
ஜனநாயகத் தேர்தல் முறையின் சிறப்பே, 18 வயது நிரம்பிய ஆண்-பெண் உள்ளிட்ட அனைத்து வாக்காளர்களுக்குமான வாக்களிக்கும் உரிமைதான். அந்த உரிமையை உறுதி செய்வதுதான் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையத்தின் முதன்மைப் பணியாக இருக்கவேண்டும். ஆனால், அண்மைக்காலமாக தலைமைத் தேர்தல் ஆணையத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் சந்தேகத்திற்குரியதாகவும், ஒரு தலைப்பட்சமாகவும் இருப்பது இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் ரகசிய தாக்குதலாகும்.
பீகார் மாநில சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில வாக்காளர் பட்டியலை சிறப்பு மறுஆய்வு செய்யும் திட்டத்தை மேற்கொண்டுள்ளது தலைமைத் தேர்தல் ஆணையம். வீடு வீடாக சென்று தேர்தல் ஆணைய அலுவலர்களே நேரில் கணக்கெடுப்பாளர்கள் என்றும் இதற்காக ஏறத்தாழ 5000 பேர் நியமிக்கப்பட்டு, ஆலோசனைகளை மேற்கொண்டு, பணியையும் தொடங்கிவிட்டார்கள் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் இந்தியக் குடிமகன்களாக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகள் சரியாக உள்ளனவா என்று கவனிப்பதுதான் தேர்தல் ஆணையத்தின் தொடர்ச்சியான வேலை. ஆனால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பல தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் முறையாக இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியபோதும், சில மாதங்களுக்கு முன் நடந்த மகாராஷ்ட்ரா மாநில சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு குறித்து குரல் கொடுத்தபோதும் அலட்சியம் காட்டிய இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலின்போது மட்டும், தானே முன்வந்து சிறப்பு மறுஆய்வை நடத்த வேண்டிய அவசியமென்ன?
பீகாரில் தற்போது நடைபெறுவது முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜ.க இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி. நிதிஷ்குமார் ஒவ்வொரு தேர்தலிலும் என்ன நிலைப்பாடு எடுப்பார் என்பது இந்திய அரசியல் வட்டாரம் நன்கறிந்ததுதான். பீகாரில் உள்ள இதர பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மை முஸ்லிம்களின் வாக்குகள் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கக்கூடியவை. பா.ஜ.க.வுடன் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் தொடர்ந்து கூட்டணியை நீடித்தால் இந்த வாக்குகள் கிடைப்பது கடினம் என்பது நிதிஷ்குமார் கணக்கு. பா.ஜ.க.வுக்கோ நிதிஷ்குமார் முதுகுதான் பீகாரில் அரசியல் சவாரி செய்வதற்கு வசதியாக இருக்கிறது. அதனால், முஸ்லிம் வாக்காளர்களை தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் மறு ஆய்வு மூலம், போதிய ஆவணங்கள் இல்லை என்றோ, வீடு மாறிவிட்டார்கள் என்பன போன்ற காரணங்களை வைத்தோ வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்து விடவேண்டும் என்பதுதான் இதிலுள்ள மறைமுகத் திட்டம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
இந்தியாவில் உள்ள வளர்ச்சி குறைந்த பெரிய மாநிலங்களில் பீகாரும் ஒன்று. நீண்டகாலமாகவே அது தேங்கியே இருக்கிறது. வாக்காளர் அடையாள அட்டை கட்டாயம் என்கிற விதிமுறையைத் தேர்தல் ஆணையம் கொண்டு வந்த பொழுது, பீகார் முதலமைச்சராக இருந்த லாலுபிரசாத் அது பற்றிய அதிருப்தியை வெளியிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம், “வாக்காளர் அடையாள அட்டை இருந்தால்தான் வாக்களிக்க முடியும் என்று சொன்னால், ஏழை மக்கள் அந்த முக்கியமான ஆவணத்தை எப்படி பாதுகாப்பார்கள்? அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையுடன் ஒரு சூட்கேஸூம் கொடுக்கவேண்டும்” எனத் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்தார்.
அப்போது அது அரசியல் வட்டாரத்தில் நகைச்சுவையாகப் பார்க்கப்பட்டது. இப்போது பீகார் மக்களிடம் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, இருப்பிடச் சான்று, பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை தேர்தல் ஆணையம் சரிபார்க்கின்ற சூழலில், பீகாரின் பெரும்பாலான மக்களின் வாழ்நிலையும், அவர்களை வாக்காளர் பட்டியல் மறுஆய்வு என்ற பெயரில் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய முயற்சிப்பதையும் பொருத்திப் பார்க்க முடிகிறது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக் குரலால், வாக்காளர்கள் ஒரு படிவத்தை நிரப்பி அதை தேர்தல் அலுவலர்கள் நடத்தும் முகாமில் வழங்க வேண்டும் என்று தன் நிலையை சற்று தளர்த்தி அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
“கோடிக்கணக்கான வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்குவதற்கு தேர்தல் ஆணையம் தயாராகிவிட்டது. இந்த வாக்குகள் பா.ஜ.க.வுக்கு எதிரானவை” என காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதாதளம், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் குரல் எழுப்புகின்றன.
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு என்பது தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே நிறைவு செய்யப்படவேண்டும். பீகார் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கால அவகாசமின்றி இப்படியொரு மறுஆய்வை நடத்துவது என்பது குடிமக்களின் ஜனநாயக உரிமையைப் பறிக்கும் அநீதியாகும்.