சென்னை பெரியார் திடலில் ஒரு நிகழ்வுக்காக ஆட்டோவில் வந்த பெண்மணி, தன் கையில் இருந்த பணப்பையை மறதியாக வைத்துவிட்டு இறங்கிவிட்டார். அந்தப் பையில் இருந்தது ஒன்றரை இலட்ச ரூபாய். பெருந்தொகையை இழந்துவிட்டோமே என்ற பரிதவிப்பில் அவர் கலங்கித் தவித்த நிலையில், திராவிடர் கழகம் அமைத்து வரும் பெரியார் உலகத்திற்காக 10 இலட்ச ரூபாய் நிதியளிப்பதற்காக அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், அந்தப் பெண்மணியிடம் நடந்ததைப் பற்றி விசாரித்து, பணம் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையும் ஆறுதலும் தெரிவித்து, தன்னுடன் இருந்த கட்சி நிர்வாகிகளை அழைத்து, அந்தப் பெண்மணிக்கு பணம் திரும்பக் கிடைக்க காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கும்படி சொல்லி அனுப்பினார்.
பெரியார் திடலுக்கு எதிரில்தான் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் உள்ளது. அதனால், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அந்தப் பெண்மணியை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று முறைப்படி புகார் தெரிவித்தனர். சி.சி.டி.வி. கேமரா பதிவுகள், வாகனப் பதிவு எண் உள்ளிட்டவற்றைக் கண்டறிந்தது காவல்துறை. எந்த ஆட்டோவில் அந்தப் பெண்மணி பணத்தைத் தவறவிட்டாரோ, அந்த ஆட்டோ ஓட்டுநரின் செல்பேசி எண்ணை வாகனப் பதிவு விவரங்கள் மூலம் கண்டறிந்து, உடனடியாக அவரைத் தொடர்பு கொண்டுள்ளனர். ஆட்டோவில் பெண்மணி தவறவிட்ட பணப்பை இருப்பதை ஓட்டுநர் தெரிவிக்க, உடனே அதை காவல் ஆணையரகத்தில் ஒப்படைக்கச் சொல்லியுள்ளது காவல்துறை. ஒரு மணி நேரத்தில், அந்தப் பெண்மணி ஒன்றரை இலட்ச ரூபாயைத் திரும்பப் பெற்றார். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.

பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் மக்களின் துயர் துடைப்பதற்கு தாமாக முன் வருவதுதான் முதல் பண்பு. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் திருமாவளவன் தற்போது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக இருக்கிறார். அவருக்குப் பணிகள் அதிகம். அவர் பெரியார் திடலுக்கு வந்தது வேறொரு காரணத்திற்காக. ஆனாலும், பொமுக்களில் ஒருவர் தன் பணத்தை இழந்து தவித்ததைப் பார்த்து, உரிய நடவடிக்கை மூலம் அதைப் பெற்றுத் தரும்படி கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்ததால், பணம் விரைந்து கிடைத்துள்ளது.
சாதாரண மக்களுக்கு சட்டம் பற்றிய விழிப்புணர்வு இருக்காது. அதுவும் பணத்தைப் பறிகொடுத்த நிலையில் பெண்மணியால் என்ன செய்வதென்று யோசிக்க முடியாது. அந்த நிலையில், சட்டவழிப்படி முயற்சி செய்து பணத்தை மீட்டிருப்பதன் மூலம், சட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கையும் உயர்ந்திருக்கிறது. பொறுப்புடன் நடந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநரின் செயல்பாடும் இதில் முக்கியமானது. காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து, தங்கள் கடமையை சிறப்பாக நிறைவேற்றி, பாராட்டைப் பெற்றிருக்கிறார்கள்.
வடகிழக்குப் பருவ மழை தீபாவளி நேரத்தில் தொடங்கியதால், பட்டாசுக் குப்பைகளை அள்ள வேண்டிய பணியும், மழை நீர் தேங்கும் இடங்களில் அதனை சரி செய்யும் பணியும் தூய்மைப் பணியாளர்களுக்கு சேர்ந்து கொண்டது. இதுபோன்ற இயற்கைப் பேரிடர் நேரங்களில் இரவு பகல் பார்க்காமல் செயல்படும் முன்களப் பணியாளர்களாக தூய்மைப் பணியாளர்கள் இருக்கிறார்கள். தங்கள் குடும்பம், குழந்தை பற்றிக் கவலை கொள்ள நேரமின்றி, மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் அவர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஊதியம், பணி நிரந்தரம் தொடர்பான பல கோரிக்கைகள் அவர்களுக்கு உண்டு. அதற்காக சென்னை மாநகராட்சியில் அவர்கள் நடத்திய போராட்டம் மாநிலம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது.

தங்கள் சுயதேவையைப் பின்தள்ளி, மக்களின் நலன் கருதி பாடுபடும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் மூன்று வேளை உணவு வழங்கிடும் அரசின் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் இந்த மூன்று வேளை உணவுத் திட்டம் பின்னர் மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கும் பரவலாக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவேற்கத்தக்க இந்த உணவுத் திட்டம் போலவே, வடகிழக்கு பருவ மழைக் காலம் நிறைவடைகிறவரை சென்னை போன்ற நகரங்களில் வசிக்கும் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத அளவுக்கு, சாலைகளை சீரமைத்தல், தேங்கும் தண்ணீரை வெளியேற்றுதல், மின்கம்பிகளால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்தல், மின்வெட்டு ஏற்பட்டால் சரிசெய்தால், அவசர கால மருத்துவப் பணிகள் ஆகியவையும் அவசியம். இவை குறித்து முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் மேற்கொண்டுள்ள ஆலோசனைகளும், நேரடி ஆய்வுகளும் பலன் தரும் என்ற நம்பிக்கையை அளிக்கின்றன.
எது நடந்தாலும் ஓடிப்போய் முடங்கிவிடாமல், களத்தில் நின்று எதிர்கொள்பவர்களே தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவர்கள்.
