
இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் எப்போதும் அச்சத்திலேயே வாழவேண்டும் என்கிற தாக்குதல் போக்குடன் மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சி.ஏ.ஏ என்கிற குடியுரிமை திருத்த சட்டம் ஒரு வகை தாக்குதல் என்றால், வக்ஃப் வாரிய சட்ட திருத்தம் மற்றொரு வகை தாக்குதல்.
முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு சொத்துகள், அவற்றுக்குத் தானமாக வழங்கப்பட்ட சொத்துகள் இவை வக்ஃப் வாரிய சட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நீண்டகாலமாக நடைமுறையில் உள்ள இந்த சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வந்து புதிய சட்டத்தை பா.ஜ.க அரசு அவசர அவசரமாக நிறைவேற்றியது. மத்திய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டம் அநியாயமானது என்பதை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எடுத்துரைத்தன. பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும் இந்த சட்டத்திருத்தம் உருவாக்கக்கூடிய சிக்கல்களை எடுத்துரைத்தன. நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்ததாலும், நாடாளுமன்ற நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் முடக்கக் கூடிய அளவுக்கு எதிர்ப்பு வெளிப்பட்டதாலும், நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு சட்டத் திருத்தம் அனுப்பப்பட்டது.
இந்தக் கூட்டுக் குழுவுக்கு பா.ஜ.க. எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைவராக இருந்தார். பல்வேறு கட்சியினரும் இதில் உறுப்பினராக நியமிக்கப்பட்டனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க.வின் மக்களவை எம்.பி. ஆ.ராசா, மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த எம்.எம்.அப்துல்லா இருவரும் உறுப்பினர்களாக இருந்தனர். கூட்டுக்குழுவின் தலைவர் ஜெகதாம்பிகா பால் பாரபட்சமான முறையில் நடந்து கொள்கிறார் என்று பல தரப்பினரும் குற்றம்சாட்டினர். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கூட்டுக்குழு உறுப்பினர் மீது தாக்குதல் நடைபெறக்கூடிய அளவுக்கு நிலைமை இருந்தது.

இத்தகைய நெருக்கடியான சூழலிலும் கூட்டுக்குழு உறுப்பினர்கள் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வுகளையும் ஆலோசனைகளையும் நடத்தி, தங்கள் கருத்துகளையும், திருத்தச் சட்டத்தில் உள்ள குறைகளையும், மாற்றம் செய்யவேண்டியவை குறித்தும் தெரிவித்தனர். எதிர்க்கட்சிகளின் கருத்துகளைப் புறக்கணித்து இறுதி அறிக்கையை சமர்ப்பித்தார் நாடாளுமன்ற கூட்டுக்குழுத் தலைவர். இனி நீதிமன்றம் ஒன்றே தீர்வு என்ற நிலைக்கு எதிர்க்கட்சிகள் வந்தன.
காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. முஸ்லிம் அமைப்புகள் சிலவும் வழக்கு தொடுத்தன. தமிழக வெற்றிக் கழகம் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசியல் சாசனத்தின் முகப்புரை வலியுறுத்துகிற மதச்சார்பின்மைக்கு எதிராகவும், மதநல்லிணக்கத்தை சிதைக்கும் வகையிலும் உள்ள வக்ஃப் சட்டத் திருத்தத்தால், இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கின்ற போக்கை பா.ஜ.க. அரசு மேற்கொள்வதை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டின. தமிழ்நாடு சட்டமன்றத்தில் வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து தீர்மானத்தை நிறைவேற்றியது தி.மு.க. அரசு. பெரும்பாலான கட்சிகள் இந்தத் தீர்மானத்தை ஆதரித்தன. பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் எதிர்த்தனர். வெளிநடப்பு செய்தனர். அ.தி.மு.க.வினர் வேறு பிரச்சினைகளை முன்வைத்து திசை திருப்பினர்.
இந்த நிலையில்தான், வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வின் உத்தரவு செப்டம்பர் 15 அன்று வெளியானது. திருத்த சட்டத்திற்கு முழுமையான தடை விதிக்க முடியாது என்பதைத் தெரிவித்த தலைமை நீதிபதி கவாய், பா.ஜ.க. அரசின் வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தில் உள்ள சில விதிகளுக்கு தடை விதித்திருப்பது முக்கியமானது.
வக்ஃபு அமைப்புக்கு சொத்துகளை அளிப்பவர்கள் 5 ஆண்டுகள் முஸ்லிம் மதத்தை நடைமுறையில் கடைப்பிடித்திருக்க வேண்டும் என்பது அதில் ஒரு விதி. முஸ்லிம் அல்லாதவர்களும் பல முஸ்லிம் நிறுவனங்களுக்கு சொத்துகளைக் கொடுத்திருப்பதால் அந்த சொத்துகள் இதன் மூலம் பாதுகாக்கப்படும்.
வக்ஃபு நிலத்தை அரசு நிலம் என்று ஒரு புகார் எழுந்தாலே அது குறித்து உரிய அதிகாரியின் இறுதி அறிக்கைக்கு முன்பாகவே அந்த சொத்தை பறிக்கும் விதிக்கும் தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.
வக்ஃப் சொத்துகளை அதன் பயனாளிகளிடமிருந்து நீக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு உண்டு என்ற பா.ஜ.க. அரசின் விதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய வக்ஃப் வாரியத்தில் நான்குக்கும் மேற்பட்ட முஸ்லிம் அல்லாதவர்களை சேர்ப்பதற்கும், மாநில வக்ஃப் வாரியங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் அல்லாதவர்களை சேர்ப்பது என்கிற பா.ஜ.க. அரசின் விதிக்கும் தடை போடப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கான வக்ஃப் போர்டில் மற்ற மதத்தினரை பெரும்பான்மையாக்கும் முயற்சி இதன் மூலம் தடை செய்யப்பட்டுள்ளது.
திருத்த சட்டத்தை பா.ஜ.க. அரசு செயல்படுத்தலாம். அதற்குள் இருந்த மோடி-அமித்ஷா தரப்பின் தில்லுமுல்லுகளுக்குத் தடை போடப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.