ராமநாதபுரம் தொகுதியில் தனக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று சொன்ன முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், கட்சியை சின்னா பின்னமாக்கியதால் அதிமுகவின் நிலை என்பது தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும் என்று காட்டமானார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு செய்தவரிடம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ’’ஏற்கனவே நான் சொல்லி இருக்கிறேன். இந்த தேர்தல் இந்திய திருநாட்டை யார் ஆள வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன். யாய் ஆள வேண்டும் என்கிற தேர்தலில் இறுதியாக பெருமபான்மையான வாக்குகளை பெற்று பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்’’என்றார்.
கருத்துக்கணிப்பில் குறைந்த இடங்களை மட்டுமே அதிமுக பெறும் என்று கூறப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, ‘’அவரைத்தான் கேட்கணும்’’ என்று எடப்பாடி பழனிச்சாமியை சுட்டிக்காட்டி காட்டமாக பதில் அளித்தார் ஓபிஎஸ்.
தொடர்ந்து பேசிய அவர், ’’அரசியல் நடப்புகளை எல்லாம் மிகவும் துல்லியமாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். யாரால் கட்சி இப்படி சின்ன பின்னமானது என்பது எல்லோருக்கும் தெரியும். இதன் எதிரொலில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் முடிவுகளில் ஒலிக்கும்’’ என்றார்.
‘’பலன்களை எதிர்பார்த்து கட்சி வேலை செய்பவன் அல்ல நான். கட்சிக்கு விசுவாசமாக உழைப்பவன் நான். எனக்கான வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது’’ என்று சொன்னவரிடம், ஒன்றிய அமைச்சர் ஆவீர்களா? என்ற கேள்விக்கு, ‘’நான் ஒன்றிய அமைச்சராவது இறைவனின் கையில் இருக்கிறது’’ என்றார்.