பாஜக அறிவித்ததை விட நாடு முழுவதும் கோடி கோடியாக அதிக செலவீனங்களை செய்திருக்கக் கூடும் என The Wire செய்தி நிறுவனம் பரபரப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் இரண்டு முக்கிய செலவீனங்களாக நாடு முழுவதும் அலுவலக கட்டிடங்களைக் கட்டுவதிலும் தேர்தல் பிரச்சாரங்களுக்கு ஆகும் செலவுகளாக உள்ள நிலையில், பாஜக அறிவித்த நிதிகளின் பொருந்தாத தன்மை குறித்த கேள்விகளை The Wire செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கை எழுப்புகிறது.
கடந்த 2014-15 மற்றும் 2022-23 ஆண்டுகளுக்கு இடையில் பாரதிய ஜனதா கட்சி 14,633 கோடி ரூபாய் மதிப்பிலான வருமானத்தை ஈட்டியதாக தெரிவித்திருக்கிறது. ஆனால், பாஜக தனது கட்டிடங்கள் மற்றும் தேர்தல் பிரச்சாரங்களுக்காக செலவழித்திருக்கும் நிதியின் மதிப்பீடு முறையே சுமார் ரூ.74,053 கோடி மற்றும் ரூ.1 லட்சம் கோடி என்று The Wire நிறுவனத்தின் ஆய்வு அறிக்கை கூறுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆகஸ்ட் 2014-ம் ஆண்டில், அனைத்து மாநிலங்களிலும் மாவட்டங்களிலும் கட்சி அலுவலகங்கள் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அடுத்த ஆண்டு நாடு முழுவதுமுள்ள சுமார் 694 மாவட்டங்களில் புதிய கட்சி அலுவலகங்களை கட்ட பாஜக முடிவு செய்யப்பட்ட நிலையில், மார்ச் 2023-ம் ஆண்டுக்குள், மாவட்டங்களின் எண்ணிக்கையை 887-ஆக உயர்த்தியதாக, The Wire அறிக்கை கூறுகிறது.
2014 முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில் நிலம் மற்றும் கட்டிடங்களுக்காக பாஜக 1,124 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது.
கடந்த 8 ஆண்டுகளாக இந்தக் கட்டிடங்களின் மதிப்பு (நிலம் மற்றும் கட்டிடம் சேர்த்து) ரூ. 3 கோடியாகவே இருப்பதாக பாஜக கணக்கில் காட்டுகிறது. ஆனால், பிரதமர் மோடியின் அறிவிப்பின்படி பாஜக கிட்டத்தட்ட 900 மாவட்ட அலுவலகங்களைக் கட்ட வேண்டும் என்றால், 2,661 கோடி ரூபாய் செலவாகும் என்று The Wire கூறியுள்ளது.
2015-16 முதல் 2022-23 வரை பாஜக தனது தேர்தல் பிரச்சாரச் செலவுகளை ரூ. 5,744 கோடியாகக் கணக்கிட்டுள்ள நிலையில், 2019 தேர்தலில் கட்சியின் செலவு மட்டும் ரூ.27,000 கோடியை நெருங்கியதாக ஊடக ஆய்வு மையம் (CMS) நடத்திய ஆய்வில் தெரியவருகிறது. இது 2019 மக்களவைத் தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் செலவழித்த மொத்த மதிப்பில் கிட்டத்தட்ட 45% ஆகும் என்று The Wire அறிக்கை கூறுகிறது.
அதே போல், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் செலவீனம் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் அதாவது 60,750 கோடி ரூபாயாக இருக்கலாம் என்றும் The Wire கூறியுள்ளது.
The Wire Article Link: The Rs 60,000 Crore Question the BJP Needs to Answer About its Financials