
பெரும்பாலும் சைவை பிரியர்கள் அதிகமாக பனீர் உணவை விரும்புகிறார்கள். அவர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது அண்மைக்காலமாக பிடிபடும் போலி பனீர்கள் பற்றிய செய்திகள்.
அமுல், மதர் டெய்ரி போன்ற பிராண்டுகள் பாதுகாப்பானவை என்று நினைத்து மக்கள் வாங்குகிறார்கள். போலி பனீர் தயாரிப்பாளர்கள், அமுல், மதர் டெய்ரி போன்ற பிராண்டுகள் போன்று போலியாக விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போலி பனீர்கள் பிடிபட்டு அதிரவைக்கின்றன.
உத்தரபிரதேசத்தில் கோரக்பூர் மற்றும் கவுதம் புத்தர் நகரில் கடந்த மே மாதத்தில் உணவு பாதுகாப்பு குழு நடத்திய சோதனையில் 2,500 கிலோ போலி பனீர் பிடிபட்டது. கடந்த ஏப்ரல் மாதத்தில் லக்னோவில் 4810 கிலோ போலி பனீரை கண்டறிந்த அவற்றை அழித்தனர் அதிகாரிகள். இவை மனிதர்கள் சாப்பிட தகுதியற்றவை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் நொய்டாவில் பிடிபட்ட கலப்பட உணவுகளில் 83% போலி பனீர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டில் மும்பை – டெல்லி விரைவு சாலையில் 1,300 கிலோ போலி பனீரை பிடித்து அழித்தனர் அதிகாரிகள். தற்போது மேற்கு உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இருந்து பத்து குவிண்டால் செயற்கை பனீர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பனீர் – போலி பனீர்:
திரிந்த பாலில் இருந்து கிடைக்கக்கூடியது பனீர். இது 10 நாட்களில் கெட்டுவிடும். பாலில் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து திரிய வைத்து அதிலிருந்து பனீர் தயாரிக்கப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பனீர் குருமா, பனீர் பிரைடு ரைஸ் உள்ளிட்ட பனீர் தயாரிப்புகளை விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள்.
சைவை பிரியர்களிடையே இது அதிக வரவேற்பை பெற்றுள்ளதால் போலியான பனீர் தயாரிப்பும் அதிகரித்திருக்கிறது. போலியான பனீர் என்பது, விலை மலிவான காய்கறி எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. மற்றும் எமல்சி ஃபையர்கள் கொண்டும் பன்னீர் தயாரிக்கப்படுகிறது.
பாலில் இருந்து தயாரிக்கப்படும் பனீரில் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்துள்ளது. அனலாக் பனீரில் ஆரோக்கியமற்ற கொழுப்பு நிறைந்துள்ளது. பாலில் உள்ள ஊட்டச்சத்துகள் இதில் இருக்காது. இந்த பனீர் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.

போலி பனீரை கண்டறிவது எப்படி?
போலி பனீரை கண்டறிவது ரொம்ப சுலபம்தான். அயோடின் பயன்படுத்தி போலியை கண்டுபிடித்துவிடலாம். பனீரை சூடாக்கி அதில் இரண்டு சொட்டு அயோடின் கரைசலை சேர்த்தால், அதன் நிறம் மாறும். வெள்ளை நிறத்தில் இருந்து ஊதா நிறமாக அல்லது அட நீலமாக மாறிவிடும்.
போலி பனீரை கண்டறிய இன்னும் சில வழிகளும் உள்ளன. சிறு துண்டு பனீரை கொதிக்க வைத்து அதில் ஒரு ஸ்பூன் துவரம் பருப்பு கலந்து 10 நிமிடம் கழித்து பார்த்தால் பனீரின் நிறம் வெளிர் சிவப்பு நிறமாக இருந்தால் அது போலி பனீர் அதாவது அதில் யூரியா இருப்பதை அறியலாம்.
பனீர் வாங்கும்போதே அது கடினமாக இருந்தாலோ காரமாக இருந்தாலோ போலி பனீர். அது செயற்கையாக உருவாக்கப்பட்டதை அறியலாம்.
பனீர் துண்டை பிசைந்தால் அது நொறுங்கினால் போலி. கடினமாக, ரப்பர் போல இருந்தால் அது போலி. மென்மையாக, பஞ்சு போல் இருந்தால் அது ஒரிஜினல் பனீர்.
பனீரை தண்ணீரில் போட்டும் அது ஒரிஜினலா? போலியா? என்பதை அறியலாம். பனீரை தண்ணீரில் போட்டால் அது கரைய ஆரம்பித்தால், நுரை வர ஆரம்பித்தால் அது போலி. தண்ணீரில் கரையாமல், நுரை வராமல் இருந்தால் அது ஒரிஜினல் பனீர்.