மக்களவை தேர்தல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளால் தான் மன உளைச்சலில் இருப்பதாக தெரிவித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார். அவர் மேலும், வயிறு எரிகிறது; 2 நாட்களாக சாப்பிடவில்லை என்றும் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நேற்று முன் தினம் மாலையுடன் மக்களவை தேர்தல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதையடுத்து மாலை 6 மணிக்கு மேல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. இதில் அதிமுகவுக்கு சாதமாக அமையவில்லை.
பெரும்பாலான முடிவுகளின்படி அதிமுகவுக்கு 1-2 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும், சில முடிவுகளின் படி அதிமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்றும் தெரியவந்தது.
இதனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தான் போராட்டி பெற்ற நாற்காலியை இழக்க நேரிடும். அதிமுக உடையும் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார் தனது மனக்குமுறலை கொட்டினார்.
‘’வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எனும் பெயரில் கருத்து திணிப்பு நடத்தி அதிமுக தொண்டர்களை சோர்வடையச் செய்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது. எங்கள் வாக்கு முகவர்கள் ராணுவ வீரர்’’களைப்போல சுறுசுறுப்பாக பணியாற்ற உள்ளார்கள்’’என்றவர், வாக்குப்பதிவு செய்துவிட்டு வெளியே வந்தவர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியதாக சொல்கிறார்கள். ரகசிய வாக்கெடுப்பு என்று சொல்லும்போது, அவர்கள் சொல்வதை உண்மை என்று எப்படி எடுத்துக்கொள்ள முடியும்?’’ என்ற கேள்வியை எழுப்பினார்.
தொடர்ந்து, ‘’ஒரு தொகுதியில் 15 லட்சம் வாக்காளர்கள் இருந்தால் அதில் 3 லட்சம் வாக்காளர்களிடமாவது கருத்து கேட்டிருக்க வேண்டும். அதை செய்திருக்க மாட்டார்கள். ஒரு தொகுதியில் 15 சதவிகித வாக்காளர்களையாவது சந்தித்திருக்கலாம். அதையும் செய்யவில்லை. சிலர் ஆன்லைனில் கருத்துகணிப்பை நடத்தினோம் என்கிறார்கள். இ ந்த மாதிரியான நிலை இருக்கும்போது இவர்கள் இஷ்டத்திற்கு வெளியிடும் கருத்து கணிப்புகளால் பலருக்கும் மன உளைச்சல்தான் ஏற்படுகிறது.
இது மாதிரியான கருத்து கணிப்புகளால் கட்சியினருக்கு அச்சம் ஏற்படுகிறது. இந்த கருத்து கணிப்புகளை பார்த்து எனக்கு வயிறு எரிகிறது. இரண்டு நாட்களாக சாப்பிடவில்லை. மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது’’ என்கிறார்.
அதே நேரம், ‘’எந்த சூழ்ச்சியும் எங்களிடம் எடுபடாது. அதிமுகவுக்கு நிரந்தர வாக்கு வங்கி உள்ளது. அதனால் 40 இடங்களில் 25 இடங்களை அதிமுக நிச்சயம் வெல்லும்.தேனியில் அதிமுக வெல்லும்’’ என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்.
இன்று இரவு விடிந்தால் உண்மை எது என்பதை உலகம் அறியப்போகிறது.