
நேபாளம் முழுவதும் தீப்பற்றி எரிகிறது. Gen Z எனப்படும் இளந்தலைமுறையினர் வீதிகளில் ஆவேசமாகப் போராடுகிறார்கள். ஜனாதிபதியின் மாளிகைக்குள் புகுந்து தாக்குகிறார்கள். அமைச்சர்களின் வீடுகள் மீது கல்லெறிகிறார்கள். கார்களுக்குத் தீ வைக்கிறார்கள். போலீஸ்-ராணுவம் என அரசுப் படைகளை எதிர்த்து தாக்குகிறார்கள். கைகளில் ஆயுதங்களை ஏந்தி நிற்கிறார்கள். பிரதமர் தொடங்கி அமைச்சர்கள் பலரும் ராஜினாமா செய்துவிட்டார்கள். அரசுப்படைகளுக்கும் இளந்தலைமுறைக்குமானப் போராட்டத்தில் 20க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைத்தளங்களை நேபாள அரசு முடக்கியதால் ஆத்திரம் கொண்ட Gen Z தலைமுறை இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளிப்பட்டாலும் உண்மைக் காரணம் அது மட்டுமல்ல.

நேபாளம் நீண்ட காலம் மன்னராட்சியில் இருந்த நாடு. உலகின் ஒரே இந்து நாடு என்ற பெயரும் அதற்கு இருந்தது. 2001ஆம் ஆண்டு மன்னர் குடும்பத்தின் உள்பூசலாலும், இளவரசனின் அரண்மனையை மீறிய காதல் விவகாரத்தாலும் ஒட்டுமொத்த குடும்பமும் சுட்டுக் கொல்லப்பட்டது. ஒட்டுமொத்தமாக மன்னர் குடும்பம் கொல்லப்பட்டதற்கான காரணம் இன்று வரை மர்மமாகவே உள்ளது. மன்னர் குடும்பத்தின் படுகொலைக்குப் பிறகு, தேர்தல் ஜனநாயக முறை நேபாள நாட்டில் மேம்பாடு அடைந்தது. கம்யூனிஸ்ட்டுகள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த வரலாறும் நேபாளத்திற்கு உண்டு.
மன்னராட்சி நிலைக்காமல் போன நிலையில், கடந்த 20 ஆண்டுகளில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் தன்னுடைய ஆட்சிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்ததில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல அரசுகளும் மன்னராட்சி மனப்பான்மையிலேயே ஆடம்பரமாக நடந்து கொண்டன. அரண்மனை போன்ற வீடுகள், ஆடம்பர கார்கள், அலங்கார உடைகள் என அமைச்சர்களும் அவர்களின் வாரிசுகளும் வாழ்ந்து வரும் நிலையில், மக்களின் நிலையோ மிகவும் பரிதாபகரமானதாக இருந்தது. நாட்டின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய அளவிற்கான ஏற்றத்தாழ்வு நிலவியது.

பிரதமரின் மாத சம்பளம் 60ஆயிரம் ரூபாய்தான் என்றாலும் அவரது குடும்பத்தினர் மில்லியன்களில் சொத்துகளைக் குவித்து, வெளிநாடுகளுக்குப் பயணித்தபடி இருந்தனர். ஆட்சியைத் தேர்ந்தெடுத்த மக்களோ வேலை இல்லாமல் திண்டாடுவதும், நாளொன்றுக்கு 5000 பேர் அளவுக்கு நேபாளத்திலிருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வேலை தேடிச்செல்வதும் தொடர்கதையாக இருக்கிறது. நேபாளம் எல்லா வகையிலும் பின்னடைவை சந்திக்கும் நிலையில், அது குறித்து Gen Z தலைமுறையினர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். அரசுக்கு எதிரான இந்தப் பதிவுகளைத் தடுப்பதற்காக சமூக வலைத்தளங்களை முடக்கி உத்தரவிட்டது நேபாள அரசு. அது ஒரு நெருப்புப் பொறிதான். நேபாளத்தில் ஏற்கனவே பிரச்சினைகள் வைக்கோல் போர் போல குவிந்திருந்ததால் சட்டெனப் பற்றிக்கொண்டது.
பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை நேபாள அரசு முடக்கிய நிலையில், Gen Z இளைஞர்கள் டிக்டாக் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி, சக இளைஞர்களைத் திரட்டிப் போராட்டக் களத்தில் இறங்கிவிட்டனர். இந்திய ஊடகங்கள் உள்பட பலவும் சமூக வலைத்தளங்களை முடக்கியதால் இளைஞர்கள் போராட்டம் என இதனைத் தங்கள் கோணத்தில் செய்தியாக வெளியிட்டாலும், உண்மைக் காரணங்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன.
ஆள்பவர்களுக்கும் மக்களுக்குமான இடைவெளி அதிகரிக்கும்போது போராட்டம் வெடிக்கும். அதுவும், மாணவர்களும் இளைஞர்களும் அந்தப் போராட்டங்களை முன்னெடுப்பார்கள். 1990களின் தொடக்கத்தில் கிழக்கு ஐரோப்பாவின் கம்யூனிச நாடுகளின் அரசுகளை எதிர்த்து இளைஞர்கள் நடத்திய போராட்டம் பல அரசுகளை மாற்றியது. அதைத் தொடர்ந்து உலகின் வலிமையான வல்லரசாகத் திகழ்ந்த சோவியத் யூனியன் சிதறியது. சீனாவின் கம்யூனிஸ்ட் அரசை எதிர்த்து தியான்மென் சதுக்கத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் வரலாற்று சிறப்பு மிக்கது. கடந்த ஆண்டில் வங்கதேசத்தில் அரசை எதிர்த்து இளைஞர்களும் மாணவர்களும் பெரும் போராட்டம் நடத்தியதால் அந்த நாட்டின் பிரதமர் சொந்த நாட்டைவிட்டுத் தப்பிவந்து இந்தியாவின் தஞ்சமானார்.

மாணவர்கள்-இளைஞர்கள் எதற்காகப் போராடுகிறார்கள் என்பதை உணர்ந்த அரசாங்கங்கள் உரிய முடிவுகளையும் மாற்றங்களையும் செய்து நாட்டைக் காப்பாற்றியுள்ளன. அலட்சியம் காட்டிய அரசுகளால் நாடுகள் சீரழிந்துள்ளன. தன்னெழுச்சியாக நடைபெறும் போராட்டங்கள் இருபக்கம் கூர்மையான ஆயுதத்தைப் போன்றவை. தலைமை தாங்குவதற்கு யாரும் இல்லாத காரணத்தால், அது திசை மாறுவதும் உண்டு. கும்பலாகத் திரளும்போது மனதில் ஏற்படும் தைரியமும் முரட்டுத்தனமும் போராட்டத்தின் நோக்கத்தை திசைதிருப்பி, கொள்ளையடிப்பவர்களுக்கும் நீண்டகாலமாக ஆட்சியைப் பிடிக்க ஆசைப்படுபவர்களுக்கும் பயன்படக்கூடியதாக மாறும் ஆபத்து உள்ளது. நேபாளப் போராட்டம் எந்தத் திசையில் செல்லப்போகிறது என்பதை கவனிக்க வேண்டும்.
இந்தியாவுக்கு அருகில் உள்ள நாடு நேபாளம். இந்தியாவுக்கு எப்போதும் அந்நாட்டின் மீது கவனம் உண்டு. என்ன நடக்கப்போகிறது என நேபாளிகள் மட்டுமின்றி, இந்தியர்களும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.