ஏற்கனவே கடன் நெருக்கடியில் இருந்து வரும் எட்டெக் நிறுவனமான BJYJU’s, அந்நிய செலவாணி முறைகேடு தொடர்பாக நிறுவனத்தின் செயல் அதிகாரியாக உள்ள பைஜு ரவீந்திரனுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப குடிவரவு பணியகத்தை அமலாக்கத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
BYJU’s நிறுவனரான பைஜு ரவீந்திரனை பதவியில் இருந்து நீக்க வேண்டி நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் திட்டமிட்டு வரும் சூழலில், அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
நாளை (பிப்ரவரி, 23) திட்டமிடப்பட்டுள்ள BYJU’s நிறுவனத்தின் அசாதாரண பொதுக் கூட்டத்தில், நிறுவனர் பைஜு ரவீந்திரனை பதவியில் இருந்து விலக கோரி வலியுறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், BYJU’s-ன் தாய் நிறுவனமான Think & Learn Private Limited பெற்ற வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் நிறுவனத்தின் வணிக விவரங்கள் குறித்து பல்வேறு புகார்களின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணையைத் தொடங்கியது.
Think & Learn Private Limited வளாகத்திலும் CEO ரவீந்திரனின் இல்லத்திலும் ஏப்ரல் 27 மற்றும் 28 தேதிகளில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர். இதில் நிறுவனம் பெற்ற அனைத்து முதலீடுகள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியது.
அமலாக்கத்துறை விசாரணையின் போது, ரவீந்திரன் மற்றும் திங்க் அண்ட் லர்ன் தலைமை நிதி அதிகாரியின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கடந்தாண்டு நவம்பர் மாதத்தில், அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தை மீறியதாக, சட்டப்பிரிவு 16 (3)ன் கீழ் அமலாக்கத்துறை (ED) BYJU’s-ன் தாய் நிறுவனமான Think & Learn Private Limited மற்றும் பைஜு ரவீந்திரன் ஆகியோருக்கு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பியது.
அப்போது, சுமார் 9362.35 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகின.
மேலும், இந்த நிறுவனம் இந்தியாவிற்கு வெளியே கணிசமான வெளிநாட்டுப் பணம் அனுப்பியதாகவும், வெளிநாடுகளில் முதலீடு செய்ததாகவும் கூறப்பட்டது. இவை அந்நிய செலாவணி சட்டம்-1999 இன் விதிகளுக்கு முரணாக இருப்பதாகவும், இதனால் இந்திய அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்பட்டுள்ளதாகவும் ED தெரிவித்திருந்தது.
இந்த சூழலில், ரவீந்திரன் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட வேண்டும் என இந்திய குடிவரவு பணியகத்திடம் அமலாக்கத் துறை இயக்குநரகம் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.