
ஜனநாயக நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளே அதிகாரமிக்கவை. அந்த அரசுகளை மாற்றுகின்ற அதிகாரம், வாக்களித்த மக்களுக்கே உரியது. நெறிமுறைகளை மீறும்போது நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்த வழிமுறைகளை நீதிமன்றம் வழங்குவது இயல்பு. இதற்கு மாறாக, இந்திய ஜனநாயகத்தில் கவர்னர் என்கிற ஆளுநர் பதவி உருவாக்கப்பட்டிருப்பதும், அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு எதிரான கருவியாகப் பயன்படுத்தப் படுவதும் நீண்டகால சர்ச்சைக்குரியதாக உள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவில் முழுமையான அதிகாரம் கொண்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் கிடையாது. அதனால் மாநில நிர்வாகத்தை கவனிக்க பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்ட கவர்னர்களும், ஒட்டுமொத்த இந்திய நிர்வாகத்தை கவனிக்க கவர்னர் ஜெனரல் என்பவரும் இருந்தார். இந்தியா சுதந்திரம் பெறும்போது கவர்னர் ஜெனரால் இருந்தவர் மவுண்ட்பேட்டன் ஆவார். இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்துவிட்டு சில மாதங்கள் அவர் அந்தப் பதவியில் நீடித்தாலும், பின்னர் அவர் தனது சொந்த நாட்டுக்குத் திரும்பியதும், இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக ராஜாஜி பொறுப்பேற்றார்.

1950ஆம் ஆண்டு இந்தியா குடியரசு நாடானபோது, கவர்னர் ஜெனரல் பதவி ஒழிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக, நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி எனும் குடியரசு தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. ஆனால், மாநில கவர்னர் பதவி என்பது நியமனப் பதவியாகவே இன்றளவும் நீடிக்கிறது. மத்தியில் ஆட்சி செய்பவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை மாநில கவர்னர்களாக நியமித்து அவர்கள் மூலமாக மாநில நிர்வாகத்தில் உளவு வேலை பார்ப்பதும், எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் அதிகாரக் குறுக்கீடு செய்வதும், எதிர்மறை கருத்துகளை உருவாக்குவதுமே தொடர்ந்து கொண்டிருக்கிறது.
குடியரசு நாட்டில் மக்களாலோ, மக்கள் பிரதிநிதிகளாலோ தேர்ந்தெடுக்கப்படாமல், ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கேற்ப நியமிக்கப்படும் இந்த கவர்னர் பதவி தேவைதானா என்கிற கேள்வி தமிழ்நாட்டில் இருந்து பல ஆண்டுகளாக ஒலிக்கிறது. தற்போது பிற மாநிலங்களும் அதே கேள்வியைக் கேட்கிறது. மத்தியில் ஆள்கின்ற எந்த அரசும் இதைக் கேட்பதில்லை.
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அமைந்தபிறகு, ஆளுநர்கள் என்பவர்கள், பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்களில் இணை அரசாங்கத்தை நடத்தும் கருவிகளாக்கப்பட்டிருக்கிறார்கள். மேற்குவங்கம், கேரளா போன்ற மாநிலங்களுடன் தமிழ்நாடும் இதனைத் தொடர்ந்து அனுபவித்து வருகிறது. முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நலன் குன்றியபோதே ஆளுநரை வைத்து இணை அரசாங்கம் நடத்தும் நடவடிக்கையை பா.ஜ.க. அரசு மேற்கொண்டது. அ.தி.மு.க.வை உடைப்பது, இணைப்பது உள்ளிட்ட பா.ஜ.க.வின் அரசியல் நோக்கங்களுக்கு ஆளுநர் கருவியாக்கப்பட்டார். பன்வாரிலால் புரோகித் என்பவர் ஆளுநராக இருந்தபோது, ஆய்வுப் பணிகளை ஊர் ஊராக சென்று மேற்கொண்டார். அ.தி.மு.க. அரசும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் வாய் திறக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவரான தி.மு.க.வின் மு.க.ஸ்டாலின் இந்த ஜனநாயக நெறிமீறலைக் கண்டித்தார். மாநில அரசின் உரிமைகளைக் கையில் எடுக்கும் ஆளுநருக்கு எதிராக தி.மு.க. சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

தற்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி, சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்று தி.மு.க. அரசு சொன்னால், இல்லையில்லை மேற்கில்தான் சூரியன் உதிக்கிறது என்கிற அளவில் எதிர் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மாநில உரிமைகளை மதிக்காமல், ஆளுநர் மாளிகையை இரண்டாவது தலைமைச் செயலகம் போல நடத்தும் ஆளுநரின் போக்கிற்கு எதிராக ஏற்கனவே உச்சநீதிமன்றம் வரை சென்று உத்தரவுகளைப் பெற்றிருக்கிறது தமிழ்நாடு அரசு. ஆனாலும் தொடர்ந்து தனது அதிகார அத்துமீறல்களை ஆளுநர் மேற்கொண்டு வருகிறார்.
மோடி அரசால் சொந்த காரணங்களுக்காக ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி தன் பார்வைக்கு அனுப்பப்பட்ட, தமிழ்நாடு அரசின் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் தொடர்பான சட்டமுன்வடிவில், இதனை தகுதியான முறையில் ஆய்வு செய்யவேண்டும் எனக் குறிப்பிட்டு அரசுக்கு அனுப்பியுள்ளார். ஆளுநரின் பார்வைக்கு அனுப்பப்படும் சட்ட முன்வடிவுகள், சட்டப்பேரவையில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் பார்வைக்கும் கொண்டு செல்லப்பட்டு, அவர்கள் சொல்லும் திருத்தங்களை பரிசீலித்து, ஏற்றுக்கொள்வதும், திருத்தங்கள் சொன்ன உறுப்பினர்கள் தங்கள் கருத்து ஏற்கப்பட்டதால் திருத்தத் தீர்மானத்தை திரும்பப் பெற்றுக்கொள்வதும் சட்டமன்ற நடைமுறை. இதில் குறுக்கே புகுந்து, தகுதியான முறையில் ஆய்வு செய்ய வேண்டும் என ஆளுநர் கருத்து தெரிவிப்பது அவரது வரம்புக்கு மீறியதாகும்.
நியமனம் செய்யப்பட்ட நிர்வாகத் தலைமையான ஆளுநரால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய தமிழ்நாட்டின் உண்மையான தலைமையான சட்டமன்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் உத்தரவுகளையோ கருத்துகளையோ வெளியிட முடியாது என்பதால், ஆளுநரின் கருத்துகளை பேரவை நிராகரிப்பதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு தனது மாநில உரிமைக்கானத் தொடர் போராட்டத்தில் ஆளுநருக்கு மற்றொரு கடிவாளத்தைப் போட்டுள்ளது.