இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து தமிழ்நாட்டில் பெரியளவில் எந்த ஆர்வமுமில்லை. இலங்கை இனப்பிரச்சினையைத் தமிழ்நாட்டு தேர்தல் களத்திற்கான வாக்கு அரசியலாக மாற்றிய கட்சிகள்கூட இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசு குறித்து அதிகம் பேசவில்லை.
தமிழ்த் தேசியம் என்ற பெயரில் திராவிடக் கட்சிகளுக்கு எதிராக அரசியல் செய்யும் கட்சிகளுக்கு இலங்கையில் வாழும் தமிழர்கள் மீது உண்மையான அக்கறை ஒருபோதும் இருந்ததில்லை. இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வசதியாக வாழும் தமிழர்களிடமிருந்து திரள் நிதி திரட்டி அதில் அரசியல் பிழைப்பு நடத்துவது மட்டுமே அத்தகைய கட்சிகளின் ஒரே நோக்கமாக இருந்து வருகிறது.
விடுதலைப்புலிகள் அமைப்புடன் நேரடித் தொடர்பும், ஃபோட்டோ ஷாப்போ-கற்பனைக் கதைகளோ இல்லாமல் ஈழப்பகுதிக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களை சந்தித்தவருமான ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., இலங்கை தேர்தல் முடிவுகளில் ஜனாதிபதி அநுரா திசநாயகாவின் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு கிடைத்திருக்கும் அறுதிப்பெரும்பான்மை, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கு சவாலாக அமையும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
வைகோ இப்படித் தெரிவித்திருப்பதற்கு காரணம், ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) என்ற பெயரில் தென்னிலங்கையில் சிங்களத் தேசியத்தை முன்னெடுத்த ஆயுதம் தாங்கிய இடதுசாரி அமைப்புதான் பின்னர் பலவித அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு தேசிய மக்கள் சக்தி என்ற அரசியல் கட்சியாகக் களமிறங்கி ஆட்சியைப் பிடித்துள்ளது. 1980களில் இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் தமிழர் வாழும் பகுதிகளில் சிங்கள ராணுவத்தால் இனவாத கொடுந்தாக்குதல்கள் நடைபெற்ற காலத்தில், இலங்கையின் தெற்குப் பகுதியில் சிங்கள தேசியவாதத்தை முன்னிறுத்தியது ஜே.வி.பி. இயக்கம். இலங்கை அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஜே.வி.பி.யினர் அரசுப் படைகளால் வேட்டையாடப்பட்டனர்.
விடுதலைப்புலிகள் உள்ளிட்ட தமிழ்ப் போராளி அமைப்புகளின் தமிழீழம் எனும் தனிநாடு கோரிக்கையை ஜே.வி.பி. ஆதரிக்கவில்லை. ஒன்றுபட்ட இலங்கைக்குள் உரிமைகளை நிலைநாட்டுவது என்பதே அதன் நோக்கமாக இருந்தது. ஜே.வி.பி.யின் கொள்கைகளை அடித்தளமாகக் கொண்டதுதான் தேசிய மக்கள் சக்தி என்பதால் அதன் அறுதிப்பெரும்பான்மை வெற்றியால் இலங்கையில் வாழும் தமிழர்களின் பறிபோன உரிமைகள் மீட்கப்படுமா, மிச்சமிருக்கும் உரிமைகளாவது நீடிக்குமா என்ற அச்சத்தை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
2009ஆம் ஆண்டு மே மாதத்தில் இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்திற்குமான யுத்தம் முடிவுக்கு வந்த பிறகு, கடந்த 15 ஆண்டுகளில் தமிழர் பகுதிகளிலும் சிங்களப் பகுதிகளிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மகிந்த ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே ஆகியோரின் ஆட்சியில் குடும்ப நலனும், ஆடம்பரமும், சுயநலமும் மேலோங்கியிருந்ததால் இலங்கையின் பொருளாதாரம் படுவீழ்ச்சியடைந்து, உணவுக்கே தட்டுப்பாடு என்ற நிலை இலங்கைத் தீவு முழுவதும் ஏற்பட்டுவிட்டது. ரணில் விக்ரமிசிங்கேயின் சந்தர்ப்பவாத அரசியலும் அம்பலமாகிவிட்டது.
பொருளாதார பாதிப்பினால் சிங்களர்கள், தமிழர்கள் என்ற வேறுபாடின்றி இலங்கையில் உள்ள அனைவரும் பாதிக்கப்பட்டதால் கொழும்பு, கண்டி, திரிகோணமலை என பல இடங்களிலும் இரு தரப்பினருமே ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். கோத்தபய அரசுக்கு எதிரான சிங்களமும் தமிழும் கலந்த ஆங்கிலப் பாடல் ஒன்று ஆர்ப்பாட்டத்தில் ஒலித்தது. சோற்றுக்கு வழியில்லாத நாட்டில் பசிக்கு இன-மொழி பேதமில்லை. எல்லாருக்கும் 3 வேளை பசிக்கும் என்பதால் தமிழ்-சிங்கள மக்கள் இரு தரப்புமே ஆட்சிக்கு எதிரான மனநிலையுடன் செயல்பட்டனர்.
தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் ஆயுதப் போராட்டம் முடிவடைந்த நிலையில், தமிழர்களின் அரசியல் இயக்கங்களால் உறுதியான நிலைப்பாட்டுடன் செயல்பட முடியவில்லை. பழைய அரசியல் தலைகளின் சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளை இன்றுள்ள தலைமுறை ஏற்க முன்வரவில்லை. புதிய அரசியல் கூட்டணிகளும் வலிமை பெறவில்லை.
யுத்தகாலத்தில் புலம்பெயர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளிலும் கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இரண்டாவது தலைமுறையாக வாழ்க்கையைத் தொடர்வதால், இலங்கையில் உள்ள தங்களின் சொந்த மண்ணுக்குத் திரும்பி வரத் தயாராக இல்லை. யுத்தத்தில் உயிர்பிழைத்த தமிழீழ மக்களுக்கு தங்கள் நிலத்தை விட்டால் வாழ்வதற்கு வேறு வழியில்லை. அதனால், இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலை உணர்ந்தும், அதனை ஏற்றுக்கொள்ளும் வகையிலும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்திருக்கிறார்கள்.
கிளிநொச்சி, மட்டக்களப்பு பகுதிகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வெற்றி பெற்ற போதிலும், யாழ்ப்பாணம் மாவட்டம் உள்ளிட்ட தமிழர்கள் வாழும் பகுதிகளில் பழைய ஜே.வி.பி.யான தேசிய மக்கள் சக்தியும் 3 தொகுதிகளை வென்றுள்ளது. டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட மூத்த தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மண்ணிலேயே தோற்கடிக்கப்பட்டுள்ளனர். மனோ கணேசன் போன்ற கொழும்பு பகுதியைச் சேர்ந்த தமிழர் தலைவர்களும், மலையகத்தைச் சேர்ந்த தமிழர் தலைவர்களும இந்தத் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.
ஆயுதம் தாங்கிய ஜே.வி.பி.யின் பழைய பார்வைகளும் கொள்கைகளும் இப்போது பெருமளவு மாறி, ஜனநாயகப் பாதைக்கான இயக்கமாக தேசிய மக்கள் சக்தி கட்டமைக்கப்பட்டதால்தான் அதனால் இத்தகைய வெற்றியைப் பெற முடிந்துள்ளது. அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 12 பேர் பெண்கள். அவர்களில் மூவர் தமிழ்ப் பெண்கள். 12 பேரில் ஒருவரான ஹரிணி அமரசூர்யா பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கிறார். இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் இவர்.
தேசிய மக்கள் சக்தி சார்பில் வெற்றி பெற்ற மூன்று தமிழ்ப் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சரோஜா போல்ராஜ் மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் 1983 இனக்கலவரத்தின்போது கண்டி பகுதியில் பாதிப்புக்குள்ளான குடும்பத்தைச் சேர்ந்த இவர், மாத்தளைக்கு குடிபெயர்ந்து அரசியலில் ஈடுபட்டு, தமிழ்-சிங்களம் ஆகிய இருதரப்பினரின் ஆதரவையும் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மீன்வளம் மற்றும் கடல் தொழில் அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகர் என்ற தமிழரும் இடம்பிடித்துள்ளார்.
தமிழர் நிலங்கள் அவர்களிடமே ஒப்படைக்கப்படும் என்கிற ஜனாதிபதியின் வாக்குறுதியும், மொழி-இனம் சார்ந்த உரிமைகள் நிலைநாட்டப்படும் என்கிற எதிர்பார்ப்பும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியில் முக்கியமானவையாகப் பார்க்கப்படுகின்றன. ஒட்டுமொத்த இலங்கையும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும்போதுதான் மற்ற பிரச்சினைகளில் கவனம் திரும்பும். இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் இலங்கை தொடர்பான அணுகுமுறையும் தமிழர்களின் உரிமைகளின் மீதான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.
இத்தனையையும் இலங்கையின் ஜனாதிபதியும் பிரதமரும் எப்படிக் கையாளப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே இலங்கையின் வாழும் தமிழர்களின் நிலை தெரிய வரும்.