
தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளால் மாநிலங்களின் உரிமை பறிக்கப்படக் கூடாது என்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த கூட்டு நடவடிக்கை குழு, இன்றைய இந்திய அரசியல் சூழ்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த முன்னோடியான நடவடிக்கையாகும்.
மக்கள்தொகை அடிப்படையில் தற்போதுள்ள நாடாளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வதற்கு மத்திய அரசு ஆயத்தமாக உள்ளது. இது, மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொண்ட மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கையைக் குறைத்துவிடும். மத்திய அரசின் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள் தங்களுக்கான தொகுதிகளை இழக்கும்,
தமிழ்நாட்டில் தற்போதுள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 8 குறையும். அதே அளவுள்ள பீகார் மாநிலத்தில், மக்கள் தொகை கட்டுப்பாட்டுத் திட்டம் சரியாக செயல்படுத்தாததால், அங்கே மக்கள் தொகை பெருகியதற்கேற்ப தொகுதிகள் அதிகரிக்கும். இதைத்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி, ஒரு திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்தியதற்காக தண்டனையா என்று அவர் குரல் எழுப்பினார். அதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். தமிழ்நாட்டைப் போல மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை சரியாக செயல்படுத்தியதால், தொகுதிகளை இழக்க நேரிடும் பிற மாநிலங்களை ஒருங்கிணைத்து கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைத்தார்.
கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, பஞ்சாப், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்கள் தமிழ்நாட்டைப் போலவே தொகுதிகளை இழக்கக்கூடிய நிலையில் உள்ள மாநிலங்களாகும். அந்தந்த மாநிலங்களில் உள்ள கட்சித் தலைவர்களை, முதல்வர்களை தி.மு.க. சார்பிலான குழு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்ததன் அடிப்படையில், மார்ச் 22 அன்று கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. சென்னைக் கூட்டம் டெல்லி வரை எதிரொலித்தது.
கேரள முதல்வர் பினரயி விஜயன், பஞ்சாப் முதல்வர் மான், தெலங்கனா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டவர்களுடன் அந்தந்த மாநிலக் கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டதால் மத்திய அரசு இந்தக் கூட்டத்தின் மீது தனிக் கவனம் செலுத்தியது. கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஒருமித்த குரலில் முடிவை எடுத்திருப்பது மத்திய அரசுக்கு புது சமிக்ஞையைக் கொடுத்துள்ளது.
மக்கள்தொகைக் கட்டுப்பாட்டை பிற மாநிலங்கள் சீராக கடைப்பிடிக்காததால், அதனைக் கடைப்பிடித்த மாநிலங்களின் எண்ணிக்கையைக் குறைக்கக்கூடாது. எனவே தொகுதி மறுவரையையை முன்பு இரண்டு முறை ஒத்தி வைத்ததுபோல அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும். தொகுதிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை நாடாளுமன்றத்தில் தற்போது ஒவ்வொரு மாநிலத்திற்கும் உள்ள விகிதாச்சாரம் குறைக்கப்படக்கூடாது. எடுத்துக்காட்டாக, இந்திய நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 453 இடங்களில் தமிழ்நாட்டிற்கான 39 தொகுதிகள் என்பது 7.18% ஆகும். இதுபோல ஒவ்வொரு மாநிலங்களுக்குமான விகித்தாச்சாரம் எந்த வகையிலும் குறைக்கப்படக்கூடாது என்பது உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் இந்தக் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சியின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்களும், பிஜூ ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இவர்கள் யாரும் பா.ஜ.க. கூட்டணியில் இல்லை. அதனால், எதிர்க்கட்சிகளின் கூட்டம் போலத் தோற்றமளித்தாலும், பா.ஜ.க.வின் தோழமைக் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் மாநில உரிமைகளுக்கான குரலாகவும், கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்துவதற்கான முன்னெடுப்பாகவும் இந்தக் கூட்டம் அமைந்துவிட்டது. கூட்டத்தில் பங்கேற்காத ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் தலைவரும் ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி, கூட்டம் நடந்த நாளில் தொகுதி மறுவரையறையால் ஆந்திராவுக்கான தொகுதிகளை குறைத்துவிடக்கூடாது என்று பிரதமருக்கு எழுதிய கடிதமே இதற்கான சான்றாகும்.
இந்தியாவில் உள்ள பல மொழிகளும் இந்தி ஆதிக்கத்தால் பாதிக்கப்படுவதை முதன் முதலாக நாடாளுமன்றத்தில் உரக்கப் பேசியவர் அண்ணா. தமிழ்நாட்டின் குரலும் செயலும்தான் இன்றளவும் மாநில மொழிகளுக்கு அரணாக உள்ளது. மாநில சுயாட்சிக்கானத் தீர்மானத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றியவர் தமிழ்நாட்டின் முதலமைச்சரான கலைஞர் கருணாநிதி. மத்திய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளைக் காப்பதற்கான கவசமாக இருப்பது, 1974ல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சுயாட்சித் தீர்மானம்தான். இன்றைய நிலையில், மாநிலங்களுக்கிடையிலான ஒருங்கிணைந்த நடவடிக்கையே இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்தும் கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்தக்கூடியதாகும். அதை மிகச் சரியாக மேற்கொண்டிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர்.
வடக்குக்கு வழிகாட்டும் வகையில் கூட்டாட்சிக்கான குரலை முன்னெடுத்திருக்கிறது தெற்கு.
9p0n0x
hckkhp
gv5rt2
phnin6