இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ள நிலையில், அனைத்து வாக்குகளும் ஜூன் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்த சூழலில், மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு இன்று(19/03/2024) கூடிய அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள், பட்டியலின/பிற்படுத்தப்பட்ட மக்கள் என பல்வேறு தரப்பினருக்கு 25 முக்கிய வாக்குறுதிகளுடனான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கான 5 வாக்குறுதிகள்:
100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம் 400 ரூபாயாக உயர்த்தப்படும்
தொழிலாளர்களின் சுகாதார உரிமையை உறுதி செய்ய சட்டம் இயற்றப்படும்
முக்கிய அரசுப் பணிகளில் தொழிலாளர் விரோத ஒப்பந்த முறை முடிவுக்குக்குக் கொண்டுவரப்படும்
நகர்ப்புற வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் தினசரி கூலித் தொழிலாளர்களின் பங்கேற்பு மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும்
ஆயுள் காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு உள்ளிட்ட விரிவான சமூக பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும்
விவசாயிகளுக்கான 5 வாக்குறுதிகள்:
விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க சட்டம் இயற்றப்படும்
விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் பொருள்களுக்கு GST-யில் இருந்து வரி விலக்கு அளிக்கப்படும்
விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க நிரந்தர ஆணையம் அமைக்கப்படும்
பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் 30 நாட்களுக்குள் இழப்பீடு வழங்கப்படும்
விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய வேளாண் பொருள்கள் ஏற்றுமதி, இறக்குமதி கொள்கை உருவாக்கப்படும்
பெண்களுக்கான 5 வாக்குறுதிகள்
ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும்
வேலைக்கு செல்லும் பெண்களுக்காக மாவட்டத்துக்கு ஒரு விடுதி அமைக்கப்படும்
ஒன்றிய அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும்
ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார்
அங்கன்வாடி, ஆஷா, மதிய
உணவு திட்ட பணியாளர்களுக்கான மாத
ஊதியம் இரட்டிப்பாக்கப்படும்
SC, ST, OBC சமூகத்தினருக்கான 5 வாக்குறுதிகள்:
நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்
இடஒதுக்கீட்டு வரம்பை 50% ஆக உயர்த்தும் வகையில், சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும்
SC மற்றும் ST சமூகத்தினருக்கான சிறப்புக் கூறு திட்டத்தை மேம்படுத்தி செயல்படுத்தப்படும்
பழங்குடியினருக்கு எதிரான வனப்பாதுகாப்பு திருத்தச் சட்டம் மற்றும் நிலம் கையகப்படுத்தும் சட்டம் திரும்பப் பெறப்படும்
பழங்குடியினருக்கு சுயாட்சி மற்றும் கலாச்சார உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உத்தரவாதம் அளிக்கப்படும்
இளைஞர்களுக்கான 5 வாக்குறுதிகள்:
ஆட்சியமைத்த உடன் 30 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப்பணிகளில் வேலைவாய்ப்பு அளிக்கப்படும்
இளைஞர்களுக்கான ஸ்டார்ட்அப் திட்டத்திற்கு ரூ.5,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
படித்த அனைத்து இளைஞர்களுக்கும் மாதம் 8500 ரூபாய் ஊதியத்துடன் ஓராண்டு அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சி வழங்கப்படும்
நாடுமுழுவதும் தேர்வு வினாத் தாள்கள் கசிவதை முற்றிலுமாக தடுக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்படும்
கிக்(Gig), அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சிறந்த வேலை சூழல்கள் மற்றும் சமூக பாதுகாப்புகள் உறுதிப்படுத்தப்படும்
உள்ளிட்ட 25 தேர்தல் வாக்குறுதிகள் உடன் காங்கிரஸ் கட்சி 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகியுள்ளது.