
விஜயை பார்க்க வரும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார் அளித்துள்ளது.
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், சனிக்கிழமை தோறும் மாவட்டவாரியாக சென்று மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இவருக்கு கூடும் கூட்டத்தைக் கண்டு ஆரம்ப காலங்களில் அண்ணன் – தம்பி உறவுடன் பயணித்து வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார். அவரது கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகனும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
விஜயை பார்க்க வந்த பெண்கள், அவரை கண்டு மகிழ்ந்ததையும், கூட்டத்தில் தங்கள் செல்போன்கள் காணாமல் போய் அழுததையும் ஒருமையில் விமர்சித்துள்ளார் சாட்டை துரைமுருகன். இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அப்படி என்ன பேசினார் சாட்டை துரைமுருகன்?
’’நான் விஜயை பார்த்துட்டேன்னு ஒருத்தி தேம்பித் தேம்பி அழுறா… இருத்தி பார்க்கலேன்னு அழுறா..இதுக்கு அவுங்க அம்மாவும் பிள்ளைகளும் சேர்ந்து வந்திருக்குதுங்க. இன்னொருத்தி விவோ போனை காணோமுன்னு அழுதுகிட்டு உட்கார்ந்திருக்கா. இன்னொருத்தி ஓபோ போனை காணோமுன்னு அழுதுகிட்டு இருக்கா. இதை பத்திதான் நாங்க கேட்கிறோமே தவிர, தனிப்பட்ட முறையில விஜயை நாங்க திட்டணும், அசிங்கப்படுத்தணும், ஆபாசமா பேசணும்னு எண்ணம் இல்ல.
ஆனா, விஜயின் ரசிக கூட்டம், முட்டா கூட்டம், தற்குறி கூட்டம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வந்தான்’னா நாங்க சூர விட்டிருவோம், அவன சம்பவம் பண்ணிடுவோம். அவன் செத்துவிடுவான்னு பேசுது’’ என்று பேசும் சாட்டை துரைமுருகன்,
’’டேய்…’’ என்று நாக்கைக் கடித்து, ‘’ஒரு அடிக்கு தாங்குவியாடா?’’ என்று ஆவேசமாக கேட்கிறார்.

’’ஒரு ஆடி காத்து வந்தா தூக்கிக்கொண்டு போட்டுற அளவுக்கு சோளக்கொல்ல பொம்ம மாதிரி இருக்குறான்’’என்று கடுமையாக தவெகவினரை விமர்சித்துள்ளார் சாட்டை துரைமுருகன்.
இதையடுத்து திருச்சி தவெக சார்பில், தேசிய மகளிர் ஆணையத்தில் ஆன்லைன் மூலமாக புகார் தரப்பட்டுள்ளது.
இந்த புகார் குறித்து சாட்டை துரைமுருகன், ‘’முட்டாள் கூட்டத்தை முட்டாள் கூட்டம் என்றும் தற்குறி கூட்டத்தை தற்குறி கூட்டம் என்றுதானே சொல்ல முடியும் !’’ என்று விமர்சித்துள்ளார்.