
இதுவரை தமிழ்நாடு கண்டிராத ஒரு துயர சம்பவம்தான் கரூர் வேலுச்சாமிபுரம் சம்பவம். விஜய்க்கு கூடியதை விட பல தலைவர்களுக்கு அதிகளவில் கூட்டம் கூடியிருக்கிறது. ஆனால், இப்படி ஒரு துயர சம்பவம் அரங்கேறியதில்லை.
வேலுச்சாமிபுரம் சம்பவம் அரசியல் சதி என்று குற்றம்சாட்டுவதில் இருந்தே விஜய்க்கு அரசியல் என்றால் என்னவென்றே தெரியவில்லை என்பதையே காட்டுகிறது. தன்னை நம்பி வந்தவர்களை பலி கொடுத்துவிட்டு நிற்கும் குற்ற உணர்ச்சியும் விஜய்க்கு இல்லை என்பது தெரிகிறது.

கட்டுப்பாடு என்றால் என்ன? என்று கேட்கிறார்கள் தவெகவினர். நீதிமன்றமும், காவல்துறையும், ஏன், விஜய்யும் கூட எத்தனையோ முறை எடுத்துச்சொல்லியும் கூட, மின் கம்பங்களில் ஏறுவதும், மரக்கிளைகளில் ஏறுவதும், மாறவில்லை. ஒவ்வொரு முறையும் விஜய் பிரச்சாரம் முடிந்ததும் அந்த இடம் போர்க்களமாக மாறுகிறது. நாற்காலிகள் உடைந்தும், காம்பவுண்ட் சுவர்கள் உடைந்தும், செருப்புகள் சிதறியும் கிடக்கும் காட்சிகள் தொடர்கின்றன. இதனால்தான் இது என்றைக்காவது ஒருநாள் விபரீதமாக வெடிக்கும் என்கிற அச்சம் எல்லோருக்கும் இருந்தது. அரசுக்கும் இந்த அச்சம் இருந்ததால்தான் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. பொதுவாகவே அரசியல் கட்சிகளும் சரி, தொண்டர்களும் சரி அரசு விதிக்கும், நீதிமன்றங்கள் விதிக்கும், காவல்துறை அறிவுறுத்தும் கட்டுப்பாடுகளை மதித்து நடப்பார்கள். ஆனால், தவெகவினரும், விஜய் ரசிகர்களும் இந்த கட்டுப்பாடுகளை எல்லாம் கொஞ்சம் கூட மதிப்பதே இல்லை.

தவெகவின் தலைமையே இந்த கட்டுப்பாடுகளை எல்லாம் தங்களுக்கு எதிரான அரசியலாக கருதியதுதான் வேலுச்சாமிபுரம் வேதனையை தந்திருக்கிறது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட பல மணி நேரம் விஜய் தாமதமாக வந்ததும், விஜய்யின் பேரணியில் சாலையில் இரு புறமும் நின்றிருந்தவர்களும், விஜய் பேசும் இடத்திற்கு பின்னாலேயே திரண்டு வந்ததாலும் 41 அப்பாடி உயிர்கள் பலியான அசம்பாவிதம் நிகழ காரணமாக அமைந்திருக்கிறது. காவலர்கள் சொல்லுவதை காதில் வாங்காமல், தாங்களாக முன்வந்து தன் கட்சி தலைவரை பார்க்க வரும் கூட்டத்தை தவெகவினர் ஒழுங்குபடுத்த கொஞ்சம் கூட நினைக்கவே இல்லை.

ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் தன்னார்வலர்கள் இருப்பார்கள். அவர்கள் கட்சியின் பொதுக்கூட்டம், பேரணி, ஊர்வலத்தின் போது கூட்டத்தை கட்டுப்படுத்துவார்கள். வழி நடத்துவார்கள். ஆனால், தவெகவில் தன்னார்வலர்கள் என்று யாரும் இல்லை.
நடிகராக இருந்து கட்சி தொடங்கியவர்தான் விஜயகாந்த். கட்சி கூட்டங்களில் பாதுகாப்புக்கு என்றே ஒரு அணியை அமைத்திருந்தார் அவர். விஜயகாந்தை அடிக்கடி நினைவு கூறும் விஜய் இப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்யவே இல்லை.
தவெக நிர்வாகிகள் எல்லோருமே இன்னமும் ரசிகர்களாகவே இருக்கிறார்கள். விஜயை நடிகராகவே பார்க்கிறார்கள். அதனால்தான் விஜய் வந்தால் கூட்டத்தை ஒழுங்குபடுத்தாமல் அவர்களும் விஜயை பார்க்க முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள்.

அனுபவமுள்ள பழைய கட்சிகளைப் பார்த்து புதிய கட்சி தவெக, கூட்டம் நடத்துவது எப்படி என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். இதே இடத்தில்தான் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் பிரச்சாரக் கூட்டமும் நடந்தது. எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அக்கூட்டம் நடந்து முடிந்தது. அது அரசியல் கூட்டம் என்பதால் கட்டுக்கோப்பாக நடந்து முடிந்தது. இது நடிகர் விஜயை பார்க்க வந்த ரசிகர் கூட்டம் என்பதால் கட்டுப்பாடுகளை எல்லாம் ரசிகர்கள் காற்றில் பறக்கவிட்டு விட்டார்கள்.
தமிழ்நாட்டில் நடந்த இந்த துயர சம்பவத்தை கேள்விப்பட்டதும் குடியரசுத்தலைவர், பிரதமர், எதிர்கட்சித்தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில், மாநிலத்தின் முதலமைச்சர் களத்தில் இறங்காமல் இருக்க முடியுமா? எல்லோருக்குமான முதலமைச்சர்தானே? அதனால்தான் துயர சம்பவம் அறிந்ததுமே அந்த மாவட்டத்துக்காரர் செந்தில்பாலாஜி விரைந்து சென்று நடவடிக்கைகள் எடுத்தார். இரவோடு இரவாக சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார் முதலமைச்சர்.
எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக நிர்வாகிகள் மற்றும் அனைத்து கட்சியினரும் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் சொல்லி, உதவிகள் வழங்கி வருகின்றனர்.

அரசியல் என்பது எல்லோருக்கும் துணை நிற்பது. இது கூட தெரியாத தவெகவினர், வேலுச்சாமிபுரம் சம்பவம் நடந்ததும் உடனே ஓடோடிச்சென்று முதலமைச்சரும், மற்ற அமைச்சர்களும், அதிகாரிகளும் நடவடிக்கைகளில் இறங்கியது ஏன்? என்று சந்தேகம் எழுப்பி வருகின்றனர். இதைச் செய்யாமல் இருந்தால் ஏன் உடனே நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்கலாமே தவிர, மக்கள் துயரத்தில் இருக்கும் போது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தது தவறு என சொல்லும் இவர்களை என்னவென்று சொல்லுவது?
இத்தனை நடந்தும், விஜய்க்கு கொஞ்சம் கூட மனசாட்சி உறுத்தவேயில்லை. அதனால்தான் துயரம் சம்பவம் நடந்தும் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் கரூரில் இருந்து புறப்பட்டு நேரடியாக சென்னைக்கு சென்றுவிட்டார். விமான நிலையத்தில் செய்தியாளர்கள் இது குறித்து கேள்விகள் கேட்டபோதும் கூட, இந்த துயர சம்பவம் குறித்து ஒரு வார்த்தை கூட சொல்ல மனமில்லாமல் ஓடியதும், அதற்கப்புறமும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்காமல், தப்பிக்க நினைத்து நீதிமன்றம் செல்வதும் இன்னமும் விஜய்க்கு அரசியலும் தெரியவில்லை, தமிழ்நாட்டு மக்களின் மனநிலையும் புரியவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.