Representative Image
தமிழ்நாடு 2026ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கப் போகிறது. சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஏறத்தாழ 1 கோடி பேர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வாக்குரிமை உள்ளவர்களும் அடக்கம். வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்களிலும் இருப்பிடச் சான்றிதழ் வழங்க வேண்டிய வாக்காளர்கள் கணிசமாக உள்ளனர். புதிய வாக்காளர்களை இறுதிப் பட்டியலில் சேர்க்க வேண்டும். இத்தனையும் சரியாக நடந்தால்தான் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளரின் உரிமையும் நிலைநாட்டப்படும். அதனை அரசியல் கட்சிகள் கண்காணிக்க வேண்டும்.
சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து தொடக்கத்திலிருந்தே மக்களிடம் விழிப்புணர்வை ஊட்டி வருவது திராவிட முன்னேற்றக் கழகம். அக்கட்சியின் சார்பில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் அதிகாரப்பூர்வ பாக நிலை முகவர்கள் நியமிக்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் தகுதியுள்ள எவரும் நீக்கப்படக்கூடாது என்பதில் கவனமாக செயல்பட்டு வருகிறார்கள். வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்கிறார்கள். ஏற்கனவே, ஓரணியில் தமிழ்நாடு என்ற செயல்பாட்டிற்காகப் பயன்படுத்தப்பட்ட மக்களுடன் ஸ்டாலின் என்ற செயலியில் தங்கள் கட்சி ஆதரவு வாக்காளர்களின் அடையாள அட்டை, வரிசை எண், பாக எண் உள்ளிட்டவை இடம்பெற்றிருப்பதால் தி.மு.க.வினரால் இந்த வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் எவை சரியாக உள்ளது, எவை தவறாக உள்ளது என்பதைக் கண்டறிந்து சரிப்படுத்தும் பணி எளிதாக மேற்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை, ஜெயலலிதா இருந்தவரை தேர்தல் களத்தில் கில்லியாக இருந்தார்கள். 100 வாக்காளருக்கு ஒரு நிர்வாகி என நியமித்து, அந்த வாக்காளர்களில் பெரும்பாலானவர்களை தங்களுக்கு ஆதரவாகத் திருப்புதவற்கு சாம-தான-பேத-தண்டங்களை செய்வதில் அ.தி.மு.கவினர் சாமர்த்தியமாக செயல்பட்டனர். அது அ.தி.மு.க.வுக்கு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றியைத் தந்தது. இப்போது, அ.தி.மு.க.வின் நிலை முன்பு போல இல்லை. பாக நிலை முகவர்களை நியமிப்பதிலேயே பல குழப்பங்கள் உள்ளது. சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணியிலேயும் அ.தி.மு.க. பெரிாகா அக்கறை காட்டவில்லை.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு, தங்கள் ஆதரவு வாக்காளர்கள் இருக்கிறார்களா என்பதை அ.தி.மு.க. கவனிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் ஆணையத்தால் சனி, ஞாயிறு கிழமைகளில் நடத்தப்படும் முகாம்களில் அ.தி.மு.க நிர்வாகிகள் குவிகின்றனர். பழைய வேகம் இல்லாவிட்டாலும், சொந்த வாக்குகளைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றனர். அதைவிட முக்கியமாக, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அவர்கள் நம்பியது போலவே, பிரதமர் நரேந்திர மோடி ஆதரவில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏதேனும் மாய்மாலம் செய்து வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கின்றனர்.
பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மூலமாக கணிசமான அளவில் உண்மையான வாக்காளர்களை நீக்கிவிட்டு, பீகார் உள்ளிட்ட வடமாநில வாக்காளர்களை தமிழ்நாட்டு பட்டியலில் சேர்த்து விடலாம் என்றும், அதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் துணை நிற்கும் என்றும் நினைக்கின்றனர். அத்துடன், திருப்பரங்குன்றம் தீப விவகாரம் போன்ற மதவாத பிரச்சிகனைகளைக் கிளப்பி, தி.மு.க.வை இந்து விரோதி என்று பரப்புரை செய்து, அதன் மூலம் வாக்குகளைத் தங்கள் திருப்பலாம் என்ற கனவில் இருக்கிறார்கள்.
பா.ம.க. அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸிடமும், அவர் மகன் அன்புமணியிடமும் அல்லாடிக் கொண்டிருக்கிறது. யார் உண்மையான பா.ம.க., இரண்டு பா.ம.க.வில் எந்தக் கட்சி யார் பக்கம் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பிற கட்சிகள் இருக்கின்றன. தே.மு.தி.க. எந்தப் பக்கம் போகலாம் என யோசிக்கிறது. பொதுவாக, தி.மு.க.வைத் தவிர வேறு எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்க தே.மு.தி.க. ரெடியாக இருக்கும். இந்த முறை என்னவென்று இனிதான் தெரியும்.
தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அதிகாரத்தில் ஆசை உள்ளது. அதில் குறிப்பாக, மாநிலத் தலைமையை மீறி செயல்படுவதே கட்சி அரசியல் எனக் கருதும் தமிழ்நாடு காங்கிரஸ் பிரமுகர்கள் ஆளுக்கொரு கருத்தைத் தெரிவித்து வருகிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி தன்னுடைய கூட்டணி தி.மு.க.வுடன்தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. அதை எப்படியாவது கெடுக்க வேண்டும் என பல சக்திகள் முயற்சி செய்கின்றன. கம்யூனிஸ்ட் கட்சிகளின் சாய்ஸ் தி.மு.க.தான் என்பது தற்போது வரையிலான நிலவரம். ம.தி.மு.க குறித்து எல்லாருக்கும் கேள்வி உள்ளது.
இந்தத் தேர்தல்களத்தில் அதிகளவில் புரமோட் செய்யப்படும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனது ரசிகர்களை வைப் செய்து தொண்டர்களாக வைப்பதிலேயே முழு கவனத்தையும் செலுத்துகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி, மலேசியா வரை வைப் செய்கிறார்கள். அரசியலில் வேறு திசை அறியாத தினகரன், ஓ.பி.எஸ். போன்றவர்கள் விஜய் பக்கம் கண்களை சிமிட்டுகிறார்கள்.
புத்தாண்டு பிறந்தபிறகு குழப்பங்கள் தெளிந்து, அரசியல் குட்டை தெளிவாகலாம்.
