Palestinians wait to receive food from a charity kitchen, amid a hunger crisis, in Gaza City, July 28, 2025. REUTERS/Khamis Al-Rifi
மரண ஓலம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறது பாலஸ்தீன பகுதியான காசாவில். அந்த நகரத்தின் கட்டடங்கள் சீட்டுக்கட்டுகளாக சரிந்து, மண் மேடுகளாக குவிந்துள்ளன. அதற்குள் புதைந்திருப்பது மனித உடல்கள் மட்டுமல்ல, மனிதமும்தான். இஸ்ரேல் நாட்டின் கொடூர தாக்குதல் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏன் இந்தக் கொடூரம்?
உலகெங்கும் சிதறிக் கிடந்த யூதர்கள், ஜெர்மனியில் ஹிட்லரின் கொடூர வதை முகாமில் சித்திரவதை செய்யப்பட்டு, நச்சுவாயு செலுத்தி கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டனர். இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளின் படை ஹிட்லர்-முசோலினி சர்வாதிகாரப் படையை வீழ்த்தியது. அந்தப் போரில் நேச நாடுகளின் சார்பில் நின்ற சோவியத் ரஷ்யாவும் அமெரிக்காவும் அதன்பின் உலக வல்லரசுகளாயின. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் யூத இன மக்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களுக்காக 1948ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நாடுதான் இஸ்ரேல்.

வல்லரசு அமெரிக்காவின் ஆதரவுடன் உருவான இஸ்ரேலின் எல்லைப் பகுதி குறித்து அப்போது முதலே சர்ச்சைகள் நீடிக்கின்றன. காரணம், பாலஸ்தீனப் பகுதிகள் இஸ்ரேல் நாட்டின் எல்லைக்குள் வந்தன. குறிப்பாக ஜெருசலம், காசா, மேற்குகரை போன்ற பகுதிகள் சர்ச்சைப் பகுதிகளாயின. இஸ்லாமியர்கள் வாழும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பதை வரலாற்று ரீதியாக முன்வைத்து ஆயுதப் போராட்டங்கள் நடந்தன. யாசர் அராஃபத் தலைமையிலான எழுச்சி மிக்க போராட்டத்திற்கு இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் ஆதரவு தந்ததுடன், ஐ.நா. அவையில் யாசர் அராஃபத் தனது தாயகத்தின் நியாயங்களுக்காக முழங்கினார். அவருக்குப் பிறகு, ஹமாஸ் இயக்கத்தினர் ஆயுதத் தாக்குதலை நடத்தின. இதற்கு ஆதரவும் எதிர்ப்புமாக பல நாடுகள் நின்றன.
பாலஸ்தீனம் தனது விடுதலை கோரிக்கையை முன்வைத்து வரும் நிலையில், இஸ்ரேல் திமிருடன் தனது தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. 2023ஆம் ஆண்டு ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல், எப்போது இந்த சந்தர்ப்பம் வரும் எனக் காத்திருந்த இஸ்ரேலுக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது. பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீதான இஸ்ரேலில் தாக்குதல் ஓர் இன அழிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. போர் நியதிகள் எதுவுமற்ற தாக்குதல்கள் தொடர்கின்றன. பாலஸ்தீனத்தையும் ஹமாஸ் அமைப்பையும் ஆதரிப்பதாக குற்றம்சாட்டி லெபனான் மீது தாக்குதல் நடத்தியது. ஈராக் மீது தாக்குதல் நடத்தி, பதில் தாக்குதலுக்குள்ளானது. கத்தார், சிரியா, துனிசியா எனப் பல நாடுகள் மீது தாக்குதல் நடத்தியது.
காசா பகுதி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலின் விளைவாக அங்கே உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள், சிறுவர்கள் பட்டினியால் சாகக்கூடிய நிலை உருவாகி, பல உயிர்கள் பறிபோயுள்ளன. போரில் காயம்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைகள் மீதும் இஸ்ரேல் படைகள் குண்டு வீசுகின்றன. செஞ்சிலுவை சங்கம் போன்ற போர் நிவாரண அமைப்புகளால் உணவு வழங்கப்படும் இடங்கள் மீதும் குண்டு வீசி பலரைக் கொலை செய்துள்ளது இஸ்ரேல். உலக நாடுகள் பலவும் இஸ்ரேலின் மனிதநேயமற்ற தாக்குதலைத் தொடர்ந்து கண்டித்து வருகின்றன. ஒரு காலத்தில் பாலஸ்தீனத்தின் தோழனாக இருந்த இந்தியா, பா.ஜக.. ஆட்சி அமைந்தபிறகு இஸ்ரேலிடம் நட்புகாட்டியது. அதற்கு காரணம், பா.ஜ.க.வின் முஸ்லிம் வெறுப்பு அரசியல்தான். கத்தார் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த இந்திய பிரதமர் மோடி, இஸ்ரேல் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் மென்மையாகக் கண்டித்து தன் விசுவாசத்தைக் காட்டியிருந்தார்.

ஐ.நா. ஆணையம் நடத்திய விசாரணையில் இஸ்ரேல் நடத்துவது இனப்படுகொலை என்பது உறுதியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு பெரும் பலமாக உள்ள அமெரிக்காவின்ராணுவத்தில் உள்ளவர்களே, “இந்தப் போரை நிறுத்துங்கள். இனப்படுகொலையைத் தடுத்திடுங்கள்” என்று குரல் கொடுத்திருப்பதும், அதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும் இஸ்ரேலின் போக்கை உலக அரங்கில் அம்பலப்படுத்தி வருகின்றன.
80 ஆண்டுகளுக்கு முன்பு ஹிட்லரிடமிருந்து யூத இனத்தைப் பாதுகாக்க உலக நாடுகள் ஓரணியில் நின்றன. இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கித் தந்தன. இன்று அதே இஸ்ரேலிடமிருந்து பாலஸ்தீன மக்களை பாதுகாக்க வேண்டிய தேவைக்கு உலகம் தள்ளப்பட்டிருக்கிறது. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தரும் ஆதரவுதான் இஸ்ரேலின் பலம்.
எரிவதை இழுத்தால் கொதிப்பது அடங்கும் என்பார்கள். மேலை நாடுகள் தங்கள் ஆதரவை விலக்கினால் இஸ்ரேல் அடங்கும். இனப்படுகொலை தடுக்கப்படும்.
