உலக அரசியல் வட்டாரங்களில் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களில் ஒருவரான அலெக்சேய் நவால்னி (47) திடீர் மரணம் அடைந்த செய்தி பல்வேறு தரப்பு மக்களை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
‘எதிர்கால ரஷ்யா’ என்ற அரசியல் கட்சியின் தலைவரும் வழக்கறிஞருமான நவால்னி ஊழல் எதிர்ப்பையும் அதிலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் செய்துவருவதாக நம்பப்படும் ஊழலை தீவிரமாக எதிர்த்து வந்தார்.
ரஷ்ய அரசு நிர்வாகத்தைச் சீர்திருத்த வேண்டும், ஊழல் நடவடிக்கைகளை ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நவால்னிக்கு, ரஷ்ய மக்களுக்கிடையே வளர்ந்துவந்த செல்வாக்கு காரணமாக, புடினின் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகியும் துணிச்சலாக ஊழலுக்கு எதிரான மாபெரும் போராட்டங்களைத் நடத்தி வந்தார்.
ரஷ்ய அரசின் ஊழல்கள் தொடர்பான ஆதாரங்களை தனது சமூக ஊடகக் கணக்குகளில் தைரியமாக நவால்னி வெளியிட்டு வந்ததைப் புதினால் தாங்கிக்கொள்ள முடியாததால் அவர் மீது பல பொய் வழக்குகளைப் பதிவு செய்து இறுதியாக கடந்த 2021-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ரஷ்யாவை ஆண்டு வரும் புடினின் ஐக்கிய ரஷ்யா கட்சி என்பது, “திருடர்களையும் சதிகாரர்களையும் கொண்டக் கட்சி” என்று கடந்த 2011-ம் ஆண்டு நவால்னி வானொலி ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் கடுமையாக விமர்சனம் செய்தார்.
அப்போது முதலே நவால்னிக்கும் புதினுக்கும் பகைமை ஏற்பட்ட நிலையில், 2011-ல் நவால்னி தொடங்கிய ‘ஊழலுக்கு எதிரான அறக்கட்டளை’க்கு ரஷ்ய மக்களிடையே ஆதரவும் அதிகமானது.
ரஷ்யாவின் உயர் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட ஊழல்களை ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தி வந்தார் நவால்னி.
ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்திய நவால்னி மீதே ரஷ்யாவின் புடின் அரசு 2013-ம் ஆண்டு ஜூலை மாதத்தில், பணத்தை முறைகேடாகக் கையாடல் செய்ததாகக் கூறி வழக்குத் தொடுத்து, தண்டனை பெற்றுத்தந்தது. இருப்பினும், அந்த தண்டனை நிறைவேற்றப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் புடினின் செல்வாக்கு மக்களிடையே கூடவில்லை என்றாலும், எதிர்க்கட்சிகளில் துணிச்சல் மிக்க தலைவர்கள் யாரும் தோன்றிவிடாதபடி புடின் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
2018-ல் நடைபெறவிருந்த அதிபர் தேர்தலில் போட்டியிட தயாரான நவால்னி, 2016 டிசம்பரிலேயே பிரச்சாரத்தைத் தொடங்கி இருந்தார். 2014-ம் ஆண்டு நவால்னி மீது மேலும் ஒரு நிதி கையாடல் வழக்குப் தொடுக்கப்பட்டிருந்ததைக் காரணம் காட்டி, ரஷ்ய தேர்தல் ஆணையம் 2018-ம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட தடைவிதித்தது.
நாளுக்கு நாள் நவால்னிக்கு மக்களிடையேயும் ஊடகங்களிலும் ஆதரவு பெருகிக் கொண்டிருந்ததோடு, மேற்கத்திய நாடுகளிலும் அவரின் புகழ் பரவியது. அவர் மீதான புடினின் கோபமும் அதிகமானது.
இந்த சூழலில், 2020 ஆகஸ்டில் கடுமையான விஷ பாதிப்பு அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நவால்னிக்கு, நரம்புகள் பாதித்து செயலிழக்க வைக்கும் நோவிசோக் என்ற விஷம் அவர் மீது பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து, ஜெர்மனியின் பெர்லின் நகருக்குக் கொண்டுசெல்லப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டப் பிறகு அவர் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தார். தன்னைக் கொலை செய்ய நடத்தப்பட்ட முயற்சிக்கு, புடின் தான் காரணம் என்று நவால்னி வெளிப்படையாகக் குற்றம்சாட்டினார்.
2021 ஜனவரி 17-ல் நவால்னி மீண்டும் ரஷ்யாவுக்குத் திரும்பிய போது, பரோல் விதிமுறைகளை மீறிவிட்டார் என்று குற்றம்சாட்டி, அவரை விமான நிலையத்திலேயே வைத்துக் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தது ரஷ்ய அரசு. அதே ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி, ஏற்கெனவே ஒரு வழக்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்டனைக்கு உயிர் கொடுத்து, ‘விளாடிமிர் ஒப்ளாஸ்ட்’ என்ற இடத்தில் இரண்டரை ஆண்டு கட்டாய உடலுழைப்புச் சிறைவாசம் அவருக்கு விதிக்கப்பட்டது.
சிறையில் அடைக்கப்பட்ட நவால்னி கொடுமைப்படுத்தப்பட்டார். ‘மனசாட்சியின் கைதி’ என்று அவரை வர்ணித்த Amnesty இன்டெர்நேஷனல் அமைப்பு, நவால்னிக்கு அங்கீகாரம் அளித்தது. ஐரோப்பிய ஒன்றியம் அவருக்கு 2021-ல் சகரோவ் மனித உரிமைகள் விருது வழங்கியது.
மேலும் பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட நவால்னிக்கு 19 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத் தண்டனை வித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த சூழலில், அலெக்சேய் நவால்னி நேற்று(பிப்ரவரி 16, 2024) சிறையிலேயே மரணம் அடைந்தார் என்கிற செய்தி அவரின் ஆதரவாளர்கள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினருக்கும் மிகுந்த வேதனையாக அமைந்துள்ளது.
நவால்னி விடுதலை பெறுவாரா? விடுதலைப் பெற்று புடினின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மீண்டும் போராடுவாரா? புடின் ஆட்சியில் இருந்து தூக்கி எரியப்படுவாரா? என்றெல்லாம் எதிர்பார்த்திருந்த ரஷ்ய மக்களுக்கு அவரது மரணச் செய்தி பெரும் இடியாக அமைந்துள்ளது.