
ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாடுகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பயணம் செய்வதும், அப்போது எதிர்க்கட்சித் தலைவர், “முதலீடே வரவில்லை” என்றும், பிறகு சற்று மாற்றி, “எங்கள் ஆட்சியில் போட்ட ஒப்பந்த முதலீடுகள் வந்தன” என்றும், “முதலமைச்சர் தனது வெளிநாட்டுப் பயணங்களில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து வெள்ளை அறிக்கை தரவேண்டும்” என்பதும் கேட்பது வழக்கம். எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விகளுக்கு முதலமைச்சருக்கு முன்பாக, தொழில்துறை அமைச்சர் எத்தனை நாடுகளில் என்னென்ன ஒப்பந்தங்கள் போடப்பட்டன, அவற்றின் எண்ணிக்கை என்ன, அவற்றில் எத்தனை ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வந்து வேலைவாய்ப்புகளாக மாறியுள்ளன என்று தெளிவாக விளக்கமளிப்பதும் வழக்கம். ஒரே கேள்வி-ஒரே பதில் என்பது போல கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக இந்த கயிறு இழுக்கும் போட்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெய்ன், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சென்று வந்த முதலமைச்சர் இந்த முறை ஐரோப்பாவில் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும் போதே முந்தைய பயணங்களில் எந்தெந்த நாடுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் எவ்வளவு நிறைவேறியுள்ளன என்பதையும் கடந்த நான்காண்டுகளில் நடத்தப்பட்ட முதலீட்டாளர் சந்திப்புகள், உலக முதலீட்டாளர் மாநாடு 2024 ஆகியவற்றின் மூலம் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் முதலீட்டுத் தொகை அவற்றால் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு கிடைத்துள்ள வேலை வாய்ப்புகள் பற்றியும் தெரிவித்துவிட்டுத்தான் புறப்பட்டார்.

முதலமைச்சரும் அவருடனான தொழில் அமைச்சர் மற்றும் அதிகாரிகளும் முதலில் சென்ற இடம் ஜெர்மனி. அங்குள்ள நார்த்ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தில் நடந்த முதலீட்டாளர் சந்திப்பில் பி.எம்.டபிள்யூ உள்ளிட்ட புகழ்பெற்ற கார் நிறுவனங்கள் உள்பட பலவித நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று தமிழ்நாட்டுடனான தங்களின் வர்த்தக உறவு குறித்து ஆலோசித்து ஒப்பந்தங்கள் போட்டுள்ளனர். நார்த்ரைன்-வெஸ்ட்பாலியாவின் தலைமை அமைச்சர் (மினிஸ்டர் பிரசிடென்ட்) ஹென்ட்ரிக் வுஸ்ட், தமிழ்நாடு முதலமைச்சருக்கு அளித்த வரவேற்பும் ஆதரவும் இரு நாடுகளைச் சார்ந்த இரு மாநிலங்களுக்கான வர்த்தகத்தை மேம்படுத்தும் நம்பிக்கையை அதிகரித்துள்ளன.
இங்கிலாந்தைப் பொறுத்தவரை ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் முதலமைச்சர் நடத்திய சந்திப்பும், இங்கிலாந்து தொழில் நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களும் தமிழ்நாட்டிற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கக்கூடியனவாக அமைந்துள்ளன. முதலமைச்சர் தனது ஐரோப்பிய பயணத்தில் ஜெர்மனியில் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முலம் 7,020 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்துள்ளார். இதன் மூலம் 15,320 வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தைப் பொறுத்தவரை 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 8,496 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்திருப்பதால், 2,293 வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் உள்ள தொகை அப்படியே முதலீடாக வந்துவிடுமா என்று எதிர்க்கட்சித் தலைவர் கேட்கிறார். முழுமையான முதலீடாக மாறாது என்பதற்கு அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் முதல்வர்களாக இருந்த ஜெயலலிதாவும், எடப்பாடி பழனிசாமியும் போட்ட ஒப்பந்தங்களே சாட்சியங்களாக நிற்கின்றன. உலகளவில் போடப்படும் புரிந்துணர்வும் போடப்படும் ஒப்பந்தங்களில் 40% முதல் 50% வரை முதலீடுகளாக மாறினாலே அது தொழில்துறை வெற்றிதான். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த 4 ஆண்டுகளில் அது 70% அளவுக்கு உள்ளது என்பதை தொழில்துறை அமைச்சர் புள்ளிவிவரங்களுடன் ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவருக்கு பதிலளித்திருக்கிறார்.
வின்ஃபாஸ்ட், டாடா போன்ற நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்ட ஒன்றரை ஆண்டுகளில் தங்களின் நிறுவனங்களைத் தொடங்கி, வேலைகளையும் வழங்கியிருப்பதும், அது உள்ளூர் மக்களுக்கே கிடைத்திருப்பதும் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் முக்கியமான ஒன்றாகும். ஜெர்மனி-இங்கிலாந்து ஒப்பந்தங்களும் அது போல நடைபெறவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
இந்தியாவில் அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்று மத்திய அரசின் அறிக்கை தெரிவிக்கிறது. தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களில் 15% என்ற அதிகளவைக் கொண்டிருக்கும் மாநிலமும் தமிழ்நாடுதான் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியத் தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களில் 42% பேர் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள் என்பதும் மத்திய அரசுதான். பணி பாதுகாப்பு மிக்க 10 இந்திய நகரங்களில் தமிழ்நாட்டின் சென்னை, மதுரை, கோவை, திருப்பூர், திருச்சி உள்ளிட்டவை இடம்பெற்றிருப்பதையும் மத்திய அரசுதான் சொல்கிறது.
மத்தியில் ஆட்சி செய்வது அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.தான். அதனிடம் கோபப்பட முடியாமல், முதலமைச்சரை ஒவ்வொரு முறையும் கேள்வி கேட்டு தன் ஆற்றாமையைத் தீர்த்துக் கொள்கிறாரோ எதிர்க்கட்சித் தலைவர்?