கரூரில் கட்சிக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த கொடூரத்திற்குப் பிறகு, அரசியல் கட்சிக் கூட்டங்கள், ரோடு ஷோ எனப்படும் நகர்வலம் ஆகியவற்றுக்கு ஏற்ற வகையில் நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றிருக்கிறது. கரூர் கொடூரத்திற்கு முன்பே, குறிப்பாக த.வெ.க தலைவரான நடிகர் விஜய் நடத்தும் ரோடு ஷோக்களில் கட்டுப்பாடற்ற நிலை இருப்பதை சுட்டிக்காட்டி, நெறிமுறைகளை வகுத்து தரக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக ஆலோசிப்பதற்கான அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு நவம்பர் 6ஆம் நாள் நடத்தியது.
ஆளுங்கட்சியான தி.மு.க, எதிர்க்கட்சியான அ.தி.மு.க, மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, பா.ம.க, வி.சி.க, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் இதில் கலந்துகொண்டன. அந்தக் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தமிழ்நாடு அரசின் வரைவு முன்மொழிவு அறிக்கை அச்சிட்டுத் தரப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

•மேடை, பந்தல், மின்சாரம் உள்ளிட்டவை குறித்த பாதுகாப்பு குறித்து, நிகழ்ச்சிக்கு 4 மணிநேரம் முன்பாக, அங்கீகரிக்கப்பட்ட தனியார் பொறியாளர் மூலம் சான்றிதழ் பெற்று காவல்துறையிடம் வழங்கவேண்டும்.
- வருவாய்த்துறை-நகராட்சி நிர்வாகத்தின் விதிகளுக்கு உட்பட்டு கொடிக்கம்பம், பேனர்கள் அமைக்க வேண்டும்.
•இடத்தின் கொள்ளளவைவிடக் கூட்டம் அதிகமானால், தடுப்பு ஏற்படுத்தி அதிக கூட்டத்தினரை தனி இடத்தில் ஒழுங்குபடுத்த வேண்டும்.
•கூட்டம் நடத்த அரசு-காவல்துறை தரப்பில் அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் அனுமதி பெற 10 நாட்களுக்கு முன்பும், அங்கீகரிக்கப்படாத இடத்தைக் கேட்டால் 21 நாட்களுக்கு முன்பும் விண்ணப்பிக்க வேண்டும்.
•எதிர்பார்க்கும் கூட்ட அளவு, அதற்கேற்ற வாகனங்களின் எண்ணிக்கை, வி.ஐ.பி. பேச்சாளரின் வாகனங்கள் உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே தெரிவித்து அனுமதி பெறவேண்டும்.
- கூட்டத்திற்கு 5 நாட்கள் முன் அனுமதி வழங்கப்படும். இல்லையென்றால், எழுத்துப்பூர்வமாக விவரம் தெரிவிக்கப்படும்.
•கூட்டத்தைக் கண்காணிக்க கேமரா, கட்டுப்படுத்த ஒலிபெருக்கி அறிவிப்புகள், மின்சாரம் தடைபடாமல் இருக்க ஜெனரேட்டர் வசதிகள் செய்ய வேண்டும்.
•கூட்டம் நடத்துபவர்கள் 100 பேருக்கு ஒரு தன்னார்வலரை நியமிக்க வேண்டும். காவல்துறை அதிகபட்சம் 200 பேருக்கு ஒரு காவலர், குறைந்தபட்சம் 50 பேருக்கு ஒரு காவலர் என பாதுகாப்பை வழங்க வேண்டும்.
•கூட்டத்தினருக்கு 100 பேருக்கு ஒரு கழிவறை, 100 மீட்டரில் ஒரு குடிநீர் வசதி அமைக்க வேண்டும். சிறப்பு பேச்சாளரின் வாகனங்களைப் பின் தொடர்வதைத் தவிர்க்க வேண்டும்.
•குறிப்பிட்ட நேரத்தில் கூட்டம் நடத்துவது, தனியார் சொத்துக்கு சேதம் ஏற்படாமல் பாதுகாப்பு, சேதப்படுத்தினால் இழப்பீடு, கர்ப்பிணிகள்-குழந்தைகள்-மாற்றுத்திறனாளிகள் நலன்
என்பன உள்ளிட்ட நெறிமுறைகள் இதில் வகுக்கப்பட்டிருப்பதுடன்,
5000 முதல் 10000 வரை மக்கள் கூடும் கூட்டங்களுக்கு 1 லட்ச ரூபாய் காப்புத்தொகை, 10ஆயிரம் முதல் 20ஆயிரம் வரை கூடும் கூட்டங்களுக்கு 3 லட்சம் காப்புத்தொகை, 20ஆயிரம் முதல் 50ஆயிரம் வரை கூடினால் 8 லட்சம் காப்புத்தொகை, 50ஆயிரம் பேருக்கு மேல் கூடினால் 20 லட்ச ரூபாய் காப்புத்தொகை எனவும் அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சேதங்களை ஏற்படுத்தினால் இழப்பீடுகளை வழங்கும் வகையில் இந்தக் காப்பீட்டுத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நெறிமுறைகளுக்கம் காப்புத் தொகைக்கும் கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகள் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்துள்ளன. ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகளின் பரப்புரைகளுக்குத் தடை விதிக்க முடியாது. விதிக்கவும் கூடாது. எந்த ஆட்சியாக இருந்தாலும் இந்த நெறிமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும். காப்புத் தொகை கட்டுவது என்பது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் சாத்தியமானதல்ல. அதனால், இந்த நெறிமுறைகளும் காப்புத் தொகையும் அரசியல்கட்சிகளின் அடிப்படை உரிமையான பரப்புரை உரிமையைப் பறிக்கக்கூடாது என்பதை பல்வேறு அரசியல் கட்சிகளும் தெரிவித்துள்ளன.
கருத்துகளைப் பரிசீலித்து, தற்போது வகுக்கப்பட்டுள்ள வரைவு நெறிமுறைகளில் தேவையான மாற்றங்களை செய்து நிறைவேற்ற வேண்டியது அரசின் கட்டாயக் கடமை. அரசியல் கட்சிகளின் அடிப்படை உரிமை பறிபோகக்கூடாது என்பது எந்தளவு முக்கியமோ, அதே அளவுக்கு ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தங்களுடைய நிகழ்ச்சிகளை நடத்தும்போது மிகவும் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும் என்பதும் மிக முக்கியமானதாகும். அந்தப் பொறுப்பை மறந்ததால்தான் கரூரில் பெருந்துயரம் ஏற்பட்டது. இனி அது தொடரக்கூடாது.
