
கூட்டணி ஆட்சிக்கு பழனிசாமி சம்மதிக்காவிட்டால் வேலுமணி மூலமாக அதிமுகவை உடைக்க திட்டமிட்டிருக்கிறார் அமித்ஷா என்கிற தகவல் தவெக தலைவர் விஜய்க்கும் எட்டியிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் அதிமுக கூட்டணிக்குள் போவது சரியாக இருக்குமா? என்று தவெக நிர்வாகிகள் பலரும் கேட்க, இதுகுறித்து பழனிசாமிக்கே நேரடியாக போன் போட்டு 45 நிமிடங்கள் பேசி இருக்கிறார் விஜய்.
அந்த பாஜக ஆதரவு சேனல் வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கு முன்னரே ரகசியமாக ஒரு சர்வே முடிவினை எடுத்திருந்தார் விஜய். இரண்டு சர்வே முடிவுகளுமே தவெக இந்த தேர்தலில் அதிக வாக்குகள் வாங்கும். ஆனால், தனித்து ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என்றே சொல்லி இருக்கின்றன.

அந்த தனியார் சேனல் வெளியிட்ட கருத்துக் கணிப்பினை அந்த சேனல் உரிமையாளருடனே அமர்ந்து பார்த்திருக்கிறார் விஜய். அதன் பின்னர் அவருடன் நீண்ட நேரம் அந்த கருத்துக் கணிப்பு குறித்து விவாதித்திருக்கிறார் விஜய். இதில் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்டோரும் இருந்துள்ளனர்.

தவெக தனித்து போட்டியிட்டு பிரயோசனம் இல்லாமல் போகும் என்றால் ‘மக்கள் நலக்கூட்டணி’ மாதிரி சீமான் உள்ளிட்டோருடன் இணைந்து ஒரு கூட்டணியை அமைக்கலாம் என்று ஆலோசித்திருக்கிரார்கள். அப்போது, தவெக தனித்து போட்டியிட்டாலும், மக்கள் நலக்கூட்டணி மாதிரி ஒரு கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு மிக மிகக்குறைவுதான். இது திமுகவுக்கு மேலும் சாதகமாகத்தான் அமையும். அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே ஆட்சியை கைப்பற்ற வாய்ப்பிருக்கிறது என்று கூறியிருக்கிறார் அந்த சேனல் உரிமையாளர்.

அப்போது விஜய், அப்படியே பார்த்தாலும் 135 சீட் அதிமுகவுக்கு என்று முடிவாகி இருக்கிறது. 99 சீட்தான் கூட்டணிக்கட்சிகளுக்கு என்று பாஜக டெல்லி மேலிடம் முடிவு செய்திருக்கிறது. இந்த 99இல் பாஜகவுக்கு 50 சீட் என்றும் பாமகவுக்கு 15 சீட் என்றும் சொல்கிறார்கள். மீதம் இருப்பது 34 சீட்தான். மற்ற கட்சிகளுக்கு போக மீதம் குறைந்த சீட்தான் இருக்கும். தவெக தரப்பில் 40 சீட் கண்டிப்பாக எதிர்பார்க்கிறோம். இந்த கணக்குப்படி பார்த்தால் அதற்கு வாய்ப்பு இல்லாதது மாதிரி தெரிகிறதே? என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார் விஜய்.

அதற்கு அந்த சேனல் உரிமையாளர், திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் தவெகவோட குறிக்கோள். ஒருவேளை நீங்கள் நினைப்பது மாதிரி சீமான், அன்புமணி உள்ளிட்டோருடன் கூட்டு சேர்ந்தாலும், திமுக கூட்டணியில் இருக்கும் விசிக உள்ளிட்ட கட்சிகள் வந்தாலும் கூட வெற்றி வாய்ப்பு என்பது குறைவுதான். அதற்கு பேசாமல் அதிமுக கூட்டணியில் இருக்கின்ற சீட் பெற்றுக்கொண்டு நிறைவான மனதுடன் தேர்தலை சந்தித்தால் மட்டுமே உங்கள் குறிக்கோளை அடைய வாய்ப்பிருக்கிறது என்று சொல்ல, அதிமுக – பாஜக கூட்டணி இடையே ஆட்சி அதிகாரம் குறித்த விவகாரத்தில் அதிமுகவே உடையுமா? என்ற நிலை இருக்கிறது. இதில் தவெக ஏன் வீணாகப் போய் தலையை கொடுத்துக்கொண்டு தவிக்க வேண்டும்? என்று கேட்டிருக்கிறார் விஜய்.

அதற்கு வாய்ப்பில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் எல்லாம் சரியாக நடக்கும் என்று அந்த சேனல் உரிமையாளர் சொல்ல, அப்போதே பழனிசாமிக்கு போன் போட்டு 45 நிமிடங்கள் பேசி இது குறித்து ஆலோசித்திருக்கிறார் விஜய்.
அந்த ஆலோசனைக்குப் பின்னர் என்ன முடிவெடுத்திருக்கிறார் விஜய் என்பது குறித்து தகவல் இல்லை. ஆனாலும் விஜய் எடுக்கப்போகும் முடிவு, தமிழ்நாடு அரசியல் களத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என்கிறது பனையூர் வட்டாரம்.