
அரை நூற்றாண்டுகாலமாக இரு துருவங்களாக இருந்த தமிழ்நாட்டு அரசியல் இப்போது பல கோணங்களைக் காண்கிறது. செல்வி. ஜெயலலிதாவின் மரணம், அதனைத் தொடர்ந்து கலைஞர் கருணாநிதியின் மரணம் இவை அ.தி.மு.க-தி.மு.க. என்ற போட்டி அரசியல் களத்தை மாற்றி புதிய கட்சிகளுக்கு வாய்ப்பை உருவாக்கம் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் உருவாகிவிட்டதாகக் கணித்தார்கள். தி.மு.க.வில் வெற்றிடம் உருவாகவில்லை என்பதை கலைஞர் கருணாநிதிக்குப் பிறகு தலைமைப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தேர்தல் களத்தில் நிரூபித்து, ஆறாவது முறையாக தி.மு.க. ஆட்சியை அமைத்துவிட்டார்.
செல்வி.ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு மிச்ச சொச்சம் இருந்த ஆட்சிக்காலத்தை அனுபவித்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. முன்னும் பின்னுமாக நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டே இருக்கிறது. அதனைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டில் புதிய சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க முயற்சித்து வருகிறது. ஏற்கனவே, தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் நான்தான் போட்டி என்ற தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இப்போது இல்லை. அதன் பின், அந்த போட்டியில் நான்தான் இருக்கிறேன் என்ற நாம் தமிழர் கட்சி சீமான், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வளர்ந்த நிலையில் தற்போது ஆடு-மாடு-மரம்-செடி கொடிகளின் வாக்குரிமைக்காகப் பேசக்கூடிய பரிதாப நிலையில் இருக்கிறார்.
தி.மு.கவுக்கு போட்டி நாங்கள்தான் என்று புறப்பட்டிருக்கிறர் த.வெ.க தலைவர் நடிகர் விஜய். கொள்கை எதிரி பா.ஜ.க. என்றும், அரசியல் எதிரி தி.மு.க என்றும் அறிவித்த அவர், பா.ஜ.க.வை பற்றி பேசுவதைக் குறைத்து, தி.மு.க.வையும் அதன் தலைமையையும் மட்டுமே தொடர்ந்து விமர்சிக்கிறார். விழுப்புரம் மாவட்டத்திலும், மதுரையிலும் மாநாடுகளை நடத்திய விஜய், செப்டம்பர் 13 முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாவட்ட வாரியாக பிரச்சாரத்தை மேற்கொள்ளவிருக்கிறார். இந்தப் பரப்புரைக்கு காவல்துறை அனுமதி அளிக்கத் தயங்குகிறது என்றும், தி.மு.க. அரசு தங்கள் கட்சியைப் பார்த்து பயப்படுகிறது என்றும் விஜய் பெயரில் ஓர் அறிக்கையும் வெளிவந்தது.
முதல் பரப்புரை நடைபெறும் திருச்சியில் நெருக்கடியான மரக்கடை-மார்க்கெட் பகுதியில் அனுமதி கோரியது விஜய் கட்சி. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் ஏராளமான நிபந்தனைகளை விதித்து, அனுமதி கொடுத்துள்ளது காவல்துறை. ரோடு ஷோ கூடாது. 30 நிமிடங்களுக்குள் பேசி முடிக்க வேண்டும், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது. கட்சி சார்பில் பெண்கள்-குழந்தைகள்-மாற்றுத்திறனாளிகளை அழைத்து வரக்கூடாது. பரப்புரை முடிந்தபிறகு, போலீசார் சொல்லும் வழியில்தான் அடுத்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்கிற நிபந்தனைகளைப் பார்க்கும்போது, புதிதாகத் தோன்றிய கட்சியைப் பார்த்து, ஆளுங்கட்சி ஏன் பயப்பட வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படுவது இயல்பு.
இதற்கு முன் த.வெ..க நடத்திய மாநாடுகள், போராட்டங்கள், சந்திப்புகள் உள்ளிட்ட எல்லா நிகழ்வுகளிலும் பொது இடங்களில் த.வெ.க தொண்டர்கள்(விஜய் ரசிகர்கள்) செய்த அலப்பறையும் அதனால் ஏற்பட்ட சூழல்களும்தான் இந்த நிபந்தனைகளுக்கு அடிப்படைக் காரணம். தொண்டர்கள் தெருவிளக்கு கம்பங்களில் ஏறக்கூடாது. தடுப்புகளை உடைக்கக்கூடாது. குறுக்கே பாயக்கூடாது என்கிற அளவிற்கு பல நிபந்தனைகள் போடப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது, இது நிபந்தனை அல்ல, நெறிமுறை என்பது புரியும்.
மின்சார கம்பிகள் செல்லும் இடத்தில் மரத்தின் மீது ஏறி நின்று கொடியை அசைப்பது, விஜய் வரும் வாகனத்தின் மீது மரத்திலிருந்து குதிப்பது, கூட்டம் நடக்கும் இடத்திற்கு செல்லும் வழியில் உள்ள சுங்கச்சாவடிகளில் அடாவடி செய்வது என்பதைத் தாண்டி, மாநாட்டில் உள்ள கிரில் கம்பிகளில் க்ரீஸ் தடவி, ரசிகர்களைக் கட்டுப்படுத்தக்கூடிய அளவுக்கு கட்சி நிர்வாகமே கெடுபிடி காட்டிய நிகழ்வு நடந்திருப்பதால், காவல்துறையின் நெறிமுறை என்பது தேவையான ஒன்றாகவே இருக்கிறது.
அ.தி.மு.க பல கோஷ்டிகளாக இருப்பதாலும், அதை பா.ஜ.க. இயக்குவதாலும் மக்களின் மனநிலையில் தி.மு.க.வுக்கு மாற்று த.வெ.க என்ற நிலையை உருவாக்க விஜய்யும் அவரது கட்சிக்காக பணம் செலவழிக்கும் நிர்வாகிகளும் பெரும் முயற்சி செய்கிறார்கள். பொதுவாழ்க்கை என்பது வார இறுதி நாளில் பொழுதுபோக்கிற்காக செயல்படுவதல்ல. ரசிக மனநிலையை உசுப்பேற்றி, ஆட்சியைப் பிடித்துவிடலாம் என நினைப்பதும், அதற்கேற்ப தொண்டர்களான ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தாறுமாறாக மற்றவர்களைப் பிறாண்டி வைப்பதும் கட்சித் தலைமையின் திறன் இவ்வளவுதானா என பொதுமக்களிடம் அம்பலப்படுத்திவிடும். 2026 தேர்தல் முடிவதற்குள் நிறைய சம்பவங்களை எதிர்பார்க்கலாம்.