கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் சட்டத்தின் கீழ், சுமார் 20 புதிய நிறுவனங்கள்103 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுத்துள்ளன என்கிற அதிர்ச்சிகர தகவல்கள் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளை ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது.
இந்திய நிறுவனங்கள் சட்டத்தின் படி, “நிறுவனத்தை தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவடைவதற்குள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கக் கூடாது” என்கிற விதியை மீறி சுமார் 20 நிறுவனங்கள் சட்டவிரோதமாக தேர்தல் பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்துள்ளன. இது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
இந்திய நிறுவனங்கள் சட்டம்-2013 பிரிவு 182-ன் படி, நிறுவனம் தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவடைவதற்குள் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கியது தெரியவந்தால், 5 மடங்கு அபராதத்துடன், நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்க விதிகள் உள்ளன.
இந்த 20 நிறுவனங்களில் பெரும்பான்மையானவை கடந்த 2019-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு இருப்பதும், சில நிறுவனங்கள் தொடங்கிய சில மாதங்களிலேயே பல கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளன என்கிற தகவலும் தெரியவந்துள்ளது.
அதில் சுமார் 12 நிறுவனங்கள் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்டு இயங்கி வரும் நிலையில், அதிகபட்சமாக இந்த 20 நிறுவனங்கள் மூலம் தெலங்கானாவின் பாரத ராஷ்டிர சமிதி (BRS) கட்சிக்கு 31.5 கோடி ரூபாய் சென்றுள்ளது.
பாஜக 26 கோடி ரூபாய், திரிணாமூல் காங்கிரஸ் 9.5 கோடி ரூபாய், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 9 கோடி ரூபாய், காங்கிரஸ் கட்சி 8 கோடி ரூபாய் என பல்வேறு கட்சிகளுக்கு இந்த 20 நிறுவனங்கள் மூலம் 103 கோடி ரூபாய் மதிப்பிலான நன்கொடைகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் சென்றுள்ளன.
கடந்த 2017-ம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் சட்டம் கொண்டுவருவதற்கு சில காலம் முன்பு, இந்திய நிறுவனங்கள் சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தங்களை மேற்கொண்டது. அந்த திருத்தத்தில் நிறுவங்கள் தங்களின் ஆண்டு வருமானத்தில் 7.5 சதவிகிம் வரை மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுக்க வேண்டும் என்றிருந்த விதியை நீக்கப்பட்டது.
இந்திய நிறுவனங்கள் சட்டத்தில் அத்தகைய திருத்தம் மேற்கொள்வதற்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையமும் ரிசர்வ் வங்கியும் கடும் எதிர்ப்பை தெரிவித்ததோடு, போலி நிறுவங்கள் இதை பயன்படுத்தி பணமோசடிகளில் ஈடுபடும் வாய்ப்புகள் இருப்பதாக எச்சரித்து இருந்தன.
இந்த சூழலில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், பல்வேறு நிறுவனங்கள் ‘தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை’ பயன்படுத்தி பணமோசடிகள் செய்திருக்கலாம் என்கிற அதிர்ச்சிகர தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன.