ஆன்லைன் தகவல் களஞ்சிய உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர் எலான் மஸ்க் தனது செயற்கை நுண்ணறிவு நிறுவனம் xAI மூலம் புதிய தகவல் தளமான “குரோக்பீடியா (Grokipedia)” என்ற ஏஐ அடிப்படையிலான கலைக்களஞ்சியத்தை
விக்கிபீடியாவுக்கு போட்டியாக அறிமுகப்படுத்தியுள்ளார்.

விக்கிபீடியாவுக்கு மாற்றாக ‘குரோக்பீடியா’
2001ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விக்கிபீடியா( Wikipedia ) , உலகம் முழுவதும் தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்ட மற்றும் திருத்தப்படும் ஆன்லைன் தகவல் களஞ்சியம் ஆகும். தற்போது 6.5 கோடிக்கும் மேற்பட்ட கட்டுரைகளைக் கொண்ட இந்த தளம், விக்கிமீடியா அறக்கட்டளை மூலம் நிர்வகிக்கப்படுகிறது. ஆனால், விக்கிபீடியாவின் கட்டுரைகள் பக்கச்சார்பாகவும், முழுமையற்றதாகவும் உள்ளன என்ற குற்றச்சாட்டை எலான் மஸ்க் பலமுறை முன்வைத்திருந்தார்.
இந்த விமர்சனங்களுக்கு பதிலாகவே, மஸ்க் இரண்டு வாரங்களுக்கு முன்பு விக்கிபீடியாவுக்கு போட்டியாக ‘குரோக்பீடியா’ என்ற புதிய தளத்தை உருவாக்கப் போவதாக அறிவித்தார். இப்போது அந்த அறிவிப்பு நனவாகியுள்ளது.
எக்ஸ் ஏஐ மூலம் இயக்கப்படும் தளம்
குரோக்பீடியா தளம், மஸ்க்கின் xAI நிறுவனம் உருவாக்கிய க்ரோக் (Grok) AI தொழில்நுட்பத்தின் மேல் அடிப்படையாக இயங்குகிறது. இந்த AI முறை, விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகள் மற்றும் தகவல்களை ஆய்வு செய்து, அவற்றில் உள்ள தவறுகள், அரை உண்மைகள் மற்றும் பக்கச்சார்புகளை சரிசெய்து, நம்பகமான வடிவில் மீண்டும் வழங்கும்.
இதனால், இணையத்தில் சுற்றிவரும் தவறான அல்லது பாதியளவு உண்மையான தகவல்களை மக்கள் துல்லியமான வடிவில் அறிந்து கொள்ள முடியும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 8.85 லட்சம் கட்டுரைகள்
குரோக்பீடியாவின் ஆரம்ப பதிப்பில் 8.85 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் இடம் பெறும் தகவல்கள் அனைத்தும் க்ரோக் ஏஐ மூலம் சரிபார்க்கப்பட்டவை மட்டுமே. இதில் மனிதர்கள் நேரடியாக திருத்தம் செய்ய முடியாது. அதற்குப் பதிலாக, AI தானாகவே தகவல்களை புதுப்பிக்கும். இதனால் பக்கச்சார்பு மற்றும் தவறான திருத்தங்கள் இடம்பெறாமல் தடுக்க முடியும்.

திறந்த மூல (Open Source) வடிவில் இலவசமாக கிடைக்கும்
குரோக்பீடியா முழுமையாக திறந்த மூல (Open Source) வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. எந்தவித கட்டணமும் இல்லாமல் பொதுமக்கள் இதைப் பயன்படுத்தலாம் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மேலும், AI ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், மற்றும் தகவல் துறை மாணவர்கள் இதன் வளர்ச்சியில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். “உலகின் உண்மையான அறிவை அனைவருக்கும் அணுகக் கூடியதாக மாற்றுவதே எங்கள் நோக்கம்” என்று மஸ்க் கூறியுள்ளார்.
விக்கிபீடியா குறித்த விமர்சனங்கள்
மஸ்க் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலமுறை விக்கிபீடியா தளத்தை “இடதுசாரி ஆர்வலர்களால் கட்டுப்படுத்தப்படும் தளம்” என்று குற்றம்சாட்டி வந்தனர்.
அமெரிக்க முதலீட்டாளர் டேவிட் சாக்ஸ் (David Sacks) உள்ளிட்டோர்,
“விக்கிபீடியா பல தலைப்புகளில் பக்கச்சார்பான விளக்கங்களை வழங்குகிறது. அதனால் AI பயிற்சிகளுக்கும், கூகுள் தேடல்களுக்கும் தவறான விளைவுகள் ஏற்படுகின்றன”
என்று கூறியுள்ளனர். இந்த நிலையில், குரோக்பீடியா துல்லியமான உண்மை அடிப்படையிலான தகவல் களஞ்சியமாக உருவாகும் என்று நம்புகின்றனர்.
க்ரோக் AI எப்படி வேறுபடுகிறது?
குரோக்பீடியா பயன்படுத்தும் க்ரோக் AI மிக முன்னேறிய அனுமானக் கணக்கீட்டு முறையைப் பயன்படுத்துகிறது. இது விக்கிபீடியா போன்ற ஆதாரங்களை ஆய்வு செய்து, எது உண்மை, எது அரை உண்மை, எது தவறு, எது விடுபட்ட தகவல் என்பதை துல்லியமாக பிரித்து காட்டும் அம்சம் கொண்டுள்ளது. அதாவது, பொய்யான தகவல்களை “கொடி”யிட்டு (flag) எச்சரிக்கும் திறனும் இதில் உள்ளது. இதன் மூலம் பயனர்கள் தவறான தகவல்களைத் தவிர்த்து, நம்பகமான தகவல்களைப் பெற முடியும்.

“உண்மைக்காகவே உருவாக்கப்பட்டது” : எலான் மஸ்க்
“குரோக்பீடியா என்பது உண்மைக்காகவும், உண்மையை வெளிச்சமிடுவதற்காகவும் மட்டுமே உருவாக்கப்பட்ட தளம். இது சார்பற்ற, சுத்தமான தகவல் ஆதாரம் ஆகும். எந்த மறைநிலை நோக்கம் அல்லது அரசியல் சார்பு இன்றி செயல்படும் எலான் மஸ்க் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அறிவு உலகின் புதிய அத்தியாயம்
விக்கிபீடியா கடந்த இரண்டு தசாப்தங்களாக உலகின் முக்கியமான அறிவுத் தளமாக இருந்தது.
ஆனால், AI அடிப்படையில் உண்மைச் சரிபார்ப்பை (fact-checking) மையமாகக் கொண்ட குரோக்பீடியா அதன் அடுத்த தலைமுறை வடிவமாக பார்க்கப்படுகிறது.மஸ்க்கின் ரசிகர்கள் இதை “உண்மையின் இணையம் (Internet of Truth)” என குறிப்பிடுகின்றனர். இருப்பினும், இது இன்னும் பீட்டா (Beta) பதிப்பில் மட்டுமே உள்ளது.சில பிழைகள் இருக்கலாம் என மஸ்க் எச்சரித்துள்ளார்.
குரோக்பீடியா தற்போது 0.1 பதிப்பில் இயங்கினாலும், இதன் நோக்கம் மிகப் பெரியத. உலகின் அனைத்து உண்மைகளையும், சார்பற்ற முறையில், அனைவருக்கும் இலவசமாக வழங்குகிறது.
விக்கிபீடியாவுக்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வலுவான போட்டியாளராக களமிறங்கியுள்ள குரோக்பீடியா, எலான் மஸ்க்கின் மற்ற முயற்சிகளைப் போலவே தொழில்நுட்ப உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
