
இந்தியாவின் முதல் குடிமகன் என்பவர் குடியரசுத் தலைவர். அவருக்குத் துணையான பொறுப்பு என்ற வகையில் குடியரசு துணைத் தலைவர் இருக்கிறார். நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களித்து இவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். மாநிலங்களவைத் தலைவராக இருப்பவரும் குடியரசுத் துணைத் தலைவர்தான்.
கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர் மாநிலங்களவை அலுவல் பணிகளுக்கிடையே திடீரென வெளியே சென்றார். சிறிது நேரத்தில் அவரது ராஜினாமா அறிவிப்பு வெளியானது. தன் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாக குடியரசு துணைத் தலைவர் ஏன் இந்த முடிவை எடுத்தார், என்ன நிர்பந்தம், நாட்டை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றிபெற்றவர் தன்கர். அதற்கு முன்பு மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசின் எழுதப்படா விதியின்படி, பா.ஜ.க அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில், அரசியல் சாசனத்திற்கு முரணாக ஆளுநரை வைத்து, மாநில அரசுக்கு நெருக்கடிகளை உருவாக்குவது, இணை ஆட்சி நடத்த முயற்சிப்பது என்கின்ற இலக்கணங்களை மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஜகதீப் தன்கர் மேற்கொண்டார். அவருடைய அந்தத் ‘திறமை’க்குப் பரிசாகத்தான் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக்கப்பட்டு பொறுப்புக்கும் வந்தார்.

மாநிலங்களவைத் தலைவரான குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கர் அந்தப் பொறுப்பிலும் பல நேரங்களில் பாரபட்சமாக நடந்து கொண்டார். ஆளுங்கட்சியினரான பா.ஜ.க.வினருக்கு அதிக நேரம் ஒதுக்குவது, எதிர்க்கட்சியினரின் நேரத்தைக் குறைப்பது, பேசும்போது மைக்கை நிறுத்துவது, எதிர்க்கட்சி உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட மாறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதுகுறித்து, உறுப்பினர்களே பல முறை நேரடியாக அவரிடம் தெரிவித்தும் அவர் பாரபட்சமாகவே நடந்தார்.
இந்த ஜனநாயக விரோதப் போக்கைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், எதிர்க்கட்சியினர் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு குடியரசு துணைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் என்பது இதுவரை இல்லாத நிகழ்வு. அந்தளவுக்கு ஆளுங்கட்சியான பா.ஜ.க.வின் பிரதிநிதியாகவே செயல்பட்ட ஜகதீப் தன்கர் தனது குடியரசு துணைத் தலைவர் பதவியை ஏன் ராஜினாமா செய்தார் என்பது குறித்து பல யூகங்கள் வெளிப்பட்ட நிலையில், உறுதியான காரணங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படவேயில்லை.
பதவி விலகிய பிறகு ஜகதீப் தன்கரை எங்கும் பார்க்க முடியவில்லை என நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் தெரிவித்தார்கள். அவர் எங்கே என்று கேள்வி எழுப்பினார்கள். அவருக்கு என்னவாயிற்று என்ற சந்தேகமும் கிளம்பியது. இந்த நிலையில்தான், ஜகதீப் தன்கர் தனக்கு ஓய்வூதியம் கேட்டு கடிதம் எழுதியிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசு துணைத் தலைவராக இருந்ததற்கான ஓய்வூதியத்தை அவர் கோரவில்லை. ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்தில் 1993 முதல் 1998 வரை காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் தன்கர். பின்னர் அவர் பா.ஜ.க.வுக்கு வந்துவிட்டார். 5 ஆண்டுகாலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்ததற்கான ஓய்வூதியத்தை அவர் பெற்று வந்த நிலையில், 2019ல் அவர் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்ட போது, அரசின் விதிமுறைகளின்படி சட்டமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. தற்போது ஜகதீப் தன்கர் எந்த அரசுப் பொறுப்பிலும் இல்லாததால், எம்.எல்.ஏ.வுக்கான ஓய்வூதியத்தை வழங்கக் கோரி ராஜஸ்தான் சட்டமன்ற செயலாளருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இந்திய ஜனநாயகத்தின் கதி இந்த நிலையில்தான் உள்ளது.
ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தப்படி செயல்படும் பா.ஜ.க. அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, யாரையும் எந்தக் கட்சியிலிருந்தும் தன் பக்கம் இழுக்கும். தன் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்வதற்காக அவர்களுக்கு எந்த அதிகாரத்தையும் வழங்கும். அந்த அதிகாரத்தைக் கொண்டு, அரசமைப்பு விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட வைக்கும். எப்போது தனது தேவை நிறைவேறுகிறதோ அல்லது அதிகாரத்தில் இருப்பவர் தங்களுக்கு சாதகமாக இல்லை என்று தெரிந்தாலோ அத்துடன் அவர்களை கை கழுவிவிடும். கூட்டணிக் கட்சியாக இருந்தாலும், மாற்றுக் கட்சியலிருந்து வந்தவராக இருந்தாலும், சொந்தக் கட்சிக்காரராகவே இருந்தாலும் இதுதான் தலைகளின் கதி என்பதை ஜகதீப் தன்கரின் நிலை விளக்குகிறது.
இதை கவனமாக புரிந்து கொள்ள வேண்டிய இடத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. ஏனெனில், அவர்களின் கட்சியில் இன்னும் எத்தனை ஜகதீப் தன்கர்கள் காத்திருக்கிறார்களோ பா.ஜ.க.வின் கடைக்கண் பார்வைக்காக!