சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் பீஹார் மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர் எனும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வை அவசர அவசரமாக மேற்கொண்ட தலைமைத் தேர்தல் ஆணையம் ஏறத்தாழ 65 இலட்சம் வாக்காளர்களை நீக்கியது. இதில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள், தலித் மக்கள் என்று கூறி எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
மத்திய பா.ஜ.க அரசின் விருப்பப்படி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று பல கட்சிகளும் குற்றம்சாட்டிய நிலையில், “இந்தியக் குடியுரிமை அல்லாதவர்கள் இந்தியாவில் வாக்குரிமை பெற முடியாது. குடியுரிமை இல்லாதவர்கள் வாக்காளர்களாக இருப்பதால் இந்த சிறப்பு சீராய்வை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது” என்றது தேர்தல் ஆணையம். அத்துடன், வாக்காளரின் குடியுரிமைக்கான ஆதாரமாக ஆதார் அட்டையை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தது.
ஆதார் அட்டை என்பது குடியுரிமை ஆவணமல்ல. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவில் குடியுரிமைக்கென தனி ஆவணம் என ஒன்று கிடையாது. ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவை இந்தியக் குடிமகன்களாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களேயன்றி, குடியுரிமைக்கென தனி ஆவணம் எதுவுமில்லை. மேற்சொன்ன ஆவணங்கள் இல்லாமலும் இந்தியாவில் பல இந்தியர்கள் இருக்கிறார்கள் என்பதே உண்மை. இலங்கை உள்ளிட்ட நாடுகளில் அந்தந்த நாட்டுக் குடிமக்களுக்கான தேசிய குடிமக்கள் ஆவணம் எனத் தனியாக ஒன்று உள்ளது. அது போல இந்தியாவில் கிடையாது.

அதே நேரத்தில், ஆதார் அட்டை குடியுரிமைச் சான்று அல்ல என்றாலும் அதுஎன்பது ஒரு முக்கியமான ஆவணம் என்பதை மத்திய அரசே பல விதங்களிலும் ஒப்புக்கொண்டுள்ளது. வங்கிக்கணக்குடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் வருமான வரி கணக்குடன் ஆதாரை இணைக்க வேண்டும். கேஸ் சிலிண்டர் கனெக் ஷனுக்கு ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்கிற நிபந்தனைகள் உள்ள நாட்டில், வாக்குரிமைக்கான ஆதாரமாக ஆதார் அட்டையை ஏற்க மறுப்பது என்ன நியாயம் என்பதுதான் எதிர்க்கட்சிகள் முன் வைத்த கேள்வி.
பெரும்பாலானவர்களிடம் ஆதார் அட்டை இருப்பதால், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தங்கள் வாக்குரிமையை மீண்டும் நிலைநாட்டக் கூடிய ஆவணமாக அதைக் காட்டி, தங்கள் வாக்குரிமையை மீட்டுவிட்டால், யாரைக் குறிவைத்து நீக்கினார்களோ, அந்த வாக்குகள் பதிவாகும்போது தங்களின் வெற்றி கேள்விக்குறியாகிவிடும் என்று பா.ஜ.க. கூட்டணி பயப்படுவதால்தான் ஆதாரை ஏற்க மறுக்கிறது என்றும், அதற்கேற்ப தேர்தல் ஆணையமும் செயல்படுகிறதென்றும் குற்றம்சாட்டினர். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆதார் அட்டை என்பது குடியுரிமைக்கான சான்று அல்ல என்றாலும் அதனை வாக்காளர்களுக்கான ஆவணமாக ஏற்கலாம் என உத்தரவிட்டது. இதற்கிடையே, பீகார் தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்ட நிலையில், தற்போது தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர் எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
அடுத்த ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளும் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தப் பணி நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது. உச்சநீதிமன்றம் வரை வழக்கு தொடர்ந்த காரணத்தால், பீஹாரைப் போல ஒரே மாதத்தில் சீராய்வு பணியை முடிக்காமல், 54 நாட்கள் வரை அவகாசம் அளித்துள்ளது தேர்தல் ஆணையம். அத்துடன், ஆதார் அட்டையை ஆவணமாக ஏற்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பிக்கள் ஏற்கனவே தலைமைத் தேர்தல் ஆணையத்தை சந்தித்து, எஸ்.ஐ.ஆர் பணி மேற்கொள்ளும்போது அதில் வாக்குச்சாவடி அதிகாரியுடன் கட்சியின் வாக்குச்சாடி முகவரும் சேர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர். அரசியல் சட்டம் மற்றும் தேர்தல் ஆணைய விதிகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் அந்தந்த வாக்குச்சாவடி அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட முடியும். இந்த உரிமையையும் தி.மு.க முன்னெடுத்து உறுதிப்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 68ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சவாடிகளிலும் தி.மு.க சார்பில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாலும், ஒரு வாக்குச்சாவடியில் 100 வாக்காளருக்கு ஒருவர் என்ற குழுவை அமைத்திருப்பதாலும், பீஹார் போல தமிழ்நாட்டில் பா.ஜ.க. விருப்பத்திற்கேற்ப தேர்தல் ஆணையத்தால் உண்மையான வாக்காளர்களை நீக்கவோ, போலி வாக்காளர்களை சேர்க்கவோ எளிதாக முடியாது.
அண்மைக்காலமாக வாக்காளர் பட்டியல் குளறுபடி, வாக்களிக்கும் மையங்களில் முறைகேடுகள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான அவநம்பிக்கை ஆகியவை அதிகரித்து வருவதால், தேர்தல் முடியும்வரை கட்சிகள் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் எஜமானர்களான வாக்குரிமை கொண்ட மக்களும் விழிப்பாகத்தான் இருக்க வேண்டும்.
