சிபிசிஐடி விசாரணையில் கனகராஜ் கொலையில் உள்ள உண்மைகள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் நிலையில் சஜீவன் துபாய்க்கு தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளார். இதனால் கொடநாடு வழக்கு மீண்டும் திகுதிகுவென்றிருக்கிறது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி சஜீவன். அவரை கைது செய்ய காவல்துறை நெருங்கிய வேளையில், இதை அறிந்த சஜீவன் கேரளா வழியாக துபாய்க்கு தப்பி ஓடியிருக்கிறார். இதனால் சஜீவனை தலைமறைவு குற்றவாளி என்று அறிவித்து அவரைக் கைது செய்வதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறது போலீஸ்.
போலீஸ் கையில் சிக்கினால் விசாரணையில் பல உண்மைகள் வெளியே வந்துவிடும் என்பதால் அதிமுக மேலிடம்தான் சஜீவனை தலைமறைவாக இருக்கச்சொல்லி உத்தரவிட்டிருக்கிறது என்கிறது நக்கீரன் புலனாய்வு இதழ்.
கொடநாடு வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் மரணத்தில் மறுவிசாரணை செய்யும் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட ஐஜி சுதாகர், கனகராஜ் பேசினால் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கின் உண்மைகள் வெளியே வந்துவிடும் என்பதாலேயே அவர் கொலை செய்யப்பட்டார் என்ற கோணத்திலேயே விசாரணையை கொண்டு சென்றார் ஐஜி சுதாகர். ஆனாலும் அவரின் விசாரணையில் காவல்துறையில் இருந்த அதிமுக ஆதரவாளர்கள் முட்டுக்கட்டைகள் போட்டு வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், கனகராஜ் கொலையில் உள்ள உண்மைகளை கண்டுபிடித்துள்ளது சிபிசிஐடி.
எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான ஒருவரால்தான் கனகராஜ் கார் விபத்தில்தான் மரணமடைந்தார் என்று மாற்றியதாகவும், இதற்காக பல கோடிகள் செலவிடப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனால் கொடநாடு கொலை , கொள்ளை வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில்தான் சஜீவன் துபாய்க்கு தப்பி ஓடி இருக்கிறார். சஜீவன் பிடிபட்டதும் கொடநடாடு வழக்கில் அதிரவைக்கும் உண்மைகள் வெளியே வரும் என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது.