
இந்தியாவில் காஷ்மீர் தொடங்கி கேரளா-தமிழ்நாடு வரை பல மாநிங்களும் அப்பா-மகன் அரசியலை எதிர்கொண்டே வருகிறது. வாரிசு அரசியல் என காங்கிரசையும் மற்ற கட்சிகளையும் விமர்சிக்கும் பா.ஜ.க.விலும் இன்றைய அமைச்சர்களான பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான் யாதவ் போன்றவர்களும் அப்பா-மகன் அரசியல் வழி வந்தவர்கள்தான். இந்திய குடும்ப அமைப்பு போலவே அரசியல் அமைப்பும் நீடிக்கிறது. கட்சியில் எந்தளவுக்கு உயர்ந்த பதவிகளுக்கு வாரிசுகள் வந்தாலும், அவர்கள் மக்களால் அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே ஜனநாயக அரசியலில் நிலைத்து நிற்க முடியும்.
எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகியை அவர் போட்டியிட்ட தொகுதியிலேயே மக்கள் ஏற்கவில்லை. எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக திரையில் அவருடன் தொடர்ந்து பங்கேற்ற ஜெயலலிதாதான் மக்களிடம் வெற்றி பெற்றார். இதுதான் தேர்தல் ஜனநாயகம். எனினும், கட்சிக்குள் முதலில் தலைமைப் பதவிக்கு வந்துவிட்டால், மக்களிடம் ஏதோ ஒரு வகையில ஓட்டுகளை வாங்கி விட முயும் என்ற கணக்கில் வாரிசுகள் பலரும், பொதுவாழ்க்கையில் எந்த அனுபவமுமின்றி அரசியலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
2024ஆம் ஆண்டு போலவே 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க கூட்டணி 40க்கு 40 தொகுதிகளை வென்றது. அந்தக் கூட்டணியில் பா.ம.க. 6 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அந்தக் கட்சிக்கு டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவையில் கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மருத்துவத் துறைக்கான அமைச்சராகப் பதவியேற்றார் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகன் டாக்டர் அன்புமணி. அவர் பதவியேற்கும் போது லோக்சபா எம்.பி.யாகவும் இல்லை, ராஜ்யசபா எம்.பி.யாகவும் இல்லை. இரண்டு வகையிலும் எம்.பி.யாக இல்லாதவர்கள், பதவியேற்ற 6 மாதங்களுக்குள் எம்.பி.யாக வேண்டும். அதனால், அடுத்து வந்த ராஜ்யசபா தேர்தலில் தி.மு.க. எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் ராஜ்யசபா எம்.பி.யானார் அன்புமணி.
எம்.பி.யான பிறகு அமைச்சர் ஆவதைத்தான் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அமைச்சரான பிறகு எம்.பி.யான வாரிசு அரசியலின் அடையாளம் அன்புமணி. பா.ம.க.வின் தொடக்கநிலை நிர்வாகிகள் பலரையும் தாண்டி, தன் மகனை கட்சியின் முக்கிய இடத்திற்கு வலியத் திணித்தவர் டாக்டர் ராமதாஸ். அந்த ராமதாஸ்தான் தன்னுடைய மகனை கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, தானே தலைவராக நீடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டு, அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று பா.ம.க.வில் ஒரு தரப்பினரும், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினரும் வலியுறுத்தியநிலையில், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைந்ததற்கு காரணம், அன்புமணியின் விருப்பம்தான். அந்தக் கூட்டணியில் தர்மபுரி பா.ம.க. வேட்பாளராக அன்புமணியின் மனைவி போட்டியிட்டார். இந்தக் கூட்டணி தொடர்பாக டாக்டர் ராமதாஸ் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்ததாக செய்திகள் வெளியாகின. அப்பாவுக்கும் மகனுக்கும் இருந்த முரண்பாடு சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் கடைசி வாரத்தில் வெளிப்பட்டது.
மாநில இளைஞர் சங்கத் தலைவராக தன் மகள் வழிப் பேரனான முகுந்தன் பரசுராமனை ராமதாஸ் நியமித்தார். அதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். கட்சியில் சேர்ந்து 6 மாதமே ஆகும் நபருக்கு என்ன அனுபவம் இருக்கும் எனக் கேட்டார், எம்.பி.யாகாமலேயே கேபினட் அமைச்சரான அன்புமணி. அப்பாவாக டாக்டர் ராமதாஸ், அனுபவமும் எம்.பி. தகுதியும் இல்லாத அன்புமணிக்கு கேபினட் அமைச்சர் பதவி கிடைக்கச் செய்ததுபோல, தாத்தாவாக பேரனுக்கு கட்சியில் பொறுப்பைக் கொடுக்க முன்வந்திருக்கிறார். தான் உருவாக்கிய கட்சியில் மகன், மருமகள், பேரன் என அனைவருக்கும் சமபங்கு கொடுக்கலாம் என நினைத்தாரோ என்னவோ
பேரனுக்கு பதவி என்றதுமே அந்தப் பொதுக்குழு கூட்டத்திலேயே, ராமதாஸ் முன்பாக மைக்கைத் தூக்கிப்போட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினார் அன்புமணி. நான் சொன்னதுதான் கட்சியின் சாசனம் என்பதுபோல ராமதாஸ் அதற்கு ரியாக் ஷன் காட்டினார். அதன் தொடர்ச்சியாகத்தான், “இனி நான்தான் தலைவர்” என்று அறிவித்திருக்கிறார் ராமதாஸ்.
இந்தியாவில் எல்லா மாநிலங்களும் வாரிசு அரசியலைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றன. தகுதியுள்ளவர்களைத் தேர்ந்தெடுக்கவும், தகுதியில்லாதவர்களைப் புறக்கணிக்கவும் மக்களுக்கு அதிகாரம் உள்ளது. டாக்டர் ராமதாஸ் தனது பா.ம.க.வைத் தொடங்கிய காலத்தில், “நானோ என் குடும்பத்தினரோ கட்சிப் பதவிக்கோ, ஆட்சிப் பதவிக்கோ வரமாட்டோம். அப்படி வந்தால் என்னை சவுக்கால் அடியுங்கள்” என்றார்.
சவுக்கு தேவைப்படாமலேயே அப்பனும் மகனும் அடித்துக் கொள்கிறார்கள்.
5vx3a3