சிலை கடத்தல் விவகாரத்தில் முன்னாள் போலீஸ் ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு நாளை முன் ஜாமீன் கிடைக்குமா? இல்லை, முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு சிபிஐயினால் கைதாகிறாரா? என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
கடந்த 2008ல் இருந்து 2011வரை சிலை கடத்தல் பிரிவின் இன்ஸ்பெக்டராக இருந்தவர் காதர் பாட்ஷா. அரியலூர் மாவட்டம் சுத்தமல்லியில் ஒரு வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள சிலைகள் கடத்தப்பட்ட சம்பவத்தில் விசாரணை நடத்திய காதர் பாட்ஷா, சர்வதேச சிலை கடத்தல் மன்னன் பஞ்சாப்பைச் சேர்ந்த சுபாஷ் சந்திர கபூரூக்கு தொடர்பு இருப்பதை கண்டறிந்தார். இதனைத் தொடர்ந்து 2011 ஆகஸ்ட்டில் ஜெர்மனியில் உள்ள ஃபிராங்க் ஃபர்ட் விமான நிலையத்தில் சர்வதேச போலீசாரால் கைது செய்யப்பட்டார் சுபாஷ் சந்திர கபூர்.
இதன்பின்னர் சிலை கடத்தல் பிரிவில் இருந்து காதர் பாட்ஷா பதவி மாற்றம் செய்யப்பட்டு, திருவள்ளுவர் டிஎஸ்பியாக பொறுப்பேற்றார்.
2012ல் சிலை கடத்தல் பிரிவின் ஐஜியாக பொறுப்பேற்றுக்கொண்டார் பொன் மாணிக்கவேல், சிலை கடத்தலில் ஈடுபட்டார் என்று சர்வதேச சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுடன் தொடர்புபடுத்தி, காதர் பாட்ஷாவை கைது செய்தார்.. இதனால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காதர் பாட்ஷா, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
உண்மை குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் தீனதயாளனுக்கு ஆதரவாக இருந்தார் பொன் மாணிக்கவேல். ஆனால் எனக்குக் தொடர்பு இருப்பதாக பொய் குற்றச்சாட்டினை வைத்து என்னை கைது செய்தார் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் காதர் பாட்ஷா. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.
இந்த வழக்கு இப்போது சிபிஐ வசம் உள்ளது. தீனதயாளனை தப்பிக்க வைக்க பொன் மாணிக்கவேல் முயற்சி செய்தாரா என்று விசாரணை நடந்து வருகிறது. இதனால் காதர் பாட்ஷா, பொன் மாணிக்கவேல் மற்றும் மறைந்த தீனதயாளன் ஆகியோரின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்தது சிபிஐ.
காதர் பாட்ஷா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பொன் மாணிக்கவேல் மீது நடந்த முதற்கட்ட விசாரணையில் முகாந்திரம் உள்ளதை அறிந்த சிபிஐ, பொன் மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய முனைந்தது. இதற்காக மேலும் ஆதாரங்களை திரட்டுவதற்காக பொன் மாணிக்கவேல் வீட்டில் ரெய்து நடத்தியது.
இந்த வழக்கில் சிபிஐ தன்னை கைது செய்யலாமென்று நினைத்த பொன் மாணிக்கவேல், மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். உடனே, பொன் மாணிக்கவேலுவுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்று காதர் பாட்ஷா, இடையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் எந்தவித முகாந்திரமும் இல்லை. அதனால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று பொன் மாணிக்கவேல் தரப்பு வாதிட, முகாந்திரம் உள்ளது. சிலை கடத்தலகாரர்களை பாதுகாக்கும் நோக்கில் காதர் பாட்ஷா மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி அவரை சிறையில் அடைத்தார் பொன் மாணிக்கவேல். அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று காதர் பாட்ஷா தரப்பு வாதிட்டது.
சிபிஐ தரப்போ, முதற்கட்ட விசாரணையில் பொன் மாணிக்கவேல் மீது போதிய முகாந்திரம் இருந்ததன் அடிப்படையில்தான் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்து விசாரணை நடத்தினால்தான் மேற்கொண்டு உண்மைகள் தெரியவரும். அதனால் அவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிட்டது.
இதையடுத்து நீதிபதி, சுபாஷ்கபூருக்கு பொன் மாணிக்கவேல் நேரடியாக உதவி செய்துள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதா என்று கேட்க, அதற்காக ஆதாரங்களை சிபிஐ சமர்ப்பித்துள்ளது.
இதையடுத்து இன்று நடந்த விசாரணையில், பொன் மாணிக்கவேல் பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்கு அவரை ஜாமீனில் விடுவிக்கக்கூடியதா? இல்லை, ஜாமீனில் விடுவிக்க முடியாததா? என்று சிபிஐயிடம் விளக்கம் கேட்டிருக்கிறார் நீதிபதி.
இந்த விளக்கத்தை பெற்று நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதில் பொன் மாணிக்கவேலுக்கு முன் ஜாமீன் வழங்கப்படுகிறதா? இல்லை, முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு அவர் கைதாகிறாரா? என்ற பரபரப்பு எழுந்துள்ளது.