
தமிழ்நாட்டில் அண்மைக்காலத்தில் மிகப் பெரிய பிரச்சினையாக உருவாகியிருப்பவை தெருநாய்களும் வெறிநாய்களுமாகும். அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெருவில் இரண்டு, மூன்று நாய்கள் திரிந்த நிலையில், தற்போது கூட்டம் கூட்டமாக ‘கான்ஃபரன்ஸ்’ நடத்துவது போல சுற்றிக்கொண்டிருக்கின்றன. இதனால், தெருவில் நடந்து செல்பவர்களும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களும் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவிய ஒரு காணொளியில், ஸ்கூல் பேக் மற்றும் லஞ்ச் பேக் சுமந்தபடி வரும் ஒரு சிறுவனை நாய்கள் விரட்டி விரட்டி துரத்துவதையும், அந்த சிறுவன் அலறியடித்தபடி, லஞ்ச் பேக்கை போட்டுவிட்டு ஓடுவதையும் காண முடிந்தது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தனர். காரணம், அவர்களுக்கும் அதுபோன்ற அனுபவம் நிச்சயம் இருக்கும். தெருவில் நடந்து செல்லும்போது, ஒரு நாய் குரைப்பதும், அதனைத் தொடர்ந்து பல நாய்கள் கூட்டமாக விரட்டுவதும் ஒவ்வொருவர் மனதையும் அச்சப்பட வைக்கிறது. குறிப்பாக சிறுவர்-சிறுமியர், பெண்கள் ஆகியோர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

பகல் நேரத்தைவிட இரவு நேரத்திலும் அதிகாலையிலும் சென்னையில் மட்டுமின்றி ஏறத்தாழ எல்லா ஊர்களிலும் நாய்த் தொல்லை மிக அதிகமாக உள்ளது. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களுக்கு செல்ல வேண்டியவர்களும், அங்கிருந்து திரும்புகிறவர்களும் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் தெருநாய்களின் விரட்டலுக்கு ஆளாகிறார்கள். இருள் சூழ்ந்த நிலையில், எந்தப் பக்கம் ஓடுவது என்பதைக் கூட அவர்களால் உணரமுடிவதில்லை. அன்றாடம் தெரு நாய்க்கடிக்கு ஆளாகிறவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதில், வெறிநாய்களும் உண்டு.
நாள் கடித்தால் அது சாதாரண நாயா, வெறி நாயா என்பது கடிபட்டவருக்குத் தெரியாது. உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி போட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார். மருத்துவக் கண்காணிப்பில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் இருக்க வேண்டிய சூழலும் உருவாகிறது. இத்தகைய சிகிச்சைகள் எடுத்துக்கொண்டு சில வாரங்கள் ஆன பிறகுகூட, அதன் தாக்கத்தை நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் உணர்கிறார்கள். ஆபத்தான வெறிநாய்க்கடி, மனிதர்களை மரணத்தை நோக்கித் தள்ளுகிறது.

“தோ.. தோ..” என்றோ, “மணி.. மணி..” என்றோ தெருநாய்களை அழைத்து அதற்கு பிஸ்கட் போடுகிறவர்கள், உணவு கொடுக்கிறவர்கள் இருக்கிறார்கள். வீட்டில் வளர்க்கும் நாய்களே வழக்கமான உணவாகக் கொடுக்கப்படும் ஆட்டுக்கறி-மாட்டுக்கறி இவற்றைத் தாண்டி, வீட்டுக்கு வரும் விருந்தினர்களின் தொடைக்கறியை கவ்வுகிற நிலையில், தெருவில் உலவும் வெறிநாய்கள் மனிதர்களை எந்த இடத்தில் கவ்வும் என்பதை சொல்ல முடியாது. அப்படிப்பட்ட நாய்களுக்கு, பிஸ்கட் மற்றும் உணவு கொடுத்து பழக்கும்போது, மனிதர்கள் யார் அந்தப் பக்கம் சென்றாலும் அவர்கள் தனக்கு ஏதாவது கொடுத்தாக வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் துரத்துகிற தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டன.

மாநகராட்சி-நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள்தான் தெருநாய்களைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ளன. ஆனால், புளுகிராஸ், பீட்டா போன்ற விலங்குகள் நல அமைப்புகளும், நீதிமன்ற உத்தரவுகளும் உள்ளாட்சி அமைப்புகளைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றன. இந்த வெறிநாய்-தெருநாய் விவகாரம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் அதிகமாக இருப்பதை நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சரே ஒப்புக்கொண்டிருக்கிறார். அவர் வெளியிட்ட புள்ளி விவரத்தில், 2024ஆம் ஆண்டில் ஏறத்தாழ 34 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் நாய்களால் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
உயிரினங்கள் மீது அன்பு செலுத்துவதும் அக்கறை காட்டுவதும் தனி மனிதப் பண்பு. அதே நேரத்தில், எந்த ஒரு உயிரினமும் பொதுமக்களை அச்சுறுத்தும் நிலையில் இருந்தால், அவற்றிடமிருந்து மக்களைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் முதல் கடமையாக இருக்க முடியும். தெருநாய்களைப் பிடிப்பதற்கும், கொல்வதற்கும் கடும் எதிர்ப்புகளை விலங்குகள் நல அமைப்புகள் முன்வைக்க, அவை தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளும் அதற்கேற்ப அமைந்த நிலையில், மக்களைப் பாதுகாக்க சரியான திட்டமிடல் இல்லாமலும், திட்டமிட்டாலும் செயல்படுத்த முடியாமலும் உள்ளாட்சி அமைப்புகள் தடுமாறுகின்றன. மாநில அரசுகளும் இது குறித்து உறுதியான முடிவெடுக்க முடியாத நிலையில் இருப்பதால், மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

எத்தனையோ செயல்பாடுகளில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழும் தமிழ்நாடு, தெருநாய் மற்றும் வெறிநாய்களிடமிருந்து மக்களைப் பாதுகாத்திடும் வகையில், நீதிமன்றங்களில் சட்டரீதியான உத்தரவுகளை பெற்று, உறுதியான ஒரு செயல்திட்டத்தை உருவாக்கி, இரவிலும் பகலிலும் பொதுமக்கள் அச்சமின்றி தெருவில் நடமாடும்படி செய்திட வேண்டும்.
தெருநாய்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, நெருநாய்களுக்கு உணவளிக்கும் முறைக்கு கடுமையானக் கட்டுப்பாடுகளை விதிப்பது, மனிதர்கள் நடக்கவும்-இருசக்கர வாகனத்தில் செல்லவும் அச்சமற்ற சூழலை உருவாக்குவது, வெறிநாய்க்கடியிலிருந்து மனித உயிர்களைப் பாதுகாப்பது ஆகியவற்றை அவசரகால நடவடிக்கை போல செயல்படுத்திட வேண்டியது அவசியம்.