Facebook பயனர்களின் தரவுகள் ஆயிரக்கணக்கான நிறுவனங்களால் கண்காணிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Consumer Reports மற்றும் The MarkUp நிறுவனம் இணைந்து Meta-வுக்குச் சொந்தமான சமூக வலைப்பின்னலின் தரவுகள் கண்காணிப்பு குறித்த பெரிய அளவிலான ஆய்வை நடத்தியது.
Facebook பயனர்கள் கிட்டத்தட்ட 2 லட்சம் நிறுவனங்களின் விளம்பரங்களால் தாக்கப்படுகிறார்கள் என்றும் 700க்கும் மேற்பட்ட பயனர்களின் கணக்குகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில், சராசரியாக ஒவ்வொரு பயனரின் தரவுகளும் சுமார் 2,230 நிறுவனங்களால் கண்காணிக்கப்படுவது தெரியவந்துள்ளது.
மேலும், ஒரு குறிப்பிட்ட பயனரின் தரவுகள் கிட்டத்தட்ட 48,000 வெவ்வேறு நிறுவனங்களால் கண்காணிக்கப்பட்டு Facebook நிறுவனத்திற்கு தகவல் அனுப்பப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட Facebook தன்னார்வ பயனர்களின் கணக்கில் உள்ள “Download Your Information” என்கிற ஆப்ஷன் மூலம் பயனர்களின் 3 வருட கால தனிப்பட்ட தரவுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு ஆய்வு செய்ததில் இந்த தகவல்கள் வெளிக் கொணரப்பட்டுள்ளது.
பயனர்களின் வாங்கும் பழக்கம் பற்றிய தகவலை உள்ளடக்கிய அந்த தரவுகள், “சர்வர்-டு-சர்வர்” டிராக்கிங் எனப்படும் நுட்பத்தின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு நிறுவனத்தின் சேவையகங்களும் Meta-வின் சேவையகங்களுக்குத் தகவலை அனுப்பும்.
அந்தத் தரவுகள் மூலம், குறிப்பிட்ட பயனர்களுக்கு அவர்களின் வாங்கும் பழக்கங்கள் அடிப்படையில் எந்த விளம்பரங்களைக் காண்பிக்க வேண்டும் என்பதை Meta நிறுவனம் கண்டறிகிறது.
அனுப்பப்பட்ட தரவுகளில் 96 சதவீத தரவுகள் தரகர்களால் தொகுக்கப்பட்டு நுகர்வோர் தகவல்களைச் சேகரித்துப் பிற விளம்பரதாரர்களுக்கு விற்கப்படுகின்றன என்பதும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
மொத்தத்தில், 186,892 நிறுவனங்கள் 700 தன்னார்வலர்களைப் பற்றிய தகவல்களை Facebook தளத்திற்கு அனுப்பியதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் Walmart, Amazon, Home Depot போன்ற பெரிய சில்லறை விற்பனையாளர்களாலும் பயனர்களின் சில தரவுகள் தொகுக்கப்பட்டு Facebook தளத்திற்கு அனுப்பியது ஆய்வில் தெரியவந்துள்ளது.
Published by அசோக் முருகன்