அதிமுகவில் சசிகலா, தினகரன், ஓபிஎஸ்சை தவிர மற்றவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்கிற முடிவுல் உறுதியாக இருக்கிறார் இபிஎஸ் என்று அவரது ஆதரவாளர்களே அடிக்கடி சொல்லி வருகின்றனர். ஆனால், அனைவரும் விரைவில் இணைவோம் என்று ஓபிஎஸ் சொன்னதுதான் போதும், ஓபிஎஸ் அதிமுகவுக்கு விசுவாசமாக இருந்ததில்லை என்று இபிஎஸ் குற்றம்சாட்ட, உண்மையில் இபிஎஸ்தான் விசுவாசமாக இருந்ததில்லை. துரோகி என்று ஓபிஎஸ் பாய்ச்சலை காட்டி இருக்கிறார்.
ஓபிஎஸ்சை கட்சிக்குள் சேர்க்க கூடாது என்று உறுதியாக இருக்கும் இபிஎஸ், ஓபிஎஸ் அணியினரை கட்சிக்குள் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார். குறிப்பாக வைத்திலிங்கத்தை கட்சிக்குள் கொண்டுவந்துவிட்டால் அவர் பார்வையில் இருக்கும் மாவட்டங்கள் நம் வசமாகிவிடும் என்று இபிஎஸ் கணக்கு போடுவதாக தகவல் வந்துகொண்டே இருந்தன.
இந்நிலையில், வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் அறிவுடைநம்பி, ரதிமீனா சேகர் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் சேலத்தில் இன்று எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். இந்த சந்திப்பின் போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியனும், ஆர்.காமராஜும் உடனிருந்தனர்.
தனது ஆதரவாளர்கள் தாய்க்கழகத்தில் இணையப்போவதாக சொன்னபோது, ‘’கொஞ்சம் பொறுமையாக இருங்க. எல்லோரும் சேர்ந்து போவோம். அப்போதுதான் பலனடைய முடியும்’’ என்று தடுத்திருக்கிறார். அதற்கு அவரின் ஆதரவாளர்கள், ‘’நாங்க முன்னாடி போறோம். நீங்க பின்னாடி வாங்க’’ என்று சொல்லிவிட்டுத்தான் சேலத்திற்கு சென்றிருக்கிறார்கள்.
ஆனால், வைத்திலிங்கம் தரப்போ, இன்னும் 2 மாதங்களில் பிரிந்து சென்றவர்கள் அனைவருமே இணையப்போகிறோம். அதற்குள் ஏன் அவசரப்படுகிறீர்கள் என்றுதான் வைத்திலிங்கம் தடுத்தார் என்கிறது. இதை மறுக்கிறது இபிஎஸ்சிடம் சென்றி டீம்.
ஆக, இபிஎஸ் விரித்த வலையில் அடுத்து வைத்திலிங்கம் சிக்குவாரா? என்று பரபரப்பு எழுந்திருக்கிறது அதிமுக வட்டாரத்தில்.