
’’இசை உலக சரித்திரத்திலேயே ஒரு இசையமைப்பாளருக்கு அரசு பாராட்டு விழா நடத்தியது தமிழ்நாடு அரசுதான். அதுவும் இந்த விழாதான்’’ என்று தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் 13.09.2025 அன்று நடந்த சிம்பொனி சிகரம் தொட்ட இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு -50 பாராட்டு விழா பற்றி அந்த விழாவிலேயே பெருமிதத்துடன் குறிப்பிட்டார் இளையராஜா.
இளையராஜாவுக்கு இந்த விழாவினை ஏன் தமிழ்நாடு அரசு முன்னெடுத்தது என்பது குறித்து விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே, ‘’நம்முடைய இசைஞானி அவர்கள், கலைத்தாய்க்கு மட்டும் சொந்தமானவர் இல்லை; தமிழ்த்தாய்க்கும் சொந்தமானவர். அதனால்தான் தமிழ்நாடு அரசு சார்பில் இந்தப் பாரட்டு விழாவை, அவரைக் கொண்டாடும் விழாவாக நடத்திக் கொண்டிருக்கிறோம்’’ என்று குறிப்பிட்டார். ’’சிம்பொனியின் சிகரம் தொட்டு உலக சாதனை படைத்த தமிழனை பாராட்டுவது தமிழ்நாடு அரசின் கடமை என்று கருதியிருக்கிறார் முதலமைச்சர். அதனால்தான் இந்த விழாவை நடத்தி இருக்கிறார்’’ என்று விழா குறித்து தனி வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார் இளையராஜா.

ஒரு பாராட்டு விழாவை இவ்வளவு சிறப்பாக ஒரு முதலமைச்சர் முனைப்பெடுத்து , அரசு சார்ந்த எல்லா அமைச்சர்களும், அதிகாரிகளும் அதிக ஈடுபாட்டுடன் நடத்தியதில், தமிழ்நாடு அரசு சார்பில், தன்னையும் இசையையும் போற்றிய முதலமைச்சரின் செயலை நினைத்து அதீத மகிழ்ச்சியின் காரணமாக விழாவில் பேசிய இசைஞானிக்கு சிறிது நேரம் பேச்சு வரவில்லை; இலேசாக கண் கலங்கினார்.
சிம்பொனி இசையமைக்க இளையராஜா வெளிநாடு புறப்படுவதற்கு முதல்நாளே அவரை நேரில் சந்தித்து வாழ்த்திய முதல்வர், சிம்பொனி இசையமைத்துவிட்டு சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் அவருக்கு அரசு சார்பில் மரியாதை அளித்தார். அடுத்து அரசு சார்பில் பிரம்மாண்ட பாராட்டு விழாவும் எடுத்ததில் நெகிழ்ந்து போயிருந்தார் இளையராஜா.
‘’முத்தமிழறிஞர் கலைஞர் என் மேல் வைத்த அதே அன்பை அவரது தவப்புதல்வன் மு.க.ஸ்டாலினும் வைத்திருக்கிறார். அதற்கு இசைதான் காரணம் என்று நினைக்கிறேன்’’ என்று அந்த நெகிழ்ச்சியை விழாவில் வெளிப்படுத்தினார்.
‘இசைதான் காரணம்’ என்று இளையராஜா குறிப்பிட்டதை மெய்ப்பிக்கும் விதமாகவே விழாவில் முதலமைச்சரின் பேச்சும் அமைந்திருந்தது. ’’அரை நூற்றாண்டு காலத்தில் ராஜாவின் பாடலை முணுமுணுக்காத உதடுகளே தமிழ்நாட்டில் இருக்க முடியாது. ராஜாவின் பாடல்களை மனதில் ஏற்றி, தங்களின் இன்ப துன்பங்களைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளாத மனிதர்களே இருக்க முடியாது. இளையராவின் இசை, தாயாக தாலாட்டுகிறது. காதலின் உணர்வுகளைப் போற்றுகிறது. வெற்றிப் பயணத்திற்கு ஊக்கமளிக்கிறது. வலிகளை ஆற்றுகிறது. இவர் இளையராஜா மட்டுமல்ல; இணையற்ற ராஜா’’ என்று போற்றினார் முதலமைச்சர்.

கலைஞர் என் மேல் வைத்த அதே அன்பை.. என்று இளையராஜா குறிப்பிட ஒரு முக்கியக் காரணம்,’இசைஞானி’ பட்டம். காரைக்குடியில் நடந்த பாராட்டு விழாவிற்கு தலைமையேற்று கலைஞர் அன்று கொடுத்த அந்த பட்டம்தான் இளையராஜா என்றால் இசைஞானி என்று தமிழ்த்திரையுலக வரலாற்றில் நிலைத்திருக்கிறது. இளையராஜாவுக்கு திட்டமிட்டு அந்த பட்டத்தை வழங்கவில்லை கலைஞர். ’’இளையராஜா மீதிருந்த பாசமும், அவர் இசை மீதிருந்த ஈர்ப்பும்தான் அந்த பட்டத்தை வழங்கக் காரணம்’’என்று கலைஞர் முன்பு சொன்னதை விழாவில் குறிப்பிட்டார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
கலைஞரைப் போலவே முதலமைச்சரும், அவரைத் தொடர்ந்து அவரது புதல்வர் உதயநிதி ஸ்டாலினும் இசையைப் போற்றினார். ’’இசையும் இளையராஜாவும் நம்முடன் எப்போது இணைபிரியாமல் இருப்பவர்கள். நம்மை தாலாட்டிக் கொண்டிருக்கும் இசைத்தாய்தான் இளையராஜா’’ என்று சொன்ன துணை முதல்வர், ‘’சென்னை டு விழுப்புரம் தூரம் எவ்வளவு என்றால் 25 இளையராஜாவின் பாடல்கள் தூரம் என்று ரசிகர்கள் சொல்லிவிடுவார்கள்’’ என்று சொன்னது இளையராஜா ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. அதனால்தான் அரங்கம் அதிர்ந்தது.

பொதுவாக முதலமைச்சரிடத்தில்தான் கோரிக்கை வைப்பார்கள். ஆனால், தமிழ்நாட்டு மக்களின் சார்பில், தமிழர்களின் சார்பில் முதலமைச்சரே இளையாராஜாவுக்கு கோரிக்கை வைத்து விழாவில் வியப்பை ஏற்படுத்தினார். ‘’இளையராஜா மட்டும் இசையமைத்திருந்தால் திருக்குறளும், நற்றிணையும், புறநானூறும், குறுந்தொகையும், ஐங்குறுநூறும், பதிற்றுப்பத்தும், பரிபாடலும், சிலப்பதிகாரமும் எங்களுக்கு மனப்பாடம் ஆகியிருக்கும் என்று சோசியல் மீடியால் ஒருவர் எழுதியிருக்கிறார். தமிழ் ஆர்வலராக நான் இதையே கோரிக்கையாக வைக்கிறேன். சங்கத்தமிழுக்கு, தமிழ் இலக்கியங்களுக்கு இசையமைத்து ஆல்பங்களை வெளியிட வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார். முதலமைச்சரே தனக்கு இந்த கோரிக்கை வைத்ததை பெருமிதத்துடன் ஏற்றுக்கொண்டிருக்கும் இளையராஜா, ’’அந்த வேண்டுகோளை கண்டிப்பாக நிறைவேற்றுவேன்’’ என்று பாராட்டு விழா குறித்து வெளியிட்டிருக்கும் தனி வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார்.
இளையராஜாவுக்கு நடந்த இந்த பாராட்டு விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்று திரையுலகமே திரண்டு வந்திருந்து வாழ்த்தியது. 87 இசைக்கலைஞர்களை வைத்து சிம்பொனியும் இசைக்கப்பட்டது. அதனால்தான், இப்படிப்பட்ட சிறப்பான விழாவில் ஒரு அறிவிப்பு வெளியிடாமல் இருக்க முடியுமா? என்று கேட்டு, ‘’இசைத்துறையில் ஆர்வத்துடன் சிறந்த இசையைப் படைக்கின்ற இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கின்ற விதமாக தமிழ்நாடு அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் ‘இசைஞானி இளையராஜா’ பெயரில் விருது வழங்கப்படும்’’ என்று அறிவித்தார் முதலமைச்சர். அறிவிப்போடு நின்றுவிடாமல், ‘’இசைமேதை இளையராஜாவுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்’’ என்ற கோரிக்கையினையும் வைத்து, ‘’இது நிச்சயம் நிறைவேறும்’’ என நம்பிக்கையும் தெரிவித்தார்.
இசைஞானியின் ரசிகர்களும் இதே நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.