இந்தியாவில் மக்களவைத் தேர்தல்கள் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகள் டிஜிட்டல் பிரச்சாரங்கள் உட்பட வெகுஜன மக்களைச் சென்றடையும் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளன.
கடந்த மூன்று மாதங்களில் இந்தியாவில் அரசியல் கட்சிகள் செய்த விளம்பரச் செலவுகள் மட்டும் சுமார் ரூ.102.7 கோடி என மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங்கள் கணித்துள்ளன.
ஆளும் பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆன்லைன் விளம்பரங்களுக்காக 37 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளது. இந்த தொகை 2023 டிசம்பர் 5 மற்றும் 2024 மார்ச் 3-க்கு இடையில் காங்கிரஸ் கட்சி செய்த செலவுகளை விட 300 மடங்கு அதிகமாகும்.
இந்த தகவல்கள் மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங்கள் வெளியிட்ட தரவுகளின் பகுப்பாய்வு மூலம் தெரியவந்துள்ளது.
India Today செய்தி நிறுவனத்தின் பகுப்பாய்வின்படி, காங்கிரஸ் கட்சி தனது சமூக ஊடக பக்கங்களின் விளம்பரத்திற்காக செய்த செலவு(2023 டிசம்பர் 5 முதல் 2024 மார்ச் 3) வெறும் 12.2 லட்சம் ரூபாய் மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி கூகுள் மற்றும் மெட்டா தளங்களில் செய்த விளம்பரத்தில், ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் பேஸ்புக் பதிவுகளை விளம்பரப்படுத்த ரூ.5.7 லட்சத்தை செலவு செய்துள்ளது.
மெட்டா நிறுவனம் வெளியிட்ட தனது (Ad Library Report) விளம்பரங்கள் அறிக்கையின் படி, குறைந்தபட்சம் 7 பாஜக சார்பு பேஸ்புக் பக்கங்கள், கட்சியின் நிகழ்ச்சி நிரல்களை ஊக்குவிக்கவும், எதிர்க்கட்சிப் பிரமுகர்களை கேலி செய்யும் பதிவுகளை அதிக அளவில் கொண்டுசெல்லும் விளம்பரங்களுக்காகவும் சுமார் ரூ. 5.7 கோடியை செலவிட்டுள்ளது.
பாஜக சார்பு ‘Ulta Chashmaa’ என்கிற பேஸ்புக் பக்கத்திற்கு மட்டும் 3.2 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது . மேலும் MemeXpress, Political X-Ray, Tamilkam மற்றும் Malabar Central போன்ற பிற பக்கங்களுக்கான விளம்பரங்களுக்கும் பாஜக செலவிட்டுள்ளது.
பாஜக சார்பு பக்கங்கள் குறிப்பாக திமுக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக பல்வேறு பதிவுகளை செய்து வந்துள்ளன.
இது குறித்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்பி சாகேத் கோகலே தனது X தள பக்கத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பி பதிவுகளை செய்துள்ளார்.
எதிர்க்கட்சிகளை குறிவைத்து கோடிக்கணக்கான மதிப்புள்ள அரசியல் விளம்பரங்களை இயக்குவதற்கு பாஜக, Proxy பக்கங்களை எவ்வாறு பயன்படுத்துகிறது என்றும், அதை இந்திய தேர்தல் ஆணையம்(ECI) எவ்வாறு வெளிப்படையாக அனுமதிக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ECI விதிகளின்படி அரசியல் கட்சிகள் அரசியல் விளம்பரங்களுக்கான செய்யும் செலவினங்களை வெளியிட வேண்டியது அவசியம் என்றும், ஆனால் பிஜேபி பல ப்ராக்ஸி பக்கங்களுக்கு நிதியுதவி செய்து, எதிர்க்கட்சிகளை குறிவைத்து விளம்பரங்களை இயக்கி கோடிக்கணக்கில் செலவு செய்கிறது. பினாமிகளை பயன்படுத்தி பாஜக தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறுவதாகவும், சாகேத் கோகலே குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தேர்தல் ஆணையம் கண்ணை மூடிக்கொண்டு இதை அனுமதிப்பது ஏன்?பிஜேபி ப்ராக்ஸி பக்கங்களைப் பயன்படுத்தி அரசியல் விளம்பர விதிகளை மீறுவதை பேஸ்புக் நிறுவனம் ஏன் நிறுத்தவில்லை? தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்த பணங்களை பயன்படுத்தி மக்களவைத் தேர்தலை பாஜக வெளிப்படையாகவே கையாள்கிறது, எனவும் சாகேத் கோகலே கூறியுள்ளார்.