10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், அதிக மதிப்பெண் பெற்ற பலரும் அதற்கேற்ற உயர்கல்வியில் தீவிரமாக இருக்கும் நிலையில், குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்து என்ன படிப்பது? இந்த மதிப்பெண்ணுக்கு என்ன கோர்ஸ் கிடைக்கும்? என்கிற புரிதல்கள் இல்லாமல் பலரும் விழிக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்யவே இலவச அழைப்பு மைய சேவையை செய்து வருகிறது பள்ளி கல்வித்துறை.
கடந்த 2018ம் ஆண்டில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்காக பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டதுதான் 14417 எனும் இலவச அழைப்பு எண். பள்ளி கல்வித்துறையின் செயல்பாடுகள், மாணவர்கள் – ஆசிரியர்கள் – பெற்றோர்களுக்கான உதவிகளை ஒருங்கிணைத்தல் மற்றும் உயர்கல்விக்கான ஆலோசனைகளை வழங்குதல் ஆகிய பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது இந்த இலவச அழைப்பு மையம்.
காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இந்த இலவச சேவை மையம் செயல்பட்டு வருகிறது. தகுந்த பயிற்சி பெற்றோர் இந்த மையத்தில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
உயர்கல்விக்கான ஆலோசனைகள் மட்டுமன்றி, மாணவர்களின் அழுத்தம், மனச்சோர்வு தொடர்பான பிரச்சனைகளுக்கும் தொலைபேசி மூலமாகவே கவுன்சிலிங்க அளிக்கப்படுகிறது. இதன் மூலம் விரக்தியடைந்து தற்கொலை முடிவை எடுக்கும் மாணவர்களை அவற்றிலிருந்து தடுக்கப்படும் என்று நம்பிக்கையில் இந்த மையம் இயங்கி வருகிறது.
கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் 8 சதவிகித அழைப்புகள் அதிகமாகி இருக்கின்றன என்கிறார் 14417 அழைப்பு மையத்தின் தலைமை அதிகாரி சில்பி. அவர் மேலும், ‘’உயர்கல்விக்கான ஆலோசனைகள் எங்கள் அதிகாரிகள் மூலம் சரியாக வழங்கப்பட்டு வருகின்றன. மன குழப்பம், மன உளைச்சல் உள்ளவர்களுக்கும் மன நல ஆலோசகர்கள் மூலம் முறையான ஆலோசனைகள் வழங்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகின்றன’’ என்கிறார்.
ஸ்பெஷல் கிளாஸ் எடுக்கிறார்கள், பள்ளி கட்டணம் அதிகம் வசூலிக்கிறார்கள் என்றும் அதிகம் புகார்கள் வருகின்றன. அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்கிறார் சில்பி.