்க அன்றாடம் ஜிம்முக்குப் போக வேண்டும் என்பதில் தொடங்கி, இன்னின்ன வேலைகளை முடிக்க வேண்டும், இவற்றை அடைய வேண்டும் என்கிற உயர்ந்த இலட்சியங்கள் வரை பலவும் புத்தாண்டு நாள் சபதமாக அமையும். ஒரு வாரம் கழித்து அதில் தொய்வு ஏற்படும். ஒரு மாதம் கழித்து, சபதத்தின் சில பகுதிகள் மறந்து போய்விடும். அடுத்த டிசம்பர் வரும்போது, இனி வரும் புத்தாண்டிலாவது சபதத்தை நிறைவேற்றவேண்டும் என உறுதியெடுப்பதும் மனிதர்கள்தான். அதன்பிறகு, பழைய ஆண்டின் கதையே தொடரும். இதனைத் தவிர்கக்க்கூடிய ஆண்டாக 2026 அமையட்டும்.
உலக அளவில் எடுத்துக் கொண்டால் மூன்றாண்டுகளுக்கு மேலாக ரஷ்யா-உக்ரைன் போர் (Russia Ukraine War) நடந்து வருகிறது. அமெரிக்கா பிற நாடுகள் மீதுள்ள வரிவிதிப்பு பொருளாதார ரீதியான நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. இவற்றுக்கு ஒரு முடிவு கண்டு, ஒவ்வொரு நாடும் அதன் இறையாண்மையுடனும், பொருளாதார வலிமையுடனும் திகழக்கூடிய ஆண்டாக 2026 அமையட்டும்.
இந்தியாவைப் பொறுத்தவரை, மதவாத அரசியலை வெளிப்படையாக முன்வைத்து, அதன் மூலம் சாதிரீதியாகவும், மொழிரீதியாகவும் பிரச்சினைகளை உருவாக்கக்கூடிய ஆட்சி கடந்த 11 ஆண்டுகளாகத் தொடர்கிறது. மாட்டுக்கறி சாப்பிட்டாலும் மாட்டுக்கறி விற்பனை செய்தாலும் தனி மனிதர்கள் மீது கடுமையான தாக்குதல் நடைபெறுகிறது. ஆனால், இந்தியாவிலிருந்து அதிகளவில் மாட்டுக்கறி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதை செய்பவர்களில் பலர் இந்தியாவை ஆள்பவர்களின் கட்சியை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். பாபர் மசூதி இடிப்பில் தொடங்கிய மதவாத வன்முறை, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் தர்கா வரை வன்மத்தை வெளிப்படுத்துகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது மதவாத வெறியாளர்கள் புகுந்து தாக்குதல் நடத்துகிறார்கள். சிறுபான்மை மதத்தினர் ஒவ்வொரு நாளும் அச்ச உணர்வுடன் வாழவேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை வாழ்வுரிமைக்கு எதிரான ஆட்சியாளர்களின் போக்கு மாறுமா, மாற்றப்படுவதற்கான காலம் வருமா என்ற எதிர்பார்ப்புடன் 2026 பிறந்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, சவாலாக இருப்பது அரசியல் கண்ணோட்டத்திலான சாதிக்குழுக்களும், போதை பொருட்களும்தான். இரண்டையும் கண்காணிப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் காவல்துறையின் வேகம் அதிகரிக்கக்கூடிய ஆண்டாக இது அமைந்திட வேண்டும். எப்போதுமே திரைப்படங்களின் மீது தீராக்காதல் கொண்ட தமிழ்நாட்டில், மீண்டும் அரசியலில் சினிமாவின் தாக்கம் வலுவாக உள்ளது. தலைமுறை கடந்த இந்த சினிமா நாயக பிம்பம் மீதான ஈர்ப்பு என்பது, தன்னைப் பற்றியோ, தன் குடும்பத்தைப் பற்றியோ, ஏன் தன் உயிரைப் பற்றியோ கூட கவலைப்படாத நிலையிலும், மாற்று சினிமா ரசனை-மாற்று அரசியல் கட்சி மீதான பிடிப்பு கொண்ட ஒவ்வொருவர் மீதும் வன்மத்தைக் கக்கும் வகையிலும் உள்ளது. இந்த ஆபத்தான போக்கின் தாக்கம் என்ன என்பதை எடைபோடும் ஆண்டாக 2026 (New Year) பிறந்துள்ளது.
எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஒரே ஆண்டில் நிறைவேறிவிடாது என்றாலும், நம்பிக்கையுடன் தொடங்கியுள்ள புத்தாண்டின் மகிழ்ச்சி தனி மனிதர்களுக்கும் மனிதகுலத்திற்கும் தொடர்ந்திடும் வகையிலான செயல்பாடுகள் நிறைவேறவேண்டும். அதற்காக ஒவ்வொருவரும் தங்களை அதில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
