Editorial: Publisher's election verdict
தேர்தல் முடிந்தால் முடிவுகள் வெளியாகும். அது அதில் பங்கேற்று வாக்களித்தவர்களின் தீர்ப்பாக அமையும். பபாசி எனப்படுகின்ற தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தலின் தீர்ப்பு ஒரு புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது. எந்த ஒரு சங்கமும் அதனைச் சார்ந்தவர்களின் உயர்வுக்கான நல்ல நோக்கங்களுடன்தான் தொடங்கப்படும். பபாசி அமைப்பும் அப்படி தொடங்கப்பட்டதுதான்.
தென்னிந்திய நடிகர் சங்கம் போல தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் அந்தத் துறை சார்ந்தவர்களின் நலனைக் காப்பதற்காக உருவாக்கப்பட்டது. இரண்டின் மீதும் அந்தந்தத் துறை சார்ந்த படைப்பாளிகளுக்கு பெரும் நம்பிக்கை உருவானது. தொடக்கத்தில், சென்னையில் புத்தகக் காட்சி நடத்துவதுதான் பபாசியின் நோக்கமாகவும் செயல்பாடாகவும் அமைந்தது. சென்னை அண்ணாசாலை அருகேயுள்ள காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரியில் நடந்து வந்த இந்தப் புத்தகக் காட்சியின் வாயிலாக படைப்பாளிகளும் வாசகர்களும் பயன் பெற்றனர்.
புத்தகக் காட்சிக்கு கிடைத்து வந்த ஆதரவைத் தொடர்ந்து புத்தக பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் பபாசியில் உறுப்பினர்களாக இணைந்தனர். புத்தகக் காட்சியில் அரங்குகளின் எண்ணிக்கை அதிகமானது. அதனால் அரும்பாக்கத்தில் பச்சையப்பன் கல்லூரி எதிர்ப்புறம் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி, அதன்பின் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடல் எனப் பெரிய இடங்களுக்கு சென்னை புத்தகக் காட்சி மாற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு தரப்பிலிருந்தும் உதவிகள் கிடைக்கத் தொடங்கின.
தி.மு.க ஆட்சியின் போது முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி புத்தகக் காட்சியைத் தொடங்கி வைத்ததுடன், பல்வேறு படைப்புகளுக்கன சிறந்த எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் பரிசளிக்கும் வகையில் பபாசிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கினார். அதனை வங்கியில் வைப்புத் தொகையாக வைத்து, அதன் வட்டி மூலம் எழுத்தாளர்களுக்கு இலட்சக்கணக்கான ரூபாய் பரிசளிக்க வேண்டும் என்பதுதான் கலைஞரின் விருப்பம்.
தமிழ்நாடு அரசு சார்பில் பத்தகக் காட்சிக்கும் பதிப்பாளர்களுக்கும் பல சலுகைகள் வழங்கப்பட்டன. நலவாரியம் அமைக்கப்பட்டது. ஊராட்சிகள் தோறும் நூலகங்கள் அமைக்கப்பட்டு, 5000 படிகள் வரை புத்தகங்களை வாங்கியது அரசாங்கம். இவையனைத்தும் பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்களுக்கு பெரும் வாய்ப்பை அளித்த நிலையில், அவை பரவலாக எல்லாருக்கும் கிடைக்காதவகையில் பபாசி நிர்வாகத்தில் இருப்பவர்களே சிண்டிகேட் அமைத்து, அரசு அதிகாரிகளுடன் கைகோர்த்துக் கொண்டு தங்களுக்கு மட்டுமே பலன் கிடைக்கும்படி பார்த்துக் கொண்டனர். எந்த ஒரு புதிய பதிப்பாளரும் இந்த சிண்டிகேட்டை தாண்டி, உள்ளே நுழைய முடியாத வகையில் அது இரும்புக்கோட்டையாக இருந்தது.
புத்தகக் காட்சிகளில் கடைகள் ஒதுக்குவதிலும் பாரபட்சமான அணுகுமுறையே கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. கலைஞர் கருணாநிதி அளித்த தொகையில் யார் யாருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது என்பதைக் கூட அவர் உயிருடன் இருந்தவரை அவருக்குத் தெரிவிக்க முன்வரவில்லை பபாசி நிர்வாகிகள். காரணம், தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம். ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் எப்படி தங்களுக்கான காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே அவர்களிடம் இருந்தது.
2021ல் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்தபிறகு, மாவட்டங்கள்தோறும் புத்தகக் காட்சிகள் நடைபெற்று வருகின்றன. பபாசியுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் இதனை நடத்துகிறது. இதிலும் ஏகப்பட்ட முறைகேடுளை பபாசி நிர்வாகிகள் செய்வதாகக் குற்றச்சாட்டுகள் வெளியான நிலையில்தான், டிசம்பர் 1 அன்று பபாசி நிர்வாகிகளின் செயற்குழு கூட்டமும், புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலும் நடைபெற்றன.
இதில் பழைய பெருச்சாளிகளின் கொட்டம் அடக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டிருப்பது நம்பிக்கை அளிக்கும் நல்ல தீர்ப்பாக அமைந்துள்ளது. தலைவராக செண்பகா பதிப்பகம் சண்முகம், செயலாளராக குமரன் பதிப்பகம் வயிரவன், துணைத் தலைவராக நக்கீரன் கோபால் ஆகியோரும், அவர்களின் அணியைச் சார்ந்தவர்களும் முழுமையான அளவில் வெற்றி பெற்றுள்ளனர். பபாசி உறுப்பினர்கள் உண்மையான மாற்றத்தை எதிர்பார்த்திருக்கிறார்கள் என்பது இந்தத் தீர்ப்பின் மூலம் தெரிகிறது.
பத்திரிகை ஆசிரியரும் பதிப்பாளருமான நக்கீரன் கோபால் இந்தத் தேர்தலில் முக்கிய பங்காற்றியதுடன், முந்தைய நிர்வாகிகளின் ஊழல்களை ஆதாரத்துடன் காணொளியாக வெளியிட்டது தேர்தல் முடிவுகளில் திருப்புமுனையாக அமைந்தது. 2012ஆம் ஆண்டு சென்னை புத்தகக் காட்சியில், அன்றைய ஆட்சியாளர்களுக்கு நடுங்கியும் ஜால்ரா போட்டும் நக்கீரனுக்கு நெருக்கடி கொடுத்து கடையை மூடச் செய்தார்கள் பபாசி நிர்வாகிகள். இன்று அதே பபாசி தேர்தலில் நக்கீரன் கோபால் மற்றும் அவரது அணியினர் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், பழைய தவறுகள் நடக்காமல், பதிப்புத்துறையில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வரும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது இந்தத் தேர்தல் தீர்ப்பு.
