மத்திய பா.ஜ.க அரசு தேசிய கல்விக் கொள்கை மூலமாக நாடு முழுவதும், தான் விரும்புகிற வகையிலான கல்வித் திட்டத்தைக் கொண்டு வர முயற்சித்தபோது, அது கல்விக் கொள்கையா, காவிக் கொள்கையா என்ற கேள்வியைக் கேட்டவர்களில் முதன்மையானவர்கள் இடதுசாரிகளான கம்யூனிஸ்ட்டுகள். தேசிய கல்விக் கொள்கை பற்றிய அறிவிப்பு வந்தபோதே அதனை, ‘மதயானை’ என எச்சரித்து எதிர்த்தவர் தி.முக. .தலைவரான கலைஞர் கருணாநிதி. தமிழ்நாட்டில் காங்கிரஸ், வி.சி.க, ம.தி.மு.க., முஸ்லிம் இயக்கங்கள் உள்ளிட்ட பலவும் பா.ஜ.க. அரசின் தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்தன.
தமிழ்நாட்டில் தற்போது தி.மு.க ஆட்சி நடைபெறுகிறது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி முன்னணியின் ஆட்சி நடைபெறுகிறது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்கமாட்டோம் என்ற தமிழ்நாடு அரசு தனக்கான மாநிலக் கல்விக்கொள்கையை அறிவித்துள்ளது. அத்துடன், மத்திய அரசின் சார்பிலான பி.எம்.ஸ்ரீ பள்ளிகளில் மும்மொழிப் பாடத்திட்டம் என வரையறுக்கப்பட்டதால், இந்தி மொழியைக் கட்டாயமாக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால், தமிழ்-ஆங்கிலம் எனும் இருமொழிக் கொள்கையைக் கொண்ட தமிழ்நாட்டில் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை அனுமதிக்க முடியாது என தி.மு.க அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.

பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை அனுமதிக்காவிட்டால் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 2000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகுதியை ஒதுக்க முடியாது என பா.ஜ.க. அமைச்சர் அறிவித்தார். கோடிகளை இழந்தாலும் கொள்கையை இழக்கமாட்டோம், இருமொழிக் கொள்கை உள்ள தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை என்று கூறிய தி.மு.க அரசு, மத்திய அரசு கல்வி நிதி வழங்காததை எதிர்த்து நீதிமன்றத்திற்கு சென்றது.
கேரள மாநிலத்திலும் பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் குறித்த விவாதங்கள் நடைபெற்ற நிலையில், மத்திய அரசின் கல்வித்துறையுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி அரசு மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை ஏற்பதாக, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. கேரள மாநில கல்வித் துறை அமைச்சர் வி.சிவன்குட்டி இது பற்றி கூறுகையில், “பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் நாம் கையெழுத்திட்டதன் மூலம் 1476.13 கோடி ரூபாய் நிதி நமது மாநிலத்திற்கு கிடைக்கும். ஒரே கொள்கையில் மட்டும் நம்மால் நிற்க முடியாது. காலகட்டத்துக்கு ஏற்ப நாம் மாறவேண்டும். கொள்கையைக் கூறிக்கொண்டு கோடிக்கணக்கான ரூபாயை நாம் இழக்க வேண்டுமா?” எனத் தெரிவித்தது ஊடகங்களில் வெளியானது.
ஒக்கி புயல் உள்பட கேரளாவில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளில் மத்திய பா.ஜ.க. அரசு அந்த மாநிலத்திற்கு உரிய நிதி அளிக்காமல் வஞ்சித்த நிலையில்,
தேசிய கல்விக் கொள்கை உள்பட அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலை எதிர்க்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான அரசு, மாநிலத்தின் நிதித் தேவை கருதி பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டதை அக்கட்சியினரும் உணர்ந்திருந்தனர்.
ஆளும் இடதுசாரி முன்னணியின் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றுள்ளது. அதற்கு 16 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியின் நிலையிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முற்றிலுமாக மாறுபட்டிருந்தது. மாநிலத்திற்கு நிதி தேவைதான் என்றாலும், அதற்காக பா.ஜ.க அரசின் கல்வியை காவிமயமாக்கும் திட்டத்தை ஏற்க முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில அமைப்பு தன் எதிர்ப்பைத் தெரிவித்தது.
கம்யூனிஸ்ட்டுகள் தாய்மொழிக் கல்வியை ஆதரிப்பவர்கள். அதே நேரத்தில், இந்தித் திணிப்பு உள்ளிட்டவற்றில் அவர்களின் பார்வை தமிழ்நாட்டிலிருந்து சற்று மாறுபட்டது. அதனால், பி.எம்.ஸ்ரீ பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்பதைவிட, அது கல்வி உரிமையை மாநில அரசிடமிருந்து முற்றிலுமாகப் பறித்து விடுகிறது என்பதும், இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிராக ஒற்றைப் பார்வையுடனான கல்வியை முன்னிறுத்துகிறது என்பதும், ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் பா.ஜ.க. முன்னெடுக்கும் எதையும் ஏற்கக்கூடாது என்பதும்தான் இந்திய கம்யூனிஸ்ட் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களாகும்.
கூட்டணியில் உள்ள கட்சியின் கருத்துக்கு மதிப்பளித்து கேரள முதலமைச்சர் பினரயி விஜயன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய நிலையில், பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்காமல் சட்டப்போராட்டம் மேற்கொண்ட தமிழ்நாடு அரசை முன்மாதிரியாகக் கொண்டு செயல்படுவோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்தது. அதனை ஏற்று, மத்திய அரசிடம் சில விளக்கங்களை கேட்டு தெளிவு பெறும் வரை கேரளாவில் பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திறப்பதை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது சகேதார மாநில அரசான கேரளா.
