காசோலையில் கருப்பு மையால் எழுதினால் செல்லாது என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவ, நண்பர்கள்-உறவினர்கள் ஆகியோர் அதனைத் தங்களுக்குத் தொடர்புடையவர்களின் வாட்ஸ்ஆப் குழுக்களில் பரப்ப, கருப்பு மை பேனாவால் எழுதக்கூடியவர்கள் தங்களின் பணப் பரிவர்த்தனை என்னவானது என்ற பதற்றத்தில் வங்கிகளைத் தொடர்பு கொண்டு விசாரிக்கத் தொடங்கிவிட்டனர். அப்போதுதான், இப்படியொரு தகவல் பரவிக் கொண்டிருக்கிறது என்பதே வங்கி மேலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்குத் தெரிய வந்திருக்கிறது.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பெருகி வரும் தற்போதைய சூழலில்,காசோலை, வரைவோலை போன்ற முறைகளில்தான் நிறுவனங்களுக்கிடையிலான பணப் பரிவர்த்தனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடன் வழங்கும் நிறுவனங்களும்கூட, கடன் பெறுபவரிடமிருந்து ஒரு காசோலையைப் பெற்றுக் கொள்வ்து வழக்கமாக உள்ளது. இந்த நிலையில்தான், காசோலை தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய உத்தரவைப் பிறப்பித்திருப்பதாகவும், அந்த உத்தரவில், “நீலம் மற்றும் பச்சை மையால் எழுதப்பட்டுள்ள காசோலைகள் மட்டுமே செல்லத்தக்கதாக வங்கிகளால் ஏற்றுக்கொள்ளப்படும். கருப்பு மையால் எழுதப்படும் காசோலைகளில் எழுத்துகளை எளிதில் அழித்து திருத்தம் செய்யும் இடர்பாடுகள் இருக்கிறது. எனவே மோசடிகளைத் தடுத்து பாதுகாப்பான பரிவர்த்தனையை மேற்கொள்வதற்காக காசோலைகளில் நீலம் மற்றும் பச்சை மையால் எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கருப்பு மையால் எழுதப்பட்டுள்ள காசோலைகளை நிராகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” எனவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின.
இப்படி ஓர் உத்தவை ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளதா என்றறிய பலரும் பதைபதைப்புடன் வலைத்தளப் பக்கங்களை அலசியிருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு மாறாகவும், உண்மையைப் போலவும் செய்திகள் வருவது வழக்கம் என்பதால் பெரும்பாலான அரசுத் துறைகள், முக்கியமான தனியார் துறைகளில் சமூக வலைத்தளச் செய்திகள் குறித்த உண்மை சரிபார்ப்பு குழு ஒன்று இயங்குவது தற்போதைய நடைமுறையாக உள்ளது. அதன்படி, இந்திய ரிசர்வ் வங்கியின் உண்மை சரிபார்ப்பு குழு, இப்படி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என மறுத்துள்ளது.
“காசோலையில் கருப்பு மையால் எழுதக்கூடாது என்பது முற்றிலும் பொய்யானது” என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அத்துடன், ரிசர்வ் வங்கியின் விதிப் புத்தகமும், காசோலையில் எழுதுவது குறித்து தெளிவுபடுத்துகிறது. காசோலையில் எழுதப்படும் பெயர், தொகை உள்ளிட்ட விவரங்கள் தெளிவாக இருக்க வேண்டும். எழுதப்பட்டதை வேறு எவரும் திருத்தி, மோசடி செய்ய முடியாத வகையில் அழியாத மையைப் பயன்படுத்த வேண்டும் என்றுதான் அது குறிப்பிடுகிறதே தவிர, கருப்பு நிறத்தில் எழுதக்கூடாது என்றோ, நீலம்-பச்சை மைகளைத்தான் பயன்படுத்டத வேண்டும் என்றோ அது சொல்லவில்லை. சொல்லாத ஒன்றை சொல்வதற்காக ஏதேனும் ஒரு குழுவினர் ரூம் போட்டு யோசிப்பார்களோ என்று நினைக்க வேண்டியுள்ளது. இப்படியானத் தகவல்களை இவர்கள் பரப்பிவிடுவதால் என்ன லாபம் என்பதும் தெரியவில்லை. அதனை உறுதிப்படுத்தாமல் பலரும் இதனைப் பதற்றத்துடன் பகிர்வது ஏன் என்பதும் புரியவில்லை.
குறிப்பாக, பணம் தொடர்பான செய்திகள் என்றால் ஆர்வமோ பதற்றமோ ஏற்படுவது மனிதர்களின் இயல்பு. சமூக வலைத்தளங்கள், இணையம், கணினி எதுவும் இல்லாத காலத்தில், வீட்டுக்கு ஒரு போஸ்ட் கார்டு வரும். அதில் ஏதேனும் ஒரு கடவுளின் பெயரைக் குறிப்பிட்டு, அதை 108 முறை எழுத வேண்டும் என்றும், அதை உறவினர்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும், அவர்களும் அது போல எழுதி மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் இப்படிச் செய்தால் வீட்டில் பணம் கொட்டும் என்றும், செய்யாவிட்டால் உடல்நலன் பாதிப்பு ஏற்படும் என்றும் அந்த சிறிய போஸ்ட் கார்டில் பொடி எழுத்துகளில் எழுதி அனுப்பியிருப்பார்கள். யார் அனுப்பினார்கள் என்ற முகவரி கூட இருக்காது. அதை நம்பி, கட்டுக்கட்டாக போஸ்ட் கார்ட் வாங்கி எழுதி அனுப்பியவர்கள் உண்டு. அனுப்பியவர்களுக்கு பண மழையும் பெய்யவில்லை. புறக்கணித்தவர்களுக்கு உடல்நலக் குறைபாடும் ஏற்படவில்லை. ஆனாலும், சமூக வலைத்தளக் காலத்திற்கு முன்பிருந்தே இத்தகைய தவறான செய்திகளை பரப்பி, பரபரப்பை உண்டாக்கும் மனிதர்கள் இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள்.
10 ரூபாய் நாணயம் செல்லாது என்கிற தகவலும் அப்படித்தான் பரவியுள்ளது. புதுச்சேரி தொடங்கி பல இடங்களிலும் 10 ரூபாய் நாணயத்தை கடைக்காரர்கள் வாங்குவதில்லை. நோட்டாகக் கொடுங்கள் என்று கேட்கிறார்கள். இது குறித்தும் ரிசர்வ் வங்கி மூலமாக தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டு, ஒரு சில ஊர்களில் 10 ரூபாய் நாணயம் வாங்கப்பட்டாலும், வாங்கத் தயங்கும் வணிகர்களும் இன்னமும் இருக்கிறார்கள்.
உண்மையை உறுதி செய்துகொள்ள இன்று பல வசதிகள் இருக்கின்றன. ஆனாலும் வதந்தியே மக்களை ஈர்க்கிறது. இந்த உளவியல் சிக்கல் காலத்திற்கேற்ற வகையில் தொடர்கிறது.