திமுக, அதிமுக போன்ற கட்சிகள் நம் மீது விமர்சனம் வைத்தால் அதற்கு கண்ணியமான முறையில் பதில் சொல்லுங்கள். தமிழக வெற்றிக்கழகத்தினருக்கு பதில் சொல்லி தரம் தாழ்த்திக்கொள்ளாதீர்கள், என்னையும் தரம் தாழ்த்தாதீர்கள் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியினருக்கு வேல்முருகன் அறிவுறுத்தி இருக்கிறார்.
விஜய் கட் -அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யும் ரசிகர்களையும், தாலி கட்டிய கணவர்களை விடவும் விஜய்தான் அதிகம் பிடிக்கும் என்று சொல்லும் பெண்களையும் கடுமையாக விமர்சித்திருந்தார் வேல்முருகன். இதனால் தவெகவினருக்கும் தவாகவினருக்கும் இடையே கடும் வார்த்தைப்போர் நடந்து வந்தது.
இந்த நிலையில் மீண்டும் தவெக மற்றும் விஜயை வறுத்தெடுத்துள்ளார் வேல்முருகன்.

’’தெருவுல போறவன், ரோட்டுல போறவன், அட்ரஸ் இல்லாதன் எல்லாம் மைக் கிடைத்தால் வாய் நிறைய பேசுவான். நான் 30 ஆண்டுகாலம் பணி செய்த, எங்களோடு ரத்த உறவுகளாக இருந்து, எக்காரணத்தைக் கொண்டும் தருமபுரி மாவட்டத்திற்குள் கூட்டம் நடத்திவிடக்கூடாது என்று கொக்கரித்த, நான் வளர்ந்த மருத்துவர் அய்யாவையே நேருக்கு நேர் சந்தித்து, தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் இருப்பவன் இந்த வேல்முருகன் என்பது கூத்தாடிகளுக்கு தெரியாது. கொள்கையாளர்களுக்கு மட்டுமே தெரியும்.
நமக்கு எதிரானவர்களோடுதான் நாம் பேசணும். திமுக ஒரு விமர்சனம் வைத்தால் நியாயமான முறையில், கண்ணியமான முறையில் அதற்கு பதில் சொல்லுங்கள். அதிமுக நம்மீது ஒரு விமர்சனம் வைத்தால் கண்ணியம் இழையாமல் பதில் சொல்லுங்கள். அதை விடுத்து இவர்களுக்காக எல்லாம் நீங்கள் பதில் சொல்லி உங்களையும் தரம் தாழ்த்திக்கொண்டு, என்னையும் தரம் தாழ்த்த வேண்டாம்’’ என்று தவாகவினருக்கு அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் வேலுமுருகன் தனது பேச்சில், ‘’திரையுலகில் அரிதாரம் பூசிக்கொண்டு நடிக்கும் நடிகருக்கு பால் அபிஷேகம் செய்வது, மண்சோறு சாப்பிடுவது என்று திரியும் ஒரு கேடுகெட்ட கூட்டத்திற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
எந்த போராட்டங்களிலும் ஈடுபடாதவர்கள், ஒருநாள் கூட சிறைக்கு செல்லாதவர்கள், மக்களுக்காக சாலையில் அமர்ந்து போராடாதவர்கள் எல்லாம் முதலமைச்சாரக ஆக முடியும் என்று கொக்கரிக்கிறார்கள் என்று சொன்னால், நான் என்ன சினிமாக்காரனா? நான் கேரியர்ல ரொம்ப உச்சத்துல இருக்குறேன்னு சொல்றேனா? என்னைக்கு உச்சத்துக்கு போனாலும் ஒரு நாள் கீழ வந்துதான் ஆகணும்’’ என்று விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார் வேல்முருகன்.

‘’இவனுக்கு வயசு 55, கேவலமான பாட்டு, கேவலமான ஆடல், கேவலமான கதை, வசனம், கேவலமான குத்தாட்டம் போட்டு, இன்கம்டாக்ஸ் கட்டாம, பல்லாயிரம் கோடி சம்பாதிச்சு, முடி கொட்டி, டோப்பா வச்சிக்கிட்டு வருவோம் நேரா கோட்டைக்குத்தான் போவோம், வாக்களியுங்கள் என்று வந்தால் வாக்களிக்கும் சமூகமாக இருப்போம் என்று சொன்னால் நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியாது.
இந்த கதாநாயகனை பார்க்கப்போய் மூச்சுத்திணறி சாக வேண்டுமா?அதோ அந்த கதாநாயகன் என்று காட்டி அந்த பச்சைக்குழந்தை கீழே விழுந்து விலா எலும்புகள் உடைந்து சாகவேண்டுமா? தண்ணீர் இல்லாமல் நா வறண்டு 41 உயிர்கள் பலியாக வேண்டுமா? அறியாமையால் ஏன் மூழ்கிக் கிடக்கிறீர்கள்?’’ என்று விஜயையும், ரசிகர்களையும் விளாசி எடுத்துள்ளார் வேல்முருகன்.
