
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் சனிக்கிழமை தோறும் வெளியில் வந்து பிரச்சாரம் செய்கிறார். வாரத்திற்கு ஒருநாள் அரசியல் பணி என்கிற அவருடைய செயல்திட்டத்திற்கு ரசிகர்களான அவரது கட்சித் தொண்டர்களிடம் நிறைய வரவேற்பு இருக்கிறது. இதுவரை திரையில் பார்த்த முக்கியமான நடிகரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் பொதுமக்களும் திரண்டு வருகிறார்கள். அரசியல் கட்சிக்கே உரிய வகையில் திரட்டப்படும் கூட்டமும் சேர்ந்தே விஜய் பயணத்தின் கவனத்தை ஈர்க்கிறது. புதிய அரசியல் கட்சி, பிரபல நடிகர் தலைமையிலான கட்சி என்பதால் ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் கிடைப்பதும் இயல்பாக இருக்கிறது.
த.வெ.க.வின் கொள்கை எதிரி பா.ஜ.க. என்றும், அரசியல் எதிரி அ.தி.மு.க என்றும் பிரகடனப்படுத்திய விஜய், கொள்கை பற்றி அலட்டிக்கொள்ள வேண்டாம் என்றும், அது தன் தொண்டர்களான ரசிகர்களுக்குப் புரியாது, தனக்கும் தெரியாது என்று முடிவெடுத்துவிட்டார் போலும். அதனால் தன்னுடைய கொள்கை எதிரியான பா.ஜ.க. பற்றி எதுவும் பேசுவதில்லை. அரசியல் எதிரியான தி.மு.க. பற்றி மட்டுமே பேசுகிறார். அவர் பேசுகிறார் என்பதைவிட ஏசுகிறார் என்பதே பொருத்தமாக இருக்கும்.
கொள்கை எதிரியை விட்டுவிட்டு, அரசியல் எதிரியை ஏன் விமர்சிக்கிறீர்கள் என்று கேட்டால், வரப்போவது சட்டமன்றத் தேர்தல். அதனால் ஆளுங்கட்சியான அரசியல் எதிரியை விமர்சித்துப் பேசுகிறேன் என்று விஜய்யும் அவரது கட்சியில் அவரைவிட அதிகாரம் படைத்தவர்களாகக் காட்டிக்கொள்பவர்களும் சொல்கிறார்கள். சட்டமன்றத் தேர்தல் என்பதால் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியை விமர்சிப்பதே சரி என்ற லாஜிக்படி பார்த்தால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய விஜய், நாடாளுமன்றத் தேர்தலில், தனது கட்சி போட்டியிடாது என்று அறிவித்தது என்ன லாஜிக்? மத்திய ஆளுங்கட்சியான தனது கொள்கை எதிரியை எதிர்த்து நிற்பதற்கு தயக்கமா? நிற்கக்கூடாது என்ற நிர்பந்தமா? கட்சியின் ஒரிஜினல் ஓனர்களை எப்படி பகைத்துக் கொள்வது என்ற பயமா?

ஒவ்வொரு சனிக்கிழமையும் மூன்று மாவட்டங்களில் பிரச்சாரம் என்று அறிவித்து, அதன்பிறகு இரண்டு மாவட்டங்கள் என சுருங்கியது. முதல் பிரச்சாரம் நடந்த திருச்சியில் திட்டமிட்டே மக்கள் நெருக்கம் நிறைந்த காந்தி மார்க்கெட் பகுதியைத் தேர்ந்தெடுத்ததும், விமான நிலையத்திலிருந்து ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் என புதுப்பட ரிலீஸ் போல விஜய்யை பார்க்க வந்ததும், பொதுமக்கள் வசிக்கும் வீடுகளின் ஓடுகள் மீது ஏறி உடைத்ததும், பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதையும் தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகளால் அடுத்த பிரச்சாரக் கூட்டங்களில் கட்டுக்கோப்பைக் கையாளவேண்டிய நிலை உருவானது. கூட்டமும் சற்று இளைத்துப் போனது.
தி.மு.க. அரசு தன் கட்சிக்கு மட்டும் திட்டமிட்டு நிறைய கட்டுப்பாடுகள் போடுவதாக சொல்லி, அவற்றைத் தளர்த்தச் சொல்லி, நீதிமன்றம் சென்றதே தமிழக வெற்றிக் கழகத்தினர்தான். ஆனால், நீதிமன்றமோ ஒரு கட்சியின் தலைவர்தான் தனது தொண்டர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், பொதுச் சொத்துகளை சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை அந்தக் கட்சிகளிடம் வசூலிக்கும் திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. நீதிமன்றத்தை மீறினால் அவமதிப்பு ஏற்படும் என்பதை விஜய்க்கு அவரது கட்சியின் அதிகார பீடம் சொல்லியிருக்கக்கூடும்.

நீதிமன்றத்தை எதிர்த்துப் பேச முடியாது என்பதால், தி.மு.க அரசு தனக்கு கட்டுப்பாடு விதிப்பதாக பிரச்சாரத்தில் விஜய் விமர்சனம் செய்தார். பிரதமருக்கு கட்டுப்பாடு விதிக்கமுடியுமா, ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு கட்டுப்பாடு விதிக்க முடியுமா என்று தனது அரசியல் அறியாமையை வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய். தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தடையே விதிக்கப்பட்டதும், அதன்பிறகு அந்த அமைப்பு நீதிமன்றத்திற்கு சென்று, பல கட்டுப்பாடுகளுடன் அனுமதி பெற்றதை, சனிக்கிழமை அரசியல்வாதி விஜய்யிடம் அவரது ஆலோசகர்கள் தெரிவித்திருக்கலாம். அதுபோலவே பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தியபோதும் பா.ஜ.க.வினருக்கு 20க்கும் அதிகமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எந்த அரசியல்கட்சியாக இருந்தாலும், ஆளுங்கட்சியாகவே இருந்தாலும் அவர்களின் நிகழ்வுக்கான இடம், ஊர்வலப் பாதை, போக்குவரத்து நிலவரம் உள்ளிட்ட பலவற்றையும் கருத்தில்கொண்டு கட்டுப்பாடுகள் விதிப்பதைக் கூட அறியாமல் அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கிறார் விஜய் என்பது அவர் மீதான பரிதாபம் அல்ல. அவரை நம்பி திரளும் இளைஞர்களின் எதிர்காலம் மீதான பரிதாபம்.
மோடியை பிரதமர் என்று மரியாதையாக சொல்வதும், முதல்வரை அங்கிள் என்பதும் விஜய் யார் என்கிற க்ளைமாக்ஸை மக்களிடம் அம்பலப்படுத்தியிருக்கிறது.