ஆஸ்திரேலியாவில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் உயிரிழந்த நிலையில் கொலையாளிகளான தந்தையும் மகனும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது
ஹனுக்கா கொண்டாட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு
ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் (Bondi Beach) நேற்று மாலை ஹனுக்கா எனும் யூத பண்டிகை கொண்டாட்டத்தின் போது 50 வயதான சஜித் அக்ரமும் அவரது 24 வயது மகன் நவீத் அக்ரமும் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 42 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து, இந்த சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு (Shooting) நடத்திய நவீத் அக்ரம் படுகாயமடைந்து மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பில் உள்ளார். அதே நேரத்தில் சஜித் அக்ரம் போலீசாரால் சுட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
குற்றவாளிகள் பாகிஸ்தானா ?
இந்நிலையில் ஆஸ்திரேலிய (Australia) அதிகாரிகளின் கூற்றுப்படி, புறநகர் சிட்னியில் வசிக்கும் சஜித், சட்டப்பூர்வமாக ஆறு துப்பாக்கிகளை வைத்திருந்தார் என்றும் இவர் ஒரு பொழுதுபோக்கு துப்பாக்கி கிளப்பைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கின்றனர். மேலும், அவர் பாகிஸ்தானியர் என்றும், 1998 இல் மாணவர் விசாவில் ஆஸ்திரேலியா வந்ததாகவும், அது 2001 இல் கூட்டாளர் விசாவிற்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அன்றிலிருந்து சஜித் குடியுரிமை விசாவில் இருந்து வருகிறார் என்றும் அதே நேரத்தில் நவீத் அக்ரம் 2001இல் இங்கு பிறந்த ஆஸ்திரேலிய குடிமகன் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.

இதனைத்தொடர்ந்து, தந்தையும் மகனும் தங்கியிருந்த குறுகிய கால வாடகை சொத்து என்று நம்பப்படும் கேம்ப்சி முகவரியை போலீசார் சோதனை செய்துள்ளனர். அப்பொழுது, போனிரிக்கில் உள்ள அவர்களது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து, அங்கு போலீசார் இருவரை கைது செய்து ஆறு துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளதாகவும், இந்த தாக்குதலை ஒரு பயங்கரவாத சம்பவம் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
