கன்னியாகுமரியில் மூன்று கடல்கள் இணைகின்ற கண்கொள்ளா இயற்கை காட்சியின் நடுவில், பாறை மீது உயர்ந்து நிற்கின்ற 133 அடி திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. 1.1.2000 அன்று மாலை வண்ண விளக்கொளியில் அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை, இன்றைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆட்சியில் வெள்ளி விழா காண்கிறது. அதை ஒட்டி கோலாகலமான பல நிகழ்ச்சிகள் மூன்று நாட்கள் நடைபெறவிருக்கின்றன. திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் பாறைக்கும் இடையில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை முதலமைச்சர் திறந்து வைப்பது இந்த வெள்ளி விழாவின் சிறப்பம்சமாகும்.
கடந்த ஒரு மாதமாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான திருக்குறள் சார்ந்த போட்டிகள் பலவும் நடத்தப்பட்டு அவற்றுக்கு பரிசுகள் வழங்குகின்ற நிகழ்வும் நடைபெறுகிறது. திருக்குறளை இன்றைய மாணவர்கள் இளைஞர்கள் எதற்காக தெரிந்து கொள்ள வேண்டும்?
ரீல்ஸ் உலகத்தில் வாழ்கின்ற இந்த தலைமுறைக்கு ஈரடி திருக்குறளை விட 133 அடி பிரம்மாண்டமான திருவள்ளுவர் சிலை தான் பிடித்தமானதாக இருக்கும். 2K kids எனப்படுகின்ற இளைய தலைமுறைக்கு கருத்தை விட காட்சியை அதிகம் பிடிக்கும் என்பதை 2000ஆம் ஆண்டு பிறந்த போதே உணர்ந்ததாலோ என்னவோ திருக்குறள் எழுதிய திருவள்ளுவருக்கு கடல் நடுவே சில அமைத்து இன்றைய தலைமுறையினரும் அதிசயத்தைப் பார்க்கும்படி செய்து இருக்கிறார் அன்றைய முதல்வர்.
திருவள்ளுவர் சிலை என்பது இந்தியாவின் தென்முனையான கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டிருப்பதன் மூலம் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் பண்பாட்டு அடையாளமாக அது உயர்ந்து நிற்கிறது. தமிழின் உலக அடையாளமாக இருப்பது திருக்குறளும் அதனை எழுதிய திருவள்ளுவரும் தான். பைபிளுக்கு அடுத்தபடியாக உலகில் அதிக மொழிகளில் வெளிவந்துள்ள நூல் திருக்குறள். பல்வேறு அறிஞர்கள் குறளுக்கு உரை எழுதி இருக்கிறார்கள். பாட புத்தகங்களில் திருக்குறள் மனப்பாடப் பகுதியாக வைக்கப்பட்டு மாணவர்களின் நெஞ்சில் அந்த கருத்துக்கள் நிறைவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளிலும் திருக்குறளை எழுதி பாமர மக்களும் அதனை புரிந்து கொள்ளும்படி செய்து இருக்கிறது அரசு.
தொன்மை மிகுந்த தமிழ் மொழியில் ஏராளமான இலக்கியங்கள் இருக்கின்றன அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சிறப்புகள் உண்டு என்றாலும் திருக்குறள் என்பது வாழ்வியல் நெறியை காட்டக்கூடிய படைப்பாக அமைந்திருக்கிறது. இதில் மொழி, மதம், சாதி போன்ற பிரிவுகள் ஏதுமின்றி மானுட சமுதாயம் மேன்மை அடைவதற்கான கருத்துகளைக் கொண்டதாக திருக்குறள் நூலை வள்ளுவர் எழுதியிருக்கிறார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற சமத்துவ வரிகள் இந்த மண்ணின் சமூக நீதிக் கொள்கைக்கு ஆதரவாக இருக்கிறது. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்ற குறள் ஒவ்வொரு மனிதருக்கும் மிகப்பெரிய தன்னம்பிக்கையை உணர்த்தக்கூடியது.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் என்கின்ற திருக்குறள் எந்த ஒரு செயலையும் எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதை உலகத்தில் உள்ள அனைவருக்கும் உணர்த்தக் கூடியதாக இருக்கிறது. மணி நீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண் என்ற குறள் வழியே ஒரு நாட்டிற்கான உண்மையான பாதுகாப்பு என்பது அதன் இயற்கை வளங்கள்தான் என்பதை இன்றைய அரசியல்வாதிகளுக்கு புரிகின்ற வகையில் அன்றே சொல்லி இருக்கிறார் வள்ளுவர்.
வேளாண்மை, வணிக மேலாண்மை, இல்லறவியல், உண்மையான துறவியல், நட்பு, காதல், அரசியல் நிர்வாகம் என எதையும் விட்டு வைக்காமல் எல்லாவற்றையும் சிக்ஸர் அடித்திருக்கிறார் திருவள்ளுவர்.
2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறளில் இன்றைய கால சூழ்நிலைக்கு பொருந்தாத ஒரு சில கருத்துகள் நிச்சயமாக இருக்கின்றன. அதைத் தவிர்த்துப் பார்த்தால், திருக்குறள் எல்லா காலத்துக்கும் எல்லா தலைமுறைக்கும் வழிகாட்டியாக இருக்கக்கூடிய அறநெறி நூலாகும் அது தமிழில் படைக்கப்பட்டிருக்கிறது என்பது நமக்கு கூடுதல் பெருமை.
குறுகத் தரித்த குறளை எழுதிய வள்ளுவருக்கு நெடிதுயர்ந்த சிலையை அமைத்தார் கலைஞர் கருணாநிதி. அவருடைய எண்ணத்தை நிறைவேற்றியவர் சிற்பி கணபதி ஸ்தபதி. கடல் நடுவே உள்ள பாறை மீது இப்படி ஒரு சிலையமைப்பது கடினமான பணி என்றாலும் அது நிறைவேற்றப்பட்டது. சுனாமி எனும் ஆழிப்பேரலையையும் கடந்து உயர்ந்து நிற்கிறது வள்ளுவர் சிலை.
இந்த வரலாற்றுப் பின்னணியில் திருக்குறளை புதிய கோணத்தில் அணுகுவதற்கும், அவற்றை வாழ்க்கை நெறியாக பயன்படுத்துவதற்கும் மாணவர்கள்- இளைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
உயர்ந்த சிலையும், கண்ணாடி பாலமும் செல்ஃபிக்கு மிகவும் ஏற்றதாக உள்ள நிலையில் செல்ஃபி புள்ளைகளை திருக்குறள் பக்கம் திருப்புவதற்கு வெள்ளி விழா நல்வாய்ப்பாக அமையட்டும்.